யாழ்.மாவட்டத்தில் நஞ்சருந்தித் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் கவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இவ்வாறு பாதிக்கப்பட்ட 328 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய விஷ ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஆறு மாதங்களில் சிகிச்சை பெற்றவர்களுடைய புள்ளி விபரங்களின் படி தற்கொலைக்கு முயற்சித்தவர்கள் மற்றும் உடலில் நஞ்சு ஊட்டப்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுடைய தொகை அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக மருந்துகளைத் தவறான முறையில் பயன்படுத்தல், வேறு ஒருவருடைய மருந்துகளைப் பயன்படுத்தல், வைத்தியர்களின் ஆலோசனைகள் இல்லாமல் மருந்துகள் பயன்படுத்தல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட 122 பேர் சிகிச்சைக்காக  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணையைத் தவறுதலாகப் பருகிய 50 பேரும், அலரி விதை உட்கொண்டும் , விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் கிருமி நாசினிகளைப் பருகியும் 156 பேர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் தொகை அதிகரித்து வருவதால் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இடவசதி குறைந்துள்ளது.

இதனால் ஏனைய நோயாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க முடியாத இக்கட்டான நிலைமை கூட ஏற்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share.
Leave A Reply

Exit mobile version