மதுரை: பொட்டு சுரேஷ் சதியால் அரசியலில் எதிர்காலம் இல்லாமல் போய்விடுமோ என பயந்தேன் என்று அட்டாக் பாண்டி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
திமுகவில் அழகிரி அணியில் இருந்து ஸ்டாலின் அணிக்கு அட்டாக் பாண்டி மாறியது உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை மேலும் 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதியிடம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை தி.மு.க. பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி, நான்கு நாள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டார். விசாரணையில் பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.
எனக்கும், பொட்டு சுரேஷிற்கும் அரசியல் பகை ஏற்பட்டது. அழகிரியிடம் நெருங்க விடாமல் செய்தார். தன் மீது போலீஸில் வழக்கு பதிவு செய்ய வைத்தார்.
இதனால், அழகிரி பக்கமிருந்து ஸ்டாலின் அணியில் நான் சேர்ந்தேன். பொட்டு சுரேஷினால் அரசியல் எதிர் காலம் இல்லாமல் போய்விடும் என்பதற்காக கூட்டு சதி செய்து, தனது கூட்டாளிகள் மூலம் பொட்டு சுரேஷை கொலை செய்தேன்.
28-1443414313-durai-dayanidhi-600
துரை தயாநிதியுடன் பேச்சு
சென்னை தி.நகர் ரெசிடென்சி ஓட்டலில் அழகிரி, அவரது மகன் தயாநிதியை சந்தித்து நீண்ட நேரம் பேசினேன். அப்போது, தி.மு.க., முன்னாள் துணை செயலர் உதயகுமார் மூலம், என் மைத்துனர் திருச்செல்வத்தை வைத்து என்னை சுரேஷ் கொல்ல திட்டம் தீட்டியிருப்பதாக தெரிவித்தேன்.
தலைமறைவு
கொலைக்குப் பின்னர் கடந்த 33 மாதங்களாக பல்வேறு மாநிலங் களுக்குச் சென்று தலைமறைவாக இருந்தேன் என அட்டாக் பாண்டி அவருடைய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீஸார் கூறினர்.
அழகிரியிடம் விசாரணை?
பொட்டு சுரேஷ் கொலை குறித்து, அட்டாக் பாண்டி கூறிய தகவல்கள் உண்மை தானா என உறுதி செய்ய சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அழகிரி, அவரது மகன் தயாநிதி, ஸ்டாலினிடம் பாண்டி வைத்த கோரிக்கைகள் என்ன என்பது குறித்தும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
பணம் அனுப்பியது யார்
பொட்டு சுரேஷை கொலை செய்வதற்கு முன், அவரது நடவடிக்கையை கூட்டாளிகள் மூலம் பாண்டி கண்காணித்து வந்துள்ளார். இக்கொலையில் தொடர்ந்து தலைமறைவாக இருக்க, பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தங்கியுள்ளார்.வெளி மாநிலங்களில் பதுங்கியிருந்தபோது பல லட்சம் ரூபாய் அவரது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. யார் அனுப்பியது, முக்கிய நபர்களிடமிருந்து, பினாமி பெயரில் அனுப்பப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிபதி முன் ஆஜர்
அட்டாக் பாண்டியின் போலீஸ் காவல் விசாரணை ஞாயிறுடன் முடிந்ததால், மதுரை பந்தயத்திடல் சாலையில் உள்ள நீதிபதி பாரதிராஜா வீட்டில் நேற்று மாலை 5.30 மணிக்கு அட்டாக் பாண்டியை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது போலீஸார் தன்னை துன்புறுத்தவில்லை என அட்டாக் பாண்டி தெரிவித்தார். ஏற்கெனவே அட்டாக் பாண்டிக்கு அக்டோபர் 6ம் தேதிவரை நீதிமன்றக்காவல் வழங்கப்பட்டதால், அவரை சிறைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
4 நாட்கள் தேவை
அப்போது போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மு.க.அழகிரி பக்கத்தில் இருந்து, மு.க.ஸ்டாலினுடைய பக்கம் செல்ல மதுரை திமுக பிரமுகர் வி.கே.குருசாமி, சென்னை மா.சுப்பிரமணியன் ஆகியோரை அட்டாக் பாண்டி தொடர்புகொண்டு சில கோரிக்கைகளை வைத்துள்ளார், அவர் ஸ்டாலின் முகாமுக்கு மாறியது, மேலும் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்துள்ளது குறித்து அட்டாக் பாண்டியிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. இதற்காக மேலும் 4 நாட் கள் போலீஸ் காவலுக்கு அனு மதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.

மதுரை சிறைக்கு மாற்றவேண்டும்
இதற்கு அட்டாக் பாண்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மணிகண்டன், தாமோதரன் ஆகியோர் நீதிபதியிடம் அளித்த மனுவில், அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும், மதுரை சிறைக்கு மாற்றக் கோரியும், என்கவுன்ட்டர் செய்யவுள்ளதாக தொடர்ந்து தகவல் வருவதாகவும் தெரிவித்தனர்.

பாளை சிறையில் அட்டாக்
காவலுக்கு அனுப்புவது குறித்து இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அட்டாக் பாண்டி மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று அவர் மீண்டும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அட்டாக் பாண்டியின் வாக்குமூலத்தையும் போலீஸார் நீதிபதியிடம் தாக்கல் செய்தனர்.
Share.
Leave A Reply

Exit mobile version