சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் மூலம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விபரித்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர்,

குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க உள்நாட்டு விசாரணைகளே முன்னெடுக்கப்படும். அதில் அனைத்துலகத் தலையீடுகள் இருக்காது.

ஊடகங்கள் தான் கலப்பு நீதிமன்றம் என்கின்றன. ஆனால், கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படாது.

சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது.

இதுபற்றி ஜெனிவாவில் கலந்துரையாடப்படுகிறது. அதுபற்றி கதைக்க நான் விரும்பவில்லை.

ஆனால் சிறிலங்காவின் இணக்கப்பாட்டுடன் அமெரிக்கா தீர்மானத்தைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்.

இந்த தீர்மானத்துக்கு அனைத்து நாடுகளினதும் ஆதரவை அமெரிக்கா பெற வேண்டும்.

இதுபற்றி அண்மையில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புடன் நானும், வெளிவிவகார அமைசச்சர் மங்கள சமரவீரவும் கலந்துரையாடியிருக்கிறோம்.

சிறிலங்காவுக்கு ஆதரவான தீர்மானத்துக்கு ரஷ்யாவும், சீனாவும் ஆதரவு வழங்கும் என்று நம்புகிறோம்.

இந்தியாவுடனும் இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளேன். அவர்களின் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஐ.நா விசாரணை அறிககை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்…

பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்­துடன் அனை­வரும் இணங்கக் கூடிய தீர்­வொன்றை தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கு­வதே எமது கொள்­கை­யாகும்.

கடந்த காலங்­களில் இடம்பெற்ற தவ­று­களை மீண்டும் செய்­வ­தற்கு நாம் தயா­ரில்லை என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார்.

அமெ­ரிக்கா, இந்­தியா, சீனா உட்­பட பல நாடு­க­ளு டன் இணைந்து இலங்­கைக்கு இசை­வான இணக்­கப்­பா­டான பிரே­ர­ணையை ஐ.நா. மனித உரிமை பேர­வையில் முன்­வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகளை அரசு முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் பிர­தமர் தெரி­வித்தார்.

பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையே ஒரே தீர்­வாகும். அதனை நாங்கள் முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பாராளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஐ.நா.மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் இலங்கை தொடர்­பான அறிக்கை தொடர்பில் விசேட உரை­யொன்றை நிகழ்த்தும்போதே பிர­தமர் இவ்­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

அண்­மையில் நான் இந்­தி­யா­வுக்கு விஜ­யத்தை மேற்­கொண்­ட­தோடு பிர­தமர் மோடி­யுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தினேன்.

இதன்போது ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு ஆத­ரவு வழங்­கு­வது தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டது.

அதே­போன்று அமெ­ரிக்கா, சீனா, ரஷ்யா உட்­பட பல்­வேறு நாடு­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

ஐ.நா. மனித உரிமை பேர­வையில் எமக்கு ஆத­ரவை பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே இவ்­வா­றான பேச்சுவார்த்தைகளை நடத்­தி­யுள்ளோம். அந்­நா­டுகள் எமக்கு ஆத­ரவு வழங்கத் தயா­ரா­கவே உள்­ளன.

அதே­போன்று இதற்கு முன்­ப­தாக ஐ.நா.மனித உரிமை பேர­வையில் எமக்கு எதி­ரான பிரே­ரணை கொண்டு வந்தபோது எமக்கு ஆத­ரவு வழங்­கிய நாடு­களும் தமது ஆத­ரவை இம்­மு­றையும் எமக்கு வழங்கும்.

இவ்­வி­டயம் தொடர்­பான விரி­வான விப­ரங்­களை இத்­த­ரு­ணத்தில் நான் வெளி­யி­ட­மாட்டேன்.

இது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெளி­வு­ப­டுத்­தியே எமது நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

அடுத்த பாரா­ளு­மன்றக் கூட்டத் தொடரின் போது அமெ­ரிக்­காவின் பிரே­ரணை என்­ன­வென்­பதை தெரிந்து கொள்ள முடியும்.

அத்­தோடு இத­னோ­டி­ணைந்த ஏனைய அறிக்­கை­க­ளையும் கவ­னத்­தி­லெ­டுத்து சபா­நா­ய­க­ருடன் கலந்தாலோசித்து இவ்­வி­டயம் தொடர்­பாக விவா­த­மொன்றை நடத்த முடியும்.

