‘ சேர்… நான் நடந்ததை சொல்கிறேன். அந்த வீட்டுக்குள் முன் கதவால்தான் சேர்… போனேன். சேயாவை அணைத்துக் கொண்டு வெளியேறினேன். இடைவழியே அவள் விழித்துக் கொண்டாள்.
அப்போது நான் அவளது மேல் உள்ளாடையினால் (பெனியன்) கழுத்தை நெருக்கினேன். அவள் அடங்கினாள். பின்னர் துஷ்பிரயோகம் செய்தேன்.
அதன் போது மீண்டும் எழுந்து கொண்டாள். சேர்… அதனால் அந்த பெனியனினால் அவள் கழுத்தை நன்றாக நெருக்கினேன். அவள் அப்படியே சாய்ந்தாள். இறந்து போனாள்…’
நாட்டையே உலுக்கிய கொட்டதெனியாவ படல்கம அக்கரங்கஹ சிறுமி சேயா செதவ்மி படுகொலை சம்பத்தின் பிரதான சந்தேக நபரான 32 வயதுடைய கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கிய வாக்குமூலத்தின் ஒரு பகுதியே அது.
சேயா சதெவ்மி என்ற 5 வயதுடைய முன்பள்ளிச் சிறுமி கடந்த செப்டெம்பர் 12 ஆம் திகதி அதிகாலை காணாமல் போன நிலையில் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் அது தொடர்பாக விரிவாக கடந்த வாரம் எழுதியிருந்தோம். (பார்க்க )
அதன்படி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயாவின் விவகாரம் தொடர்பில் கொட்டதெனியாவ பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேல் மாகாணத்தின் வடக்குப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரும் பல குழுக்களை அமைத்து விரிவான விசாரணைகளை பல்வேறு கோணங்களில் மேற்கொண்ட நிலையில் தேசிய உளவுப் பிரிவினர் அதற்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.
பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்ககோனின் நேரடி மேற்பார்வையில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுத்தன.
சேயாவின் படுகொலை தொடர்பிலான மனித மிருகங்களை தேடிய விசாரணை தொடர்பில் கடந்த வாரம் எழுதிய கட்டுரையில் 18 வயதான மாணவன் ஒருவன், 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை மற்றும் மற்றொரு நடுத்தர வயதுடைய நபர் தொடர்பிலான பொலிஸ் விசாரணை தொடர்பில் அவதானம் செலுத்தி முடித்திருந்தோம்.
இந்நிலையில் கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை அதாவது சிறுமி சேயாவின் 7 ஆவது நாள் கிரியைகள் முடிந்திருந்த நிலையில் இரு சந்தேக நபர்கள் கொட்டதெனியாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
18 வயதான பாடசாலை மாணவன் 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கெலும் அத்தநாயக்க ஆகியோரே சுமார் 48 மணிநேர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
பெளதிக அடிப்படையிலான சில தடயங்களை வைத்து ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகளுக்காக அவர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறிப்பாக சேயாவை கொலை செய்த சந்தேக நபர் போதைக்கு அடிமையானவராகவும் கொடூர அல்லது விகாரமான பாலியல் ரீதியிலான உளவுக்கு விருப்பம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என விசாரணைக் குழுக்கள் அனுமானித்திருந்த நிலையிலேயே பெளதிக தடயங்களுக்கு அமைய விசாரணைக்காக அவ்விருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் 18 வயதான மாணவனிடமிருந்து மடிக் கணினி ஒன்று மீட்கப்பட்ட நிலையில் அதில் ஏராளமான பாலியல் உறவு தொடர்பிலான ஆபாச வீடியோக்களை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
அவற்றில் பல ஆபாச வீடியோக்கள் விகாரமான பாலியல் ஆசையைக் கொண்டவர்களை பிரதிபலிப்பதாக இருந்துள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் கைதான அவ்விருவரும் மினுவாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில்தான் சேயாவின் சடலத்தில் இருந்து மீட்கப்பட்ட நான்கு கேசங்களில் 3 தொடர்பிலான டீ.என்.ஏ. அறிக்கை மற்றும் ஏனைய சில அறிக்கைகளும் விசாரணை குழுவுக்கு கிடைத்தன. அதில் பிரதானமாக பிரேத பரிசோதனை சிறப்பு அறிக்கையும் அடங்கும்.
பிரேத பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் சிறுமி சேயா கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.00 மணிக்கும் 12 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது.
அத்துடன் சேயா கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ள நிலையில். அதனை செய்தவரின் பாலியல் உறுப்புக்களில் கூட காயங்கள் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் சில அனுமானிப்புக்களையும் முன் வைத்திருந்தார்.
