விசாகப்பட்டினம்: ஆந்திராவில் உள்ள விசாகபட்டினத்தில் பெற்றோர் கண்ணெதிரிலேயே 2 வயது குழந்தையை தெருநாய்கள் கடித்து குதறி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், விசாகபட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருபவரின் 2 வயது குழந்தை சிவா கேசவ். ஆர்.கே. பீச் ரோட்டில் இந்த அடுக்குமாடி குடியிருப்புள்ளது.
குழந்தை சிவா கேசவ் தற்போதுதான் நடக்கத் தொடங்கியிருந்தான். எனவே மிகவும் துருதுருவென அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டிருப்பான்.
இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைவரின் கவனைத்தையும் ஈர்த்த குழந்தையாக இருந்தான்.
நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிவாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
பதறியடித்துக் கொண்டு பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் அங்கு சென்று பார்த்த போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுமார் 5, 6 தெரு நாய்கள் குழந்தை சிவாவை கடித்து இழுத்துக் கொண்டு சென்றது. குழந்தை வலி தாங்க முடியாமல் அலறினான். இதை கண்ட பெற்றோரும், மற்றவர்களும் அதிர்ச்சியில் நாய்களை விரட்ட முயன்றனர்.
கற்களை வீசி எறிந்தனர். ஆனால் பெற்றொர் கண்ணெதிரிலேயே கர்ண கொடூரமாக குழந்தையை கடித்து குதறி தரதரவென சில அடி தூரத்திற்கு இழுத்து சென்றன.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு நாயிடம் இருந்து குழந்தையை மீட்டு ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். குழந்தையின் உடலில் சுமார் 200க்கும் அதிகமான நாய்க்கடி காயங்கள் இருந்ததாக அவனை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதே போல் கடப்பா மாவட்டத்திலும் தெரு நாய்கள் தாக்கியதில் 2 குழந்தைகள் காயமடைந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் குண்டூரில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 5 வயது குழந்தை ஒன்று உயிரிழந்தது. ஆந்திராவில் உள்ள குண்டூர், கிருஷ்ணா, நெல்லூர், கர்னூல், கடப்பா, அனந்தப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான தெருநாய்கள் தொல்லை இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மக்கள் பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகத்தினர் தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த தவறியதன் காரணமாகவே இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.