வங்கிக்கொள்ளையால் பிரபலமானதால் அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ், தாவூத்தின் முழுப் பின்னணி குறித்து விசாரித்து வந்தது.

வங்கிக் கொள்ளைதான் அவனுக்கு முதல் கொள்ளை என்று நினைத்து வந்த போலீஸ் அதிர்ந்து போனது. தாவூத் தனது பள்ளிப்பருவத்தில் இருந்தே பல்வேறு திருட்டு சம்பவங்களை செய்து வந்தது தெரிய வந்தது.

கிராப்ஃபோர்டு மார்கெட்டில் காலை முதல் மாலை வரை நன்றாக வியாபாரம் நடக்கும் கடைகளை கவனித்து வந்தது ஒரு குழு.

அந்தக்குழுவில் அனைவருமே 14 வயதுக்கு உட்பட்டவர்கள். மார்க்கெட்டை அடுத்துள்ள சந்துகளில் பகல் பொழுதில் கிரிக்கெட் விளையாடி வந்தனர்.

அதில் தாவூத்தும் ஒருவன். தாவூத் தான் அந்தக் குருப்பின் தலைவன். கிரிக்கெட் பேட், பந்து உள்பட பல்வேறு பொருட்களை வாங்கி கொடுப்பான். அதனால் தாவுத் அந்தக் குழுவின் பிரதான தலைவன்.

பலசரக்கு கடை வைத்திருந்த கடை முதலாளி, அன்று வசூலான 2,500 ரூபாய் பணத்தை ஒரு பையில் பத்திரப்படுத்திக்கொண்டு, மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

திடீரென்று அவரை மடக்கிய நான்கு நபர்கள், அவரை தாக்கிவிட்டு அவரின் பணத்தை பறித்துக்கொண்டு ஓடி விட்டனர்.

இரவு நேரம் என்பதால் தாக்கியவர்கள் யார் என்று தனக்கு தெரியவில்லை என்று போலீஸ்காரர்களிடம் விசாரணையில் சொன்னார்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் இன்னொரு வியாபாரியிடம் 5,000 ரூபாயை கொள்ளை அடித்துவிட்டு சென்றனர். போலீஸ் இந்த முறை விழித்துக்கொண்டு மார்க்கெட்டில் மூட்டை தூக்குபவர்கள், கூலி தொழிலாளர்கள் என்று பல்வேறு நபர்களை விசாரித்தனர்.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு மாதம் கழித்து மீண்டும் இதேபோல திருட்டு. இந்த முறை மார்க்கெட் வியாபார சங்கத்தலைவரிடம் 10,000 ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டது.

தொடர் வழிப்பறியால் மார்க்கெட் வியாபாரிகள் பெரும் பயத்தில் இருந்தனர். சங்கத்தின் செல்வாக்கை வைத்து, போலீஸ் உயர் அதிகாரிகளை பார்த்து தங்கள் குமுறல்களை கொட்டித்தீர்த்தனர்.

உடனடியாக சிறப்பு ரோந்துப்படை அமைக்கப்பட்டு, இரவு நேரம் கண்காணிக்கப்பட்டது. தொடர் வழிப்பறி சற்று குறைந்தது.

இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வங்கிக் கொள்ளையை பற்றி விசாரிக்கும்பொழுதுதான் தெரிந்தது, மார்க்கெட்டில் நடந்த வழிப்பறி எல்லாமே தாவூத்தும், அவனது நண்பர்களும் சேர்ந்து செய்தது என்று.

dawood2-01இந்த உண்மையை தாவூத்தின் கூட்டாளி ஒருவன் சொன்னபோது போலீஸ் அதிர்ந்து போய் விட்டது.

பல்வேறு சமயங்களில் இரவு நேரங்களில் தாவூத், இரவு ரோந்து போலீஸ்காரர்களிடம் சிக்கும் பொழுதெல்லாம் தனது தந்தை போலீஸ்காரர் என்று சொல்லிவிட்டு தப்பிவிடுவதும் தெரிய வந்தது. பல்வேறு போலீஸ்காரர்கள் நடந்த சம்பவங்களை ஞாபகப்படுத்தி உண்மை என்று நம்பினர்.

தாவூத் தாதா ஆன கதை

வேலூரில் இருந்து சென்னை சென்று குடிபுகுந்த முதலியார் குடும்ப வாரிசான வரதராஜன், தனது எட்டு வயதில் சென்னை போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்து வந்தார்.

அவரது குடும்பமும், வறுமை காரணமாக மும்பைக்கு குடி பெயர்ந்து, அங்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடையை வைத்து வாழ்ந்து வந்தது.