இவற்றிடையேதான் சேயாவின் சடலம் தொடர்பிலான டீ.என்.ஏ. கிடைத்தது. அதன்படி சேயாவின் சடலத்தில் இருந்த 4 கேசங்களில் மூன்று தொடர்பில் வெவ்வேறான அறிக்கைகள் இருந்தன.
அதில் இரண்டு கேசங்கள் சேயாவினுடையது என்பதை உறுதி செய்திருந்ததுடன் மற்றையது தொடர்பில் எதனையும் குறிப்பிட்டிருக்கவில்லை.
இந்நிலையில்தான் கைதான இரு சந்தேக நபர்கள் (18 வயது,35 வயது) தொடர்பிலும் டீ.என்.ஏ. பரிசோதனை செய்து விசாரிக்க பொலிஸார் தீர்மானித்தனர்.
அதன்படி நீதிமன்ற அனுமதியுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அவ்விரு சந்தேக நபர்களும் விசேட சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்களிடமிருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் டீ.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
அத்துடன் சட்ட வைத்திய சோதனைகளில் சந்தேக நபர்களின் பாலியல் நடவடிக்கைகள் மற்றும் பாலுறுப்புக்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டன.
இந்நிலையில் தான் பொலிஸார் சேயாவின் படுகொலை தொடர்பில் இன்னும் சில கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அதன்படி திவுலபிட்டிய கொட்டதெனியாவ பிரதேசத்தில் சுமார் 500 பேரின் தகவல்களை தேசிய உளவுப் பிரிவு ஊடாக சேகரித்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அதனை வைத்து விசாரணைகளை நகர்த்தியது.
அத்துடன் சேயாவின் படுகொலை இடம்பெற்ற நாட்களிலும் அதனை அண்மித்தும் கொட்டதெனியாவிற்கு வந்து சென்றவர்கள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவு தகவல் சேகரித்து விசாரணைகளை ஆரம்பித்தது.
அதன்படி கம்பஹா பெம்முல்ல பிரதேசத்தை சேர்ந்த துனேஷ் என்ற 32 வயதுடைய நபர் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
‘கொண்டயா’ என பரவலாக அழைக்கப்படும் குறித்த நபர் கஞ்சா பாவனைக்கு அடிமையாகி மானசீக ரீதியாக கொடூரமாக இருப்பவர் என்பதை விசாரணையாளர்கள் தெரிந்து கொண்ட போது கொண்டயாவை பொலிஸார் தேடினர்.
கொண்டயா என்ற துனேஷ் பிரியசாந்தவின் பழைய பதிவுகளை தேடிய புலனாய்வாளர்களுக்கு அவர் மீதான சந்தேகம் மேலும் அதிகமானது.
ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதம் கம்பஹா பெம்முல்லை பிரதேசத்தில் வீடுகளுக்குள் இரவு வேளையில் நுழைந்த 6 வயது மற்றும் 3 வயதுகளை உடைய இரு சிறுமியரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி விட்டு அருகில் உள்ள வயல் வெளியில் அவர்களை கைவிட்டுச் சென்றவரென கம்பஹா பொலிஸ் பதிவுகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரிவித்தன.
அந்த குற்றச்சாட்டுக்களுக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த கொண்டயா நீதிமன்றில் வழங்கப்பட்ட பிணையின் அடிப்படையிலேயே வெளியே திரிந்து கொண்டிருந்துள்ளார்.
பிணையில் வெளியே வந்த கொண்டயா தனது ஊரான பெம்முல்லவை கைவிட்டு கொட்டதெனியாவில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
எனினும் சேயா சடலமா மீட்கப்பட்ட தினத்திலிருந்து அவரை காணவில்லை என்ற தகவல் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கும் போது சந்தேகமானது பல மடங்கு அதிகரித்தது. கொண்டயா தொடர்பில் அனைத்து தகவல்களையும் அப்போது பொலிஸார் சேகரிக்க ஆரம்பித்திருந்தனர்.
கொண்டயாவின் சகோதரியின் வீட்டுக்கு சென்று விசாரணை செய்த சிறப்பு பொலிஸ் குழுவுக்கு அவர் பெம்முல்லவில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றதாக பதில் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அவரது செயற்பாடுகள் தொடர்பில் மேலும் பல தகவல்களை பொலிஸார் சேகரித்திருந்தனர்.
அதன்படி கொண்டயா எனப்படும் துனேஷ் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் இரவு உடையில் உறக்கம் கொள்ளும் காட்சியை ரசிக்கும் பழக்கம் கொண்டவர் என்பதையும் ஒரு சமயம் பெம்முல்ல பதுவத்துகொட மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த 30 வயது யுவதியின் சடலத்தை தோண்டி எடுத்து அதனுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டவர் எனவும் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கொண்டயாவை தேடி விசாரணைகள் ஆரம்பமாகின. கொண்டயா தலைமறைவாகியுள்ளார் என்பதை பெம்முல்ல சென்ற புலனாய்வாளர்களால் தெரிந்து கொள்ள முடிந்தது.
