சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜா சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி யாழ்பாண கல்விமான்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

யாழ்-பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன.

ஆனந்தராஜாவின் கொலைக்கு காரணமானவாகள் உடனடியாக உரிமை கோரவேண்டும் என்று குரல் எழுப்பினார்கள் யாழ்-பல்கலைகழக மாணவர்கள்.

யாழ்.மாவட்ட அதிபர்கள் சங்கம், யாழ்-பிரஜைகள் குழு, சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஆகியவை கொலைக்கு கண்டனம் தெரிவித்து 28.06. 85 அன்று ஒருநாள் பாடசாலை அடைப்புக்கும், கடையடைப்புக்கும் அழைப்பு விடுத்தன.

யாழ்.நகரின் பல பகுதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் கறுப்பு பட்டிகளோடு காணப்பட்டனர்.

St.Johns-College-Jaffna_Voice-of-jaffnaSt.Johns-College-Jaffna
மாணவர்கள் கண்டனம்

இயக்கம் ஒன்றுதான் கொலைக்கு காரணம் என்று மெல்லக் கசியத் தொடங்கியது. ஆனாலும் ஆனந்தராஜா கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் துணிச்சலான நடவடிக்கைகள் தெடரவே செய்தன.

இதற்கிடையே யாழ்பாண பொலிஸ் தலைமைக் காரியாலயம் ஒரு அறிவித்தலை வெளியிட்டது.

“ஆனந்தராஜா கொலை பற்றிய தகவல் தருவோருக்கு 5 இலச்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என்று அந்த அறிவித்தல் தெரிவிக்கப்பட்டது.

அதிபர் ஆனந்தராஜாவின் இறுதிச்சடங்கில் பெருமளவில் மாணவாகளும், பொதுமக்களும் திரண்டால் தமது நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாமல் போகும், அதனால் அவரது சடலத்தை யாழ்.பொது மருத்துவமனையில் இருந்து கடத்திச் செல்ல அவரை சுட்ட இயக்கம் முயற்சித்தது.

ஆனால் குறிப்பிட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவ மனைக்கு சென்ற போது மாணவர்கள் கூடி நின்றமையால் கடத்தல் முயற்சி கைவிடப்பட்டது.

அதிபர் ஆனந்தராஜாவின் இறுதிச் சடங்கில் பல்லாயிரம் மாணவர்களும், பொதுமக்களும் கண்ணீர் மல்க திரண்டிருந்தனர்.

சென்-ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகிலுள்ள சவச்சாலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதன் பின்னர்தான் கொலைக்கு யார் காரணம் என்பதும், சம்பந்தபட்ட இயக்கம் மூலமாக வெளியே வந்தது.

அதிபர் சி.ஈ.ஆனந்தராஜா

புலிகளின் காரணம்

கொலைக்கு உரிமை கோரியவர்கள் புலிகள். யாழ.நகரமெங்கும் உரிமை கோரும் சுவரரெட்டிகள் புலிகள் அமைப்பினரால் ஒட்டப்பட்டிருந்தன.

ஆனந்தராஜாவின் படையினரோடு உறவுகளை வைத்திருந்தார். எச்சரித்தும் கேட்கவில்லை என்று புலிகள் காரணம் சொல்லியிருந்தார்கள்.

புலிகளே ஆனந்தராஜாவைச் சுட்டார்கள் என்று ஏனைய இயக்கங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி, மாணவாகள் மத்தியில் பரவலான அதிருப்திகள் ஏற்பட்ட நிலையில்- தவிர்க்க முடியாமல் புலிகள் உரிமைகோர வேண்டியேற்பட்டது.

ஆனந்த ராஜாவை சுடுமாறு கட்டளையிட்டவர் கிட்டு. யாழ்பாணம் றக்கா வீதியில் வைத்து ஆனந்தராஜாவைச் சுட்டவர் ரிச்சார்ட்.

ரிச்சார்ட் அரியாலையை சேர்ந்தவர். கிட்டுவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர்.

இப்போது ரிச்சார்ட் இலண்டனில் குடும்பத்தோடு இருக்கிறார்.

யாழ்பாண ஆசிரியர் ஒருவரது மகளை நல்ல சீதனத்தோடு மணமுடித்துக்கொண்டு இலண்டன் வாசியாகிவிட்டார்.

“ஆனந்தராஜாவை ஏன் சுட்டீர்கள்?” என்று கிட்டுவின் நண்பர் ஒருவர் அவரிடம் கேட்டார். அதற்கு கிட்டு சொன்னார் : “அப்படி ஒருவரை போட்டால்தான் மற்றவர்கள் பயப்பிடுவார்கள். புளிப்படங்கும்

அதிபர் சி.ஈ.ஆனந்தராஜா

இத்தனைக்கும் ஆனந்தராஜா  ஈழமாணவர் பொது மன்றத்தோடு (G:U:E:S) தொடர்பாக இருந்தவர்.

