சவூதி அரேபியாவின் மினா நகரில் கடந்த வியாழக்கிழமை காலை ஏற்பட்ட சனநெரிசலில் இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டிருந்தாலும் விபத்து நடந்த தினத்திலிருந்து தொடர்ந்தும் இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் இருவர் காணாமற் போயுள்ளதாக இலங்கை ஹஜ் முகவர் ஒருவர் சவூதியிலுள்ள இலங்கை ஹஜ் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
ஹஜ் கடமையை மேற்கொண்டிருக்கும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச் ஏ. ஹலீம், முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஸமீல், ஹஜ் குழு உறுப்பினர் எம்.பாஹிம் ஆகியோர் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்டு வருவதாக ஹஜ் குழு உறுப்பினர் எம்.எஸ்.எம்.தாஸிம் மௌலவி தெரிவித்தார்.
இதுவரை 9 வைத்தியசாலைகளுக்கு அவர்கள் நேரடியாக விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் சனநெரிசல் காரணமாக சில வைத்தியசாலைகளுக்கு பல மைல்கள் கால்நடையாகச் சென்று சிகிச்சை பெற்றுவரும் ஹஜ் யாத்திரிகர்களின் சுகநலன்களை விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
காணாமற் போயுள்ள தம்பதிகளான இலங்கை ஹஜ் யாத்திரிகர் இருவரும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்களா எனக் கண்டறிவதற்கு 19 வைத்தியசாலைகளுக்கு நேரடி விஜயம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த எவரும் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார்.
அதனால் இலங்கையிலுள்ள உறவினர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் வைத்தியர் குழுவும் 24 மணிநேர சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.