சேலம்: பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலைக்கு உயரதிகாரிகளே காரணம் என்று கீழக்கரை பெண் டி.எஸ்.பி. மகேஸ்வரி  குற்றஞ்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா (27). இவர், முகாம் அலுவலகத்தில் உள்ள தனது குடியிருப்பில் திடீரென நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூரை சேர்ந்த திருமணமாகாத நேர்மையான அதிகாரியான விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையை மட்டுமல்லாமல் தமிழகத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கி உள்ளது.

இந்நிலையில் விஷ்ணு பிரியாவின் தோழியும், கீழக்கரை டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி கூறும்போது, ”விஷ்ணு பிரியா காவல்துறையை மிகவும் நேசித்தார்.

அவர் பணம் எதுவும் வாங்காமல் செயல்பட்ட நேர்மையான அதிகாரி. மிகவும் திறமையான அதிகாரியும் ஆவார். தனிப்பட்ட முறையில் எனக்கு அவரை கடந்த 6 ஆண்டுகளாக தெரியும். நானும் அவரும் மிகவும் நெருங்கிய தோழிகள்.

v1தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எல்லாம் விஷ்ணு பிரியா கோழை கிடையாது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் என்னிடம்தான் கடைசியாக பேசினார்.

அவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு சென்றுவிட்டு வந்து என்னிடம் சுமார் மதியம் 2.48 மணியளவில் பேசினார்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென எஸ்.பி. லைனில் வருவதாக கூறிவிட்டு லைனை விஷ்ணு பிரியா துண்டித்துவிட்டார். அதன்பின் அவரது தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அவருக்கு வாழ்க்கையில் எந்தவித பிரச்னையும் இல்லை. போலீஸ் சொல்வதெல்லாம் சுத்த பொய். இதை சொல்வதால் என் வேலைகூட போகலாம். அதனால் எனக்கு பிரச்னை ஏதும் இல்லை.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவருக்கு எல்லா மட்டத்தில் இருந்தும் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். அவருடைய தற்கொலைக்கு எஸ்.பி., டி.ஐ.ஜி. போன்ற உயரதிகாரிகள்தான் முழுக்க முழுக்க காரணம்.

காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், (கோகுல்ராஜ் வழக்கில் தேடப்படும் குற்றவாளி) யுவராஜ் தரப்பில் இருந்தும் அவருக்கு அச்சுறுத்தல் இருந்துள்ளது.

குறிப்பாக காவல்துறையினர், குற்றவாளிகள் அல்லாத 3 பேர் மீது குண்டாஸ் போட சொல்லி விஷ்ணு பிரியாவை வற்புறுத்தி உள்ளனர்.

இப்படி செய்ய எனக்கு உடன்பாடு இல்லை என்று அவர் என்னிடமே பலமுறை சொல்லி இருக்கிறார்.

நானும் ஒரு டி.எஸ்.பி. என்கிற முறையில் இதுபோன்ற அச்சுறுத்தல்களை தினமும் சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன். குறிப்பாக, காவல்துறையில் பெண்களுக்கு இதுமாதிரியான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருகிறது.

விஷ்ணு பிரியா எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், ‘போலீஸ் வேலையை நான் உயிராக நினைக்கிறேன். ஆனால் அதற்கு நான் தகுதியானவள் இல்லை’ என்பதுபோல் எழுதி இருக்கிறார் என்று காவல்துறை சார்பில் சொல்கிறார்கள்.

ஆனால் அவர் முழுக்க முழுக்க தகுதியானவர்தான். அவரை இந்த நிலைக்கு தள்ளியவர்கள் உயரதிகாரிகள் தான்.

இது தொடர்பாக முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது தான் என்னைப்போன்ற பெண் காவலர்கள் பயமில்லாமல் பணியாற்ற முடியும். மேலும் இதுபோன்ற உயிரிழப்புக்களை தடுக்கவும் முடியும்” என்றார் ஆவேசமாக.

முன்னதாக, கோகுல்ராஜ் வழக்கில் தேடப்படும் குற்றவாளியான  யுவராஜின் உறவினர் என நம்பப்படும்  கோமதி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கோகுல் ராஜ் கொலை வழக்கு  விசாரணை பற்றிய  போலீசாரின் வெளியிட முடியாத ஆவணங்களை நாமக்கல் ஏ.டி.எஸ்.பி.யிடம் கேட்டுள்ளார்.