இந்நிலையில் தான் 119 இலக்கம் ஊடாக மேல் மாகாணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு தகவல் ஒன்று பரிமாறப்பட்டது.
119 ஊடாக பொலிஸாரை அழைத்த சமலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ‘ சேர்… நான் குப்பை கொட்ட வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு வந்தேன்… இங்கு போர்வை ஒன்றும் கையடக்கத் தொலைபேசியொன்றும் உள்ளது. பாயும் உள்ளது. சந்தேகமாக உள்ளது சேர்… ‘ என அந்த அழைப்பு சொன்னது.
இதனையடுத்து ஸ்தலம் சென்ற பொலிஸார் கையடக்கத் தொலைபேசி, போர்வை என்பவற்றை மீட்டு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.
தொலைபேசியை மையப்படுத்திய விசாரணைகளில் அந்த தொலைபேசிக்கும் கொண்டயாவுக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இந்த தகவல் புலனாய்வுப் பிரிவுக்கும் பரிமாற்றப்பட்டு விசாரணை விரிவுபடுத்தப்பட்டது.
இதன் போது கொண்டயா பல தடவைகள் தொடர்பு கொண்ட அவனின் சகோதரனின் ஊடாக புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முடுக்கியது.
சகோதரனை கைது செய்த புலனாய்வுப் பிரிவு கொண்டயாவை தேடிய நடவடிக்கைகளை அவனிடமிருந்து பெறும் தகவல்களுக்கு அமைவாக விரிவுபடுத்தியது.
அதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்வதற்காக தேடிவரும் கொண்டயா பெம்முல்ல பதுவதுகொட காட்டுக்குள் மறைந்திருப்பதாக பொலிஸார் அறிந்து கொண்டனர்.
இதனை அடுத்து உடன் செயற்பட்ட புலனாய்வுப்பிரிவு, உளவுப்பிரிவு மேல்மாகாணத்தின் வடக்குப் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு ஆகியன பதுவதுகொட காட்டை சுற்றி வளைத்தன.
இதன் போது காட்டுப்பகுதியில் இருந்து மயானப்பகுதியினூடாக கொண்டயா ஓடுவதை அவதானித்த பொலிஸார் உடன் செயற்பட்டு அவனை கைது செய்தனர்.
கொண்டயா கைது செய்யப்பட்ட இடத்தில் இருந்து வெற்று பிஸ்கட் பக்கட்டுக்கள் பல பொலி ஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. கொண்டயாவினால் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன் காட்டில் ஒளிந்திருந்த காலப்பகுதியில் கொண்டயா வாய் முகம் கூட கழுவாமல் இருந்துள்ளதாகவும் காட்டுவாசிகளை ஒத்த உருவத்தில் அவன் இருந்ததாகவும் சுற்றி வளைப்பை மேற்கொண்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கைதான கொண்டயா கொழும்பு கோட்டையிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நான்காவது மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு விசேட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான்.
இதன் போது சிறுமி சேயாவை தானே கடத்தி துஷ்பிரயோகம் செய்து கழுத்து நெரித்து படுகொலை செய்ததாக அவன் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளான்.
பதுவத்துகொட காட்டுக்குள் சுமார் 12 நாட்கள் கொண்டயா காலம் கழித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் பல சமயங்களில் அவனது தாய் தேவையான உணவு, பானங்களை அவனுக்கு கொண்டு போய் கொடுத்துள்ளதாகவும் தாய் கொண்டுபோய் கொடுக்காத சந்தர்ப்பங்களில் அயல் வீடுகளுக்குள் புகுந்து சோறு கறி வகைகளை திருடி சாப்பிட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் காட்டுக்குள் இருந்த கொண்டயா கைது செய்யப்பட இரு நாட்களுக்கு முன்னரேயே மயானப் பகுதிக்கு சென்று குழியொன்றை தோண்டி அதற்குள் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
உண்மையில் கொட்டதெனியாவ படல்கம கொஹெல் எல்ல இங்னன்மாறுவ எனும் கிராமத்திலேயே கொண்டயாவின் மூத்த சகோதரி இருந்து வந்துள்ளார்.
அந்த சகோதரியின் வீட்டிலேயே கொண்டயா சேயாவின் கொலைக்கு பல நாட்களுக்கு முன்னரிலிருந்து தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்துள்ளான். அந்த சகோதரியின் வீட்டுக்கு செல்லும் பாதையானது சிறுமி சேயாவின் வீட்டுக்கு அருகில் செல்லும் வகையில் அமைந்திருந்தது.