படிப்படியாக பல்வேறு நட்புகள் மூலம் வரதராஜ முதலியாரும் மும்பையில் கடத்தல் தொழிலுக்கு வந்தார். மஸ்தான் குரூப்பிற்கும், வரதராஜ முதலியார் குரூப்பிற்கும் இடையே மும்பையில் பெரும் போட்டி நிலவி வந்தது.

வரதராஜ முதலியாருக்கு, மும்பை தாராவியில் குடியிருந்த உழைக்கும் தமிழ் மக்களிடம் நல்ல பெயர் இருந்து வந்தது.

கடத்தல் தொழிலில் வரும் வருமானத்தின் பெரும்பகுதியை மக்களுக்காக பல்வேறு வகைகளில் உதவி செய்து வந்தார். அதனால் அவரை ஹீரோ போல பார்த்தனர் தாராவி பகுதி மக்கள்.

மக்களின் செல்வாக்கு இருந்ததால் மும்பையில் உள்ள துறைமுகம் முதல் டாமன் துறைமுகம் வரை கடல்வழிபாதைகளை நன்கு அறிந்து வைத்து இருந்தார் வரதராஜன்.

அதனால் டாமனில் பெரும் கடத்தல் தொழில் செய்து வந்த சுகுர் நாராயண பசிரா என்கிற குஜராத்திக்கு வரதராஜன், பெரும் தலைவலியை உருவெடுத்தார்.

வரதராஜ முதலியாரை மடக்க நினைத்த சுகுர் நாராயணன், மஸ்தானிடம் நல்ல தொடர்பை வைத்துக்கொண்டார்.

அதோடு இல்லாமல் இருவரும் தொழில் பார்ட்டனர் ஆனார்கள். இதனால் மும்பையில் அடிக்கடி அடிதடி, பல்வேறு கொலைகள் என்று நடந்து வந்தன. இந்த நேரத்தில் மஸ்தான் குரூப்பில் இருந்து வெளியான தாவூத், தனியாக கடத்தல் தொழில் செய்ய ஆரம்பித்தான்.

பலியான பத்திரிகையாளர்

1970-80களில் மும்பை, கடத்தல் தொழிலின் மிகப்பெரிய ராஜ்யமாக இருந்து வந்தது. உலக நாடுகள் பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்துதான் தடை செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

மும்பையில் இயங்கும் இன்னொரு இரவு உலகத்தை வெளியே வெளிச்சம் போட்டுக் காட்ட பல்வேறு பத்திரிகைகள் தயங்கின.

உயிர் பயம் இருந்ததால் தயங்கினர், பல்வேறு இதழின் ஆசிரியர்கள். முகமது இக்பால் நாடிக் என்கிற 26 வயது பத்திரிகையாளர், 1970களின் தொடக்கத்தில் சொந்தமாக பத்திரிகை வைத்து நடத்தினார்.

‘தி கான்பிடன்ட்’ என்கிற பெயரில் உருது மொழியில், உள்ளுரில் பத்திரிகை நடத்தி வந்தார். கிரைம் ரிப்போர்ட் செய்வதில் எக்ஸ்பர்ட் ஆன முகமதுவின் ரிப்போர்ட் மும்பையை உலுக்கியது.

‘மும்பை கடல்பகுதிகள் அனைத்தும் கடத்தல் தொழில்களின் சுரங்கமாக இருக்கிறது. இதற்கு பல்வேறு துறை அரசு அதிகாரிகள் துணை போகிறார்கள்.

இரவில் கடல் கண்காணிப்பில் இருக்க வேண்டிய அதிகாரிகள் சொகுசு ஹோட்டல்களில், பெண்களுடன் இரவை கழிக்கின்றனர்’ என்று மும்பையில் நடக்கும் இரவு சம்பவங்களை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டினார்.

இதனால் அரசு உடனடியாக இரண்டு, மூன்று என்கவுன்டர்களை நடத்தியது. அதில் தாவூத்தின் குரூப்பில் உள்ள ஒருவன் பலியானான். இருந்தாலும், மும்பையில் கடத்தல் தொழில் நிற்பதாக இல்லை. தனியாக இருந்தவர்கள் மாறாக ஒன்று சேர்ந்தனர்.

முகமதுவின் எழுத்துக்கள் பல்வேறு பத்திரிகையாளர்களுக்கு முன்மாதிரியாக இருந்தது. அதற்கு பிறகு பல்வேறு பத்திரிகைகள் எழுதித்தள்ளின.

இதனால் கடத்தல் தொழில் செய்யும் தலைகள் எல்லாம் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஆறு மாதம் கழித்து வெளியே ஜாமீனில் வந்தார்கள் கடத்தல் டான்கள்.