“பாடசாலை நேரம் தவிர ஏனைய நேரங்களில் மாணவர்களை அழைத்து போராட்ட பிரசார வகுப்பு நடத்தலாம் தனது ஒத்துழைப்பு இருக்கும்” என்று (G:U:E:S) அமைப்பிடம் கூறியிருந்தவர்.

யாழ்-பிரஜைகள் குழுவில் ஒருவராக இருந்தமையால், யாழ்பாணத்தில் கைது செய்யப்படும் இளைஞர்களது பெற்றோர்கள் ஆனந்தராஜாவிடம் ஓடுவார்கள்.

படை அதிகாரிகளை சந்தித்து கைதானவர்களின் விடுதலை தொடர்பாக பேசுவார் ஆனந்தராஜா.

ஆனால், ஆனந்தராஜாவுக்கு புலிகளைப் பிடிக்காது. இராணுவத்தினருடன் சினேகபூர்வ கிரிகெட் ஆட்டத்திற்கு ஒழுங்குகள் நடந்து கொண்டிருந்தன.

“கிரிகெட் போட்டி நடத்தவேண்டாம்” என்று ஆனந்தராஜாவிடம் புலிகள் சொன்னார்கள்.

“நீங்கள் படைகளோடு போர் நிறுத்தம் செய்திருக்கிறீர்கள். நாங்கள் கிரிகெட் போட்டி நடத்துவது மட்டும் எப்படி தவறாகும்?” என்று சொல்லிவிட்டார் ஆனந்தராஜா.

அதுதான் கிட்டுவுக்குக் கோபம். “மண்டையில் போடு” என்று சொல்லிவிட்டார்.

மண்ணும் மரணமும்

அதிபர் ஆனந்தராஜாவைச் சுட்ட ரிச்சார்ட் இயக்கத்தைவிட்டு விலகும் முன்னர் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையையும் இந்த நேரத்தில் சொல்லிவிடுகிறேன்.

இயக்கத் தேவைகளுக்காக புளொட் அமைபின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் மண் வியாபாரம் செய்து கொண்டிருந்தனா. புலிகளும் மண் வியாபாரம் செய்தனர்.

புளொட் அமைப்பின் யாழ்.மாவட்ட முக்கியஸ்தர் ரவிமூர்த்தியும், இன்னொரு உறுப்பினரும் அரியாலைக்கு மண் அள்ளச் சென்றனர்.

அப்போது அங்கு அங்கு வந்தார் ரிச்சார்ட். “நாம் மட்டுமே இதனை எடுக்கமுடியும்” நீங்கள் வேறெங்காவது சென்று பாருங்கள்” என்றார் ரிசார்ட்.

ரவிமூர்த்தி கேட்கவில்லை. பிரச்சனைப்பட்டார். ரிச்சார்ட்டுக்கு பொறுக்கவில்லை. பிஸ்டலை எடுத்து ரவிமூர்த்தியை சுட்டு விட்டார்.

மற்றொரு புளொட் உறுப்பினரையும் சுட்டார். இருவரும் பலியானார்கள். இதுவும் 1985 ல் தான் நடந்தது.

பேச்சு முயற்சிகள்

இலங்கை அரசு ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை அறிவித்தமையானது இந்தியாவோடு காதோடு காதாகப் பேசி செய்த நடவடிக்கை என்றே நம்பப்பட்டது.

போர் நிறுத்தத்தையடுத்து பேச்சுவார்தையை ஆரம்பிக்க முயற்சி செய்தது இந்தியா.

தீவிரவாத இயக்கங்களை உடன்படவைக்காமல் கூட்டணியோடு பேச்சு நடத்துவதால் பயனில்லை என்று இலங்கை அரசு சொல்லிவிட்டது.

எவ்வாறென்றாலும் தீவிரவாத இயக்கங்களை பேச்சு மேசைக்கு கொண்டுவருவதாக இந்தியாவும் உறுதியளித்துவிட்டது.

இதே காலகட்டத்தில் கூட்டணி நடத்திய நாடகம்தான் அருமையானது.

பேச்சு வார்த்தையில் கூட்டணிதான் முக்கிய பாத்திரம் வகிப்பதுபோல கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றின் மூலமாக செய்திகளை வெளியாக்கிக் கொண்டிருந்தது.

அப்பத்திரிகையும் இயக்கங்களை தீவிரவாதக் குழுக்கள் என்றே குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டு வந்தது.

சுற்றி வளைப்பானேன், “வீரகேசரி”தான் அவ்வாறு செய்திகளை வெளியிட்டு வந்தது.