எம்­மிடம் மறைப்­ப­தற்கு எதுவும் இல்லை. அனைத்­தையும் வெளிப்­படைத் தன்­மை­யா­கவே முன்­னெ­டுப்போம். பாரா­ளு­மன்­றத்­திற்கும் அனைத்­தையும் தெரி­விப்போம்.

தமிழ் மொழி புறக்­க­ணிப்பு, உயர் கல்வி வாய்ப்­புக்கள் வரை­ய­றுக்­கப்­பட்­டதன் கார­ண­மா­கவே தமிழர் பிரச்­சினை உரு­வா­னது.

பயங்­க­ர­வா­தத்தின் ஆரம்­பமும் 1983 இன­வாதக் கல­வ­ரமும் போன்ற துர்ப்­பாக்­கிய சம்­ப­வங்­களால் விடு­தலைப் புலிகள் அமைப்பு வியா­பித்­தது.

1977 இல் பாரா­ளு­மன்­றத்தில் எம்­மோ­டி­ருந்த ஜனா­தி­பதி பிரே­ம­தாஸ உட்­பட ஐக்­கிய தேசிய கட்­சியின் பல தலை­வர்கள் மற்றும் வட மாகா­ணத்தின் ஐ.தே.க அமைப்­பா­ளர்கள் என பலர் விடு­தலைப் புலி­களால் கொலை செய்­யப்­பட்­டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் சீ.வி. குண­ரத்ன கொல்­லப்­பட்டார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நிமால் சிறி­பால டி சில்வா , சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகியோர் புலி­களின் தாக்­கு­த­லி­லி­ருந்து உயிரை பாது­காத்துக் கொண்­டனர்.

இந்­தி­யாவில் ராஜீவ் காந்தி கொலை செய்­யப்­பட்டார். அது மட்­டு­மல்­லாது புலி­களால் தமிழ் தலை­வர்­களும் கொலை செய்­யப்­பட்­டனர். தமிழ்த் தலைவர் பரம்­ப­ரையே அழிக்­கப்­பட்­டது.

இதன் பிர­தி­ப­லன்­களை இன்று நாம் காண்­கிறோம். அர­சியல் தீர்­வுக்கு எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டதால் தமிழ் மக்கள் வரை­ய­றுக்­கப்­பட்ட தீர்வை பெற்றுக் கொள்­வதும் தடுக்­கப்­பட்­டது.

விடு­தலைப் புலிகள் அமைப்பு கொழும்­புக்கு எதி­ராக மட்­டு­மல்ல, யாழ்ப்­பா­ணத்­திற்கு எதி­ரா­கவும் செயற்­பட்­டது. எனவே இவ்­வா­றா­ன­தொரு யுகம் மீள ஏற்­பட நாம் இட­ம­ளிக்­க­மாட்டோம்.

கடந்த காலத்தில் இடம்­பெற்ற தவ­று­களை மீண்டும் செய்­வ­தற்கு நாம் தயா­ரில்லை.

அனைத்து தரப்­பி­ன­ருட னும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி இணக்­கப்­பாட்டைக் கண்டு பிரச்­சி­னையை தீர்ப்­பதே எமது நோக்­க­மாகும்.

அதை விடுத்து இன­வாதம் மத­வா­தத்தை தூண்டி விட்டு இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களைப் பெற்றுக் கொள்ள முடி­யாது.

இப் பிரச்­சி­னையை எமது எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு விட்டுச் செல்ல நாம் தயா­ரில்லை.

இப் பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்­துடன் அனைத்து தரப்­பி­னரும் இணங்கக் கூடிய தீர்வை பெற்றுக் கொள்­வதே எமது நோக்­க­மாகும்.

இது தான் எமது எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு வழங்கும் சிறப்­பான பரி­சாகும்.

அனைத்து மக்­களும் எந்த வித­மான நெருக்­க­டியும் இல்­லாமல் வசிப்­ப­தற்­கான நாட்டை உரு­வாக்­கு­வது எமது கடப்­பா­டாகும்.

எந்­த­வொரு இனக் குழு­மத்­திற்கும் அநீதி ஏற்­ப­டாத விதத்­தி­லான சமூ­க­மொன்று கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் ஐ.நா. செய­லாளர் நாயகம் இலங்கை வந்தார்.

அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அதன் போது பல உறு­தி­மொ­ழி­களை வழங்­கினார்.

