நியூயார்க்: தன்னை உறவுக்கு வற்புறுத்தியதாக பணிப்பெண் அளித்த புகாரில், சவுதி இளவரசரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், செல்வந்தர்கள் அதிகமாக வாழும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில், சவுதி இளவரசர்களில் ஒருவரான மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் (28) என்பவருக்கு சொந்தமான பிரமாண்டமான மாளிகை உள்ளது.
இந்த மாளிகையில், அமெரிக்காவுக்கு வரும் வேளைகளில் சவுதி இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் தங்குவது வழக்கம்.
இந்திய மதிப்புக்கு சுமார் 240 கோடி ரூபாய் மதிப்புள்ள, 22 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட இந்த மாளிகையில், பலத்த பாதுகாப்புடன் பிரமாண்டமான மதில் சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று பகல் சுமார் பன்னிரெண்டு மணியளவில் (உள்ளூர் நேரப்படி) இந்த மாளிகையின் சுமார் 8 அடி உயர மதில் சுவரை தாண்டி குதித்து ரத்தக் காயங்களுடன் தப்பிவந்த ஒரு இளம்பெண், தன்னுடன் உறவு வைத்துகொள்ளுமாறு இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் தன்னை வற்புறுத்தியதாக பெவர்லி ஹில்ஸ் போலீசாரிடம் பரபரப்பு புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சவுதி இளவரசரின் மாளிகைக்கு விரைந்து சென்று இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத்தை கைது செய்தனர்.
மேலும், அந்த மாளிகையில் கேளிக்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 20 பேரை அங்கிருந்து வெளியேற்றினர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, “கைது செய்யப்பட்ட இளவரசர் மீது, மேலும் நான்கு பெண்கள் இதே குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர்.
இதையடுத்து, இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் மீது இயற்கை நியதிக்கு மாறான வகையில் பெண்ணை உறவுக்கு வற்புறுத்திய குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இருப்பினும் 2 லட்சம் பவுண்டுகள் (இந்திய மதிப்புக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய்) சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தனர்.
இந்த புகாரை அளித்த பெண், இளவரசர் வீட்டில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படும் நிலையில், இந்த வழக்கில் அக்டோபர் 19 ஆம் தேதி இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று கூறப்படுகிறது.