இதையடுத்து ஏ.டி.எஸ்.பி.,  கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை பற்றி கோமதி கேட்கும் தகவல்களை உடனடியாக கொடுக்குமாறு திருச்செங்கோடு டி.எஸ்.பி க்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இந்நிலையில்தான் டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

– எம்.புண்ணியமூர்த்தி


அம்மா ஐ லவ் யூ… தற்கொலைக்கு முன் உருகிய விஷ்ணு பிரியா

திருசெங்கோடு: அப்பா… அம்மாவைத் திட்டாதீங்கப்பா… அம்மா… ஐ லவ் யூ… நான் எங்க இருந்தாலும் உங்களை பார்த்துக்கிட்டுதான் இருப்பேன்… உங்களோட பேசிட்டுதான் இருப்பேன் என்று தனது மரணத்திற்கு முன்னர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
கடலூர் மாவட்டம், கோண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரியா 27. இவரது தந்தை ரவி காவல்துறையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தாய் கலைச்செல்வி வங்கிப் பணியில் இருந்து அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றவர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த் துறையில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2014-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, சிவகங்கையில் பயிற்சி முடித்து கடந்த பிப்ரவரி மாதம், 1-ம் தேதி திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளராக கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி பொறுப்பேற்றார்.
இளம் டி.எஸ்.பி.யாக தனது பணியைத் துவக்கிய விஷ்ணு பிரியா, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பல பிரச்னைகளை சுமுகமான தீர்வுகளை கண்டுள்ளார்.
திருச்செங்கோட்டில் போக்குவரத்து உதவி ஆய்வாளரால் ஆசிரியர் தாக்கப்பட்ட பிரச்னை தொடர்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு பிற்பகல் 3 மணி அளவில் தனது அலுவலகத்தில் உள்ள குடியிருப்புக்கு டிஎஸ்பி விஷ்ணுபிரியா சென்றுள்ளார்.
மாலை 6 மணிக்குப் பிறகு, அறையின் கதவு திறக்கப்படவில்லை இதனையடுத்து முகாம் அலுவலகத்தில் இருந்த போலீஸார், டி.எஸ்.பி. தங்கியிருந்த குடியிருப்பின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, விஷ்ணு பிரியா தனது சுடிதார் துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது.
தப்போது, அவரது தற்கொலைக்கு காவல்துறை உயரதிகாரிகளே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா பெற்றோருக்கு எழுதிய உருக்கமான கடிதம் வெளியிடப்பட்டது.
சேலம் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் 9 பக்க கடிதத்தை வெளியிட்டுள்ளார். அப்பா, அம்மா உள்ளிட்ட உறவினர்களுக்கு தனது மனதில் உள்ளதை ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதியுள்ளார்.
அம்மா நான் பிரியாம்மா… ஐ.லவ்.யூம்மா… ஐ மிஸ் யூம்மா என்று தொடங்குகிறது இந்த கடிதம். உருகி உருகி தனது பாசத்தை கொட்டியுள்ளார் விஷ்ணு பிரியா.
அப்பா அம்மாவை திட்டாதீங்க அப்பா… இது என்னோட முடிவுதான். எனக்கு அப்புறம் எல்லாத்தையும் திவ்யாவுக்கு கொடுங்கப்பா.
என்னால முடியல சாரிப்பா…அம்மா ஐ லவ் யூ… ஐ மிஸ் யூ… நான் எங்க இருந்தாலும் உங்களை பாத்துக்கிட்டே இருப்பேன்.. உங்க கூட பேசிட்டே இருப்பேன்.
நான் இறந்ததுக்கு அப்புறம் என் உடம்பை பிரச்சனை பண்ணாம என் பெற்றோர் கிட்ட கொடுங்க. காவல் துறை பணியை தெய்வத்துக்கு இணையாகக் கருதினேன்.
ஆனால், எனக்குதான் தகுதியில்லை. என் உடலை பரிசோதனை செய்யாமல் பெற்றோரிடம் ஒப்படைக்கவேண்டும். கோகுல்ராஜ் கொலை வழக்கையும் தன் தற்கொலையையும் தொடர்புபடுத்தவேண்டாம்.
இது என்னோட தனிப்பட்ட முடிவு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமது பெற்றோர்களை யாரும் துன்புறுத்த வேண்டாம் எனவும் தனது மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்று டிஎஸ்பி விஷ்ணுபிரியா தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

விஷ்ணு பிரியாவின் தற்கொலையும், அவர் எழுதியுள்ள கடிதமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version