அந்த உறு­தி­மொ­ழிகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. சர்­வ­தேச அழுத்­தங்கள் அதி­க­ரித்­த­போது அது தொடர்பில் நிலை­யான தீர்­வு­களை மேற்­கொள்­வ­தாக விடுத்து கடந்த ஆட்­சி­யா­ளர்கள் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வுக்கு மேல­தி­க­மாக உத­லா­கம பர­ண­கம ஆணைக்­கு­ழுக்­களை நிய­மித்­தனர்.

இறு­தியில் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு மட்­டு­மல்ல, நாட்­டுக்­குள்­ளி­ருந்த தரப்­பி­ன­ருக்கு எவ்­வி­த­மான திருப்தியளிக்கும் பிர­தி­ப­லன்கள் கிடைக்­க­வில்லை.

மஹிந்த ராஜபக் ஷவின் அர­சினால் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு நாடு தள்­ளப்­பட்­டி­ருந்த சூழ்­நி­லை­யி­லேயே ஜனவரி 8 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்சி உரு­வா­னது.

இதன் பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் வெளி­யி­டப்­ப­ட­வி­ருந்த ஐ.நா. அறிக்கை புதிய ஆட்­சி­யா­ளர்­களின் வேண்டு­கோ­ளுக்கு இணங்க செப்­டெம்பர் வரை ஐ.நா. பிற்­போ­டப்­பட்­டது.

இக்­கால அவ­கா­சத்­திற்குள் 19 ஆவது திருத்தம் நிறை­வேற்­றப்­பட்­டது. சுயா­தீன குழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு ஜனநா­யக நிறு­வ­னங்கள் பலப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

தற்­போ­தைய தேசிய இணக்­கப்­பாட்டு அர­சாங்கம் மக்­க­ளுக்கு பொறுப்புக் கூறும் அர­சாக அனைத்து மக்­க­ளுக்கும் சரி­யா­னதை செய்­வதை கொள்­கை­யாக கொண்டு செயற்­படும்.

சர்­வ­தே­சத்­திற்கு வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­வதை நோக்­க­மாகக் கொண்டு மட்டும் இது மேற்கொள்­ளப்­ப­ட­வில்லை.

அனைத்து மக்­க­ளுக்கும் அனைத்து இனக் குழு­மங்­க­ளுக்கும் நீதியை நியா­யத்தை பெற்றுக் கொடுப்­பது எமது நோக்­க­மாகும்.

பயங்­க­ர­வாதம் மீண்டும் ஏற்­ப­டாத வண்­ணமும் அதற்­கான கார­ணி­களை இல்­லா­தொ­ழிப்­பதும் நீண்­ட­கா­ல­மாக துன்­பத்தில் வாழும் மக்­க­ளுக்கு நிலை­யான சமா­தா­னத்தை பெற்றுக் கொடுப்­பதும் எமது இலக்­காகும்.இதற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவோம்.

உண்­மையை கண்­ட­றிதல், நியா­யத்தை நிறை­வேற்­றுதல் மீண்டும் மோதல்கள் ஏற்­ப­டு­வதை தவிர்த்தல் உட்­பட பூர­ணத்­து­வ­மான மீள் கட்­டி­யெ­ழுப்­புதல் என்­பன நல்­லி­ணக்­கத்­திற்குள் உள்­ளீர்க்­கப்­பட வேண்டும்.

அது போன்று கடந்த காலங்­களில் ஏற்­பட்ட துன்­ப­க­ர­மான நட­வ­டிக்­கைகள் மீண்டும் ஏற்­ப­டு­வதை தடுத்தல் வேண்டும். நாட்டின் சிறு­பான்மை இனத்­த­வரின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

தீர்வை பெற்றுக் கொடுக்கும் விதத்­தி­லான அர­சியல் தீர்வை நோக்கி நகர வேண்டும்.

ஜனா­தி­ப­தி­யாக எமது அர­சாங்­கமும் பேச்­சு­வார்த்­தைகள் இணக்­கப்­பாடு மூலம் இதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுத்து வரு­கி­றது.

இதற்­காக ஏற்­ப­டுத்திக் கொள்ளும் இணக்­கப்­பாட்­டிற்­காக அனை­வ­ரது ஒத்­து­ழைப்பும் அவ­சி­ய­மாகும்.