வீட்டில் தனது மனைவியுடன் இருந்த முகமதுவை, ‘தாவூத் அழைக்கிறார்’ என்று தாவூத்தின் ஆட்கள் நள்ளிரவில் வந்து அழைத்தனர்.

‘இரவு நேரம் என்பதால் இப்பொழுது வரமுடியாது, காலை வருகிறேன்’ என்று சொன்னார் முகமது. ‘உன் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார் தாவூத்.

நீ இப்பொழுது வரவில்லை என்றால், அவர் இங்கு வருவார். உனக்கு புது மனைவி இருக்கிறார். அவருக்கு வயது குறைவு, அழகு தாராளம்’ என்று மிரட்டினார்கள்.

வேறு வழியின்றி அவர்களுடன் சென்றார் முகமது. முகமதுவின் காரில் அவர் காரை ஓட்டிச்செல்ல, அவருடன் இரண்டு நபர்கள் ஏறிக்கொண்டனர். என்ன நடக்கப்போகிறது என்கிற விபரம் ஏதும் தெரியாமல் இருந்தார் முகமதுவின் 22 வயதான மனைவி சஹீதா.

கார், நகர்ப்புறத்தின் ஒரு பெட்ரோல் பங்கில் நின்றது. அங்கிருந்து இறங்கி தப்பி ஓட நினைத்த முகமது இக்பாலை தாவூத்தின் நண்பர்கள் ஆயூப்பும், சையதுவும் ஓங்கி எட்டி உதைத்தனர்.

அதை சற்றும் எதிர்பாராத முகமது கீழே விழவும், மாறி மாறி கொடுமையான ஆயுதங்களால் தாக்கினார்கள். ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து போனார் முகமது.

‘இந்த கைதானே எழுதுகிறது…?’ என்று கேட்டபடியே முகமதுவின் வலது கையை பிடித்து கரும்பை உடைப்பது போல உடைத்தான் சையது. ‘உன்னால் எங்களுக்கு தொழில் நஷ்டம், நண்பர்கள் போலீசின் துப்பாக்கிக்கு பலி..!’ என்று சொல்லிக்கொண்டே முகத்தில் தனது ஷூ காலால் மிதித்தான் ஆயூப்.

மிருகம் வேட்டையாடுவது போல வேட்டையாடினார்கள் முகமதுவை. தட்டிக்கேட்கவும், தடுக்கவும் யாருமில்லை. உடம்பெல்லாம் ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தததும் மயங்கி சரிந்தார் முகமது.

அதோடு இறந்து விட்டான் என்று நினைத்து, மாஹிம் பகுதியை ஒட்டியுள்ள ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் காரில் வைத்து தூக்கி வீசி எறிந்து விட்டு, முகமதுவின் முகத்தில் சிறுநீரை கழித்து விட்டு சென்றனர்.

நள்ளிரவில் நடந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் போனது. மறுநாள் நண்பகலில் முகமது கண்விழித்த பொழுது உடம்பெல்லாம் வலி.

அதோடு ஈயும் எறும்பும் ஒட்டிக்கொண்டு தொந்தரவு செய்வதை கூட தடுக்க முடியாத நிலைமையில் இருந்தார். அந்த நேரம் பார்த்து அந்தப்பக்கம் வந்த வழிப்போக்கன் ஒருவன், முகமதுவை பார்த்துவிட்டு அந்தப்பகுதியில் இருந்த ஒரு காவலரை அழைத்து வந்தான்.

உடனடியாக முகமதுவை மீட்டு ஜெஜெ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நடந்த சம்பவங்களை போலீஸ் அதிகாரிகளிடம் வாக்கு மூலமாக சொன்னார். இரண்டு நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி இறந்துபோனார் முகமது இக்பால்.

இந்த சம்பவம் மும்பையை உலுக்கியது. பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் சோகமும், கோபமும் உண்டானது. இந்த சம்பவத்தை சாதாரணமாக விடக்கூடாது என்று சம்பவத்துக்கு காரணமான தாவூத்தினை கட்டம் கட்டி எழுதினார்கள். இந்த சம்பவத்தினால் இந்தியா முழுவதும் பிரபலமானான் தாவூத்.

க்ரைம் தொடர்-2 –

அடுத்து நடந்தது என்ன?

தோட்டாக்கள் பாயும்…

சண்.சரவணக்குமார்

தாதா தாவூத் இப்ராஹிம்: Most wanted person (க்ரைம் தொடர்-1)

Share.
Leave A Reply

Exit mobile version