பேச்சுக்கு செல்லவிரும்பாத தலைவர்கள்

இத்தனைக்கும் இயக்கங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லையென்றால் பேச்சு முயற்சியே கிடையாது என்ற நிலைதான் நிலவியது.

“சென்னையில் இருந்து அமிர்தலிங்கம் பேட்டி-பேச்சு வார்த்தைக்கு ஆதரவுதிரட்ட கொழும்புக்கு தலைவர்களை அனுப்பிவைக்கிறார்’ என்றெல்லாம் செய்திகள் வரும்.

உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே பத்திரிகைகள் சில தாமும் குழம்பி, வாசகர்களையும் குழப்பிக் கொண்டிருந்தன.

கூட்டணியின் கையைவிட்டு பேச்சுவார்த்தை அரங்கம் போராளி இயக்கங்களிடம் சென்றுகொண்டிருந்தது.

சில பத்திரிகைகள் மூலமாக எல்லாமே தமது கையில் இருப்பதாகக் காட்டிக்கொள்ள முயன்றார்கள் கூட்டணிதலைவர்கள்.

சென்னையில் இருந்த இயக்கத்தலைவர்கள், கூட்டணிக்கு பேச்சுவார்த்தையில் இடமளிக்கப்படுவதையே விருப்பவில்லை.

“கொஞ்சம் இடம் கொடுத்தால் எங்களையும் தள்ளிப்போட்டு குறக்காலே ஓடுவாகள்” என்று அடிக்கடி சொல்லுவார் ரெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம்.

இந்திய ‘றோ‘ அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்படச் சொல்லிக் கேட்கப் போகிறார்கள் என்று தெரிந்தவுடன் தலைமறைவாகிவிட்டார் பிரபாகரன்.

நான்கு இயக்க கூட்டமைப்புக் கூட்டம் சென்னையில் நடந்தது. ‘பேச்சுக்கு உடன்படுமாறு கேட்கப் போகிறார்கள். என்ன செய்யலாம்’ என்று கேள்வி எழுந்தது.

புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அதற்கு பதில் சொன்னார்.

“தலைவர்கள் கொஞ்ச நாட்களுக்கு வெளியே தலைகாட்டாதீர்கள். தலைவாகள் வரட்டும், கேட்டுவிட்டு முடிவு சொல்கிறோம் என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம்.”

ஆனால் அந்த தந்திரம் பலிக்கவில்லை.

இந்திய அரசு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க பிடிவாதமாக இருந்தது.

இயக்கங்களை கேட்காமலேயே இலங்கை அரசுக்கு வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, தலைவர்களின் கழுத்தை பிடித்தது இந்தியா.

“இன்னமும் ஏழு நாட்களில் தீவிரவாத இயக்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வரப்போகின்றன” என்று நம்பிக்கையோடு அறிவித்தார் அத்துலத் முதலி.

ஈ.என்.எல்.எஃப். தலைவர்கள்

உடன்பாடு

இறுதியில் நான்கு இயக்கங்களின் கூட்டமைப்பான ஈ.என்.எல்.எஃப். பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது.

“பேச்சுவார்த்தையில் தலைவாகள் கலந்துகொள்ள தேவையில்லை. எமது பிரதிநிதிகளை அனுப்பினால் போதும் என்றார்” பிரபாகரன்.

ஏனைய மூன்று இயக்கத் தலைவர்களும் அதனை ஆமோதித்தனர்.

தலைவாகள் கலந்துகொண்டால் உறுப்பினர்கள் சோர்வடைந்துவிடுவார்கள்.

தமிழீழ போராட்டத்தை கைவிட்டு பேச்சுக்கு மேசைக்கு சென்றுவிட்டார்கள் என்று நினைத்துவிடுவார்கள்.

தலைவர்கள் கலந்துகொள்ளாமல் இருந்தால், “இது ஒரு நாடகம் மட்டுமே பேச்சுக்கு எதிரானவாகள் அல்ல என்று உலகுக்கு காட்டும் நடவடிக்கை” என்று தெளிவு படுத்த முடியும்.

இயக்கங்களின் முதலாம் கட்ட தலைவர்கள் மட்டுமல்ல, இரண்டாம் கட்டத் தலைவர்களை கூட பேச்சுவார்த்தைக்கு அனுப்பிவைக்க இயக்கங்கள் முன்வரவில்லை.

கூட்டணி மட்டும் விதிவிலக்கு. அமிர்தலிங்கமே நேரில் செல்ல ஆயத்தமானார்.

கூட்டமைப்பில் இல்லாவிட்டாலும் புளொட் அமைப்பினரும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டனர்.