சுதந்­தி­ர­மான தேசிய நீதி­மன்றப் பொறி­முறை ஊடாக பொறுப்புக் கூறல் தொடர்­பாக நட­வ­டிக்­கைகள் மேற்கொள்­ளப்­படும் என ஜனா­தி­பதித் தேர்­தலின் போது மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­மொழி வழங்­கினார்.

சட்­டத்தின் இறை­யாண்மை மற்றும் அனைத்து இனக் குழு­மங்­க­ளி­டையே நம்­பிக்­கையை கட்டியெழுப்புவதற்கான ‘பொறுப்புக் கூறல்”­என்­பது அத்­தி­யா­வ­சி­ய­மான அடிப்­படைக் கார­ணி­யாகும்.

இந்த வேலைத் திட்­டத்­திற்கு நீதித்­துறை மற்றும் நிர்­வாக ரீதி­யி­லான சீர்­தி­ருத்தம் அவ­சி­ய­மா­ன­தாகும்.

நீண்­ட­கால வன்­மு­றைகள் மற்றும் பயங்­க­ர­வா­தத்தால் எமது நாட்டின் பொறுப்புக் கூறல் மர­ணித்துக் கொண்டிருந்­தது.

இக்­க­லா­சா­ரத்­திற்குள் சட்­டத்தின் இறை­யாண்­மையை மீண்டும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் நல்­லாட்­சி­யையும் அனைத்து மக்­களின் உரி­மை­க­ளையும் பாது­காப்­பது அவ­சி­ய­மா­ன­தாகும்.

மனித உரிமை மீற­லுக்கு மட்­டு­மல்ல; ஊழல் மோசடி உட்­பட பல்­வே­று­பட்ட குற்­றங்கள் தொடர்­பாக தண்­டனை பெறாது தப்­பித்துக் கொள்­வதை தடுப்­பது சட்­டத்தின் இறை­யாண்­மையை மீள நிலை நிறுத்­து­வது. மற்றும் பொறுப்புக் கூற­லுக்­கான விட­யங்கள் அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­வை­யாகும்.

அது மட்­டு­மல்­லாது எமது நாட்டின் நீண்­ட­கால அபி­வி­ருத்தி மற்றும் எதிர்­கால சந்­த­தி­யி­னரின் எதிர்­பார்ப்புக்களை நிறை­வேற்றி மக்கள் மத்­தியில் சமா­தா­னத்தின் உணர்­வு­களை ஏற்­ப­டுத்த வேண்­டி­யது அவசியமா­ன­தாகும்.

தென்­னா­பி­ரிக்­காவின் தகு­தி­வாய்ந்த அதி­கா­ரி­களின் ஆலோ­ச­னை­க­ளுக்­க­மைய உண்மை, நேர்மை, தேசிய மீளிணக்கம் மற்றும் கடந்த காலத்தில் இடம்­பெற்ற பிழைகள் மீள ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்­கான ஆணைக்­குழு ஒன்று ஏற்­ப­டுத்­தப்­படும்.

இதில் அனைத்து மதத் தலை­வர்கள் அடங்­கிய கருணைச் சபை மற்றும் ஆணை­யா­ளர்கள் இணைந்த வியூ­கத்­து­ட­னான அமைப்பு உரு­வாக்­கப்­படும். இச் சபை ஊடாக அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உண்மையை கண்டறிந்து தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும்.

சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் விசேடத்துவ ஆலோசனைகள் மற்றும் நிபுணத்துவத்தை பெற்றுக் கொண்டு சர்வதேச ரீதியிலான ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைக்கு ஏற்ப குடும்பங்களின் தகவல் அறியும் உரிமையை உறுதிபடுத்தும் அடிப்படையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட அலுவலகமொன்று பாராளுமன்றம் ஊடாக நிறுவப்படும்.

நியாயத்தை பெற்றுக் கொடுப்பதற்காக விசேட சட்டத்தரணிகள் அடங்கிய அரசியலமைப்பு ரீதியான குழு அமைக்கப்படும்.

நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஏனைய குழுக்கள் மூலம் சேதங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் மேற்கொண்ட ஆணைக்குழு ஒத்துழைப்பை வழங்கும். பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காக பரந்தளவிலான பொறிமுறை ஏற்படுத்தப்படும்.

இவையனைத்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் தேசிய ரீதியில் ஏற்படுத்தப்பட்ட பொறிமுறையுடனே இடம்பெறும். எந்தவொரு சர்வதேச நிறுவனத்தினதோ அல்லது நபரினதோ பொறிமுறையாக அமையாது என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version