இந்நிலையில் பல சமயங்களில் கொண்டயா சகோதரியின் வீட்டுக்கு செல்லும் போது சிறுமி சேயா அவளது வீட்டில் விளையாடுவதை அவதானித்துள்ளான்.
இந்நிலையில் தான் கடந்த 11 ஆம் திகதி வெள்ளி இரவு கொண்டயா வீடு திரும்பும் போது இந்த கொடூர செயலைப் புரிந்ததாக அவனது ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘சேர்… அன்றைய தினம் இரவு நான் வேலையை முடித்துக் கொண்டு சகோதரியின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன்.
அப்பொழுது நேரம் நள்ளிரவை அண்மித்திருந்தது. இதன் போது சேயாவின் வீட்டில் மட்டும் மின்குமிழ்கள் எரிந்து கொண்டிருந்தன.
இலேசாக திறந்திருந்த ஜன்னலை முழுமையாகத் திறந்து அந்த அறையை நான் நோட்டமிட்டேன். அங்கு சிறுமி சேயா அவனது சகோதரன் சகோதரி மற்றும் அம்மா ஆகியோருடன் உறக்கத்திலிருந்தாள்.
அந்த ஜன்னலால் பாய்ந்து சென்று சிறுமியை அணைக்க முற்பட்டேன். எனினும் பயமாக இருந்தது. இதன் போது வீட்டின் கதவுகள் திறந்திருந்ததா என பார்ப்பதற்காக முன்பக்கம் சென்றேன். கதவு தாழிடப்பட்டிருக்கவில்லை. கதவைத் திறந்து கொண்டு அந்த அறையை அடைந்தேன்.
அந்த அறைக்குள் சென்ற நான் சேயாவின் ஆடையைக் களைந்தேன். துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டேன். அப்போது சேயா தூக்கத்தில் அசைந்ததால் பயத்தில் அவளை அணைத்துக் கொண்டு திறந்திருந்த முன்கதவு வழியாகவே வெளியேறினேன்.
சிறிது தூரம் அவளைத் தூக்கி செல்லும் போது அவள் விழித்துக் கொண்டாள். அதன் போது அவளது பெனியனைப் பயன்படுத்தி கழுத்துப் பகுதியை நெரித்தேன். அவளின் அசைவுகள் அடங்கின.
அவள் இறந்து விட்டதாக நினைத்தேன். இதனை அடுத்து ஒரு இடத்தில் வைத்து அவளை துஷ்பிரயோகம் செய்யும் போது அவள் எழுந்து இருக்க முற்பட்டாள்.
அதன் போது அவளது கழுத்தை மீண்டும் அந்த பெனியனினால் இறுக்கமாக நெரித்தேன். அவள் இறந்து விட்டாள்.
பின்னர் சகோதரி வீட்டுக்கு போகாமல் நான் நேராக கம்பஹா பெம்முல்ல வீட்டுக்கு சென்றேன். மறுநாள் விடயத்தை எனது அண்ணாவுக்கும் சொன்னேன்.
அதன் பின்னரேயே தலைமறைவு வாழ்க்கையை வாழ ஆரம்பித்தேன் ‘ என கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த தனது ஒப்புதல் வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அவரது வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் உண்மைத் தன்மை தொடர்பில் உறுதிப்படுத்திக் கொள்ள புலனாய்வு பிரிவினர் விசேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிடியவிடம் பெற்றுக் கொண்ட 72 மணி நேர விசேட தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் நேற்று முன்தினம் முதல் இந்த விசாரணைகள் நான்காம் மாடியில் ஆரம்பமாகின.
அதற்கமைய குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு சந்தேக நபர் அழைத்து செல்லப்பட்டதுடன் அந்த இடங்களையும் அவர் அடையாளம் காட்டியுள்ளார்.
இந்நிலையில் இதுவரை இந்த சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் முதலில் கைதான 18,35 வயதுகளையுடையவர்கள் இந்த கொடூரத்துடன் தொடர்புபட்டனரா என்று குறித்து பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் அவர்களது உயிரியல் மாதிரிகள் டீ.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ள நிலையில் அதன் அறிக்கை கிடைத்ததும் அவர்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக் காட்டினார்.
எது எப்படியோ கடந்த இரு வாரமாக முழு நாட்டையும் அதிர்ச்சிக்குட்படுத்திய சிறுமி சேயா படுகொலை விவகாரத்தில் பிரதான சந்தேக நபர் கைதாகியுள்ள நிலையில் சமூக கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
தண்டனைகளை கடுமையாக்குவதன் ஊடாக மட்டும் சிறந்த சமூக, கலாசார, மானசீக ரீதியிலான அடைவு மட்டமொன்றை ஏற்படுத்த முடியும் என நம்புவதை விடுத்து புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
எம்.எப்.எம்.பஸீர்