தமிழர் தரப்பிலிருந்து 5 அமைப்புக்களது (கூட்டணி உட்பட) பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதை இந்தியா உறுதிப்படுத்தியது.

பேச்சுவார்த்தையை மூன்றாம் நாடொன்றில் நடத்த திட்டமிட்டது இந்தியா.

பூட்டானின் தலைநகரான திம்புவில் தான் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்தது இந்திய அரசு.


(பூடான் தலைநகர் திம்புவில் 1985-ம் ஆண்டு ஈழப்பிரச்சினை குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை (கோப்புப் படம்)

நேரடி தொடர்பு
பேச்சுவார்த்தையில் இயக்கத் தலைவர்கள் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தெரிந்தவுடன் இந்திய அரசு ஒரு காரியம் செய்தது.

திம்புவில் இருந்து பிரதிநிதிகள் உடனுக்குடன் சென்னையில் உள்ள தலைவர்களோடு தொடர்பு கொள்ள நேரடி தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தியது.

‘தலைவாகளை கேட்டுச் சொல்லுகிறோம்’ என்று பிரதிநிதிகள் நழுவிக்கொள்ளாமல் தடுக்க இந்தியா செய்த தந்திரம் அது.


இதேவேளை யாழ்பாணத்தில் மாபெரும் ஆர்பாட்ட ஊர்வலங்களை இயக்கங்கள் பின்னால் நின்று நடத்தத் தொடங்கிவிட்டன.

“ஈழமே ஒரே தீர்வு”

“ஈழப் போராட்டமா –பந்தாட்டமா?”

“வேண்டாம்-வேண்டாம், பேச்சு வார்த்தை வேண்டாம்”

02.07.85 அன்று யாழ்நகரில் அந்த ஊர்வலம் நடைபெற்றது. “தமிழ் ஈழத்திற்கு குறைந்த எதற்கும் சரணடையோம்” என்ற தலைப்பிட்டு ஒரு துண்டுப்பிரசுரமும் வெளியிட்டார்கள் புலிகள்.

ஆனால், பிரசுரத்தின் இறுதியில் ‘தமிழ் மக்கள்’ என்று மட்டும் குறிப்பிடபட்டிருந்தது.

யாழ்பாணம் நெல்லியடியில் அமிர்தலிங்கத்தின் கொடும்பாவி வீதியால் இழுத்துச் செல்லப்பட்டு கொளுத்தப்பட்டது.

கூட்டணிக்கு கண்டனம்

இலங்கையில் ஓரிரு பத்திரிகைகள் மூலம் பேச்சுவார்த்தையில் தாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூட்டணி காட்டிக்கொண்டதாக கூறியிருந்தேன் அல்லவா?

அதனால் இயக்கங்களுக்கு கோபம் வந்துவிட்டது.

சென்னையில் கூடிய நான்கு இயக்க கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டது.

‘உத்தேசிக்கப்பட்டுள்ள பேச்சு வார்த்தைகளில் ‘தீவிரவாதிகளுக்கு’ தலைமை தாங்கவும், வழிகாட்டவும் தம்மைதாமே அரசியல் தலைமையாக நியமித்துக் கொண்டிருக்கும் த.வி.கூட்டணியின் நிலையை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இல்லை.

ஈழ மக்களின் சகல நம்பிக்கையையும், நாணயத்தையும் இழந்துவிட்ட கூட்டணியினர் இனியும் தம்மை ஈழமக்களின் சட்ட ரீதியான பிரதிநிதிகள் என்று கூறுவதற்கு அருகதையற்றவர்கள்.

பகைமை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஈழத்தில் எமது மக்களுக்கு ஆயுதப் படைகள் இழைத்துவரும் கொடுமைகளையிட்டு கூட்டணி வாய்மூடி மௌனியாக இருப்பதும் எமது முடிவை உறுதிப்படுத்துகிறது.”

தமிழ்நாட்டு பத்திரிகைகளில் அந்த அறிக்கைசுடச்சுட வெளியாகியது.

அமிர்தலிங்கம் திகைத்துப் போனார்.

கூட்டணியின் பிரபலம் தேடும் முயற்சிக்கு மற்றொரு அடி கொடுக்கும் வகையில் ஒரு நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டது.

யாழபாணத்தில் உள்ள கூட்டணிப் பிரமுகர்களை ‘மண்டையில் போடுமாறு’ ஒரு இயக்கத் தலைவர் சென்னையிலிருந்து உத்தரவிட்டார்.

‘யாரைப் போடலாம்?’ என்று யோசித்தார்கள்.

தொடரும்..
(அரசியல் தொடர்…எழுதுவது அற்புதன்)

பெண் கடற்புலிகளுக்கு வந்த கௌரவப் பிரச்சனை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை – 44)

Share.
Leave A Reply

Exit mobile version