இன்று கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய சுமந்திரனின் கூட்டம் பெரிய சிவன் ஆலயத்தில் மாலை நடந்தது. நிறைந்த கேள்விகளோடு விரைந்து சென்றேன்.
குறித்த நேரத்திற்கு நிகழ்வு ஆரம்பமானது. ஆனால் குறித்து சென்ற கேள்விகள் ஊமையாய் உறங்கிய அழுத்தம் மனதில் கொந்தளிப்பை உருவாக்கியது
கனடா வந்த சுமந்தரனிடம் கேள்வி கேட்க சென்ற என் போன்ற மக்களை குரல் எழுப்பி கேள்வி கேட்க விடாமல் துண்டெழுதி கேள்வி கேட்க வைத்து, படித்தது பாதி படிக்காதது பாதி, கேள்வியை திரிபு படுத்தி படித்தது பாதி, என நுனிப் புல் மேய்ந்து சாதுரியமாக பதில் என்ற பெயரில் எதையோ சொல்லி தட்டிக் கழித்து தப்பித்தார் சுமந்திரன்.
சபை ஊமைகள் அரங்கானது….நம்புங்கள்.. நாம் ஊமைகளாகவே இருக்க பணிக்கப்பட்டோம்.
பேச்சு வன்மை உள்ளவர் தான்.. மறுக்கவில்லை. ஆனால் “என்னாமா பேசுகிறார்!” என வியப்பதற்கு பதிலாக “என்னாமா புரட்டிப் பேசுகிறார்!” என விசனம் தான் எழுந்தது …
கலப்பு விசாரணை தமிழ்த் தேசக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட அரிய சந்தர்ப்பமாம். அதை நழுவ விடாமல் பயன்படுத்த வேண்டுமாம்.. அது சரியாக நடப்பதை தாம் உறுதி செய்வார்களாம்… மக்களுக்கு நம்பகத்தன்மையான தீர்வை கொடுக்கத் தவறினால் விளைவு விபரீதமாகும்…
ஆனால் அதற்காக இப்பொழுதே சிங்கள அரசையோ அமெரிக்காவையோ அல்லது சர்வதேசத்தையோ சந்தேகமாக பார்த்து இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாதாம். இது அவரது கருத்து மட்டுமல்ல. தமிழ்த் தேச கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளினதும் ஏகோபித்த கருத்தாம்.
வட மாகாணசபை என்ன நினைக்கிறது என்பது பற்றி தனக்கு மன்னிக்கவும் தமக்கு கவலை இல்லையாம்.
இப்படியாக கலப்பு விசாரணையை மக்கள் மகிழ்வோடு ஏற்று எதிர்கொள்ள பரப்புரை பணியை மிக நேர்த்தியாக சொற்களை அழகாக தெரிந்தெடுத்து வலியுறுத்தி கருத்தை ஆணித்தரமாக எல்லோரும் ஏற்கும் நிலைக்கு தள்ளப்படும் வண்ணம் விபரித்தார்.
அழகான மூளை சலவை. ஆபத்தான கருத்து திணிப்பு…
பழங்கதை வேண்டாம் என்றார்.. ஆனால் அவர் மட்டும் இடையில் கஜேந்திரகுமார் அணிக்கு எதிரான கருத்துக்கள் தொட்டு சென்றார்…
புலம் பெயர் தமிழர்கள் தாம் சொல்வதை கேட்பது தான் சனநாயக ரீதியாக தம்மை தெரிவு செய்த மக்களை மதிக்கும் வழி என்றும்.. புலம் பெயர் தமிழ் மக்கள் அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் தமக்கு ஏற்புடைய வழியில் இல்லை என்றால் அது தம்மை தெரிவு செய்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் எச்சரிக்கை வேறு செய்தார்..
இனப்படுகொலை பற்றி ஒரு கயிறு திரிப்பு.. என்னாமா திரிக்கிறார்….தும்பை நூலாக்கி.. நூலை கயிறாக்கி..கயிறில் கப்பலையே கட்டி கடலில் கவிழ்க்கிறார்… சிறி லங்கா அரசு கொடுத்து வைத்தது..ஒத்துக் கொள்கின்றோம்..
ஜேர்மன் தீர்பாயத்தின் முடிவுக்கு ஒரு கிண்டல் வேறு..அதை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டாராம் … நாமே ஆயம் நடத்தி எதிராளி இன்றி விவாதம் இன்றி குற்ற விசாரணை இன்றி இனப்படுகொலை என சொன்னால் அது சர்வதேச நீதி மன்றத்தில் நிறுவப்படும் வரை ஏற்றுக் கொள்ளப்படாதாம்.
இதனால் போர்குற்ற வழக்கு தோற்றுப் போகும் அபாயம் உண்டாம்.. அவர் ஜெர்மன் தீர்ப்பாயம் பற்றியே பேச விரும்பவில்லையாம் மொத்தத்தில்…இனப்படுகொலையின் கூறுகள் மூலம் நடந்தது இனப்படுகொலை என நிறுவப்படும் வரையில் அதை இனப்படுகொலை என சொல்ல முடியாதாம்.
சரி.. சர்வதேச நீதி மன்றம் சொல்லும் வரை தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக நீங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி நிறுவி எடுத்துரைக்கலாம் தானே.. ஆவணத்திற்கா பஞ்சம்? அதை நீங்கள் திரும்பத் திரும்ப சொல்லுங்களேன்….என எழுதப்பட்ட கேள்விக்கு …மேலே சொன்னது போன்று தட்டிக் கழித்து பேசினார்.
நம்புங்கள் சத்தியமாக சிங்கள அரசுக்கு எறும்பு கடித்த வலி கூட வராமல் மென்மையாக மயில் இறகால் வருடியே பேசினார்.
ஜெர்மன் தீர்ப்பாயத்தில் இனப்படுகொலையின் கூறுகள் பற்றி ஐ. நா. முன்னாள் நீதிபதி அழகாக நிறுவி விளக்கினார்…. இன சுத்திகரிப்பின் அத்தனை கூறுகளும் இன்றும் தொடர்கின்றது என்று.. இவர் இல்லை. என்கின்றார். இவர் மக்களின் பிரதிநிதி….! ம்…..
2000 மக்கள் கொல்லப்பட்ட கொசோவாவில் நடந்தது இனப்படுகொலை என ஏற்றுக் கொண்ட சர்வதேசம் ஐ. நா. ஏற்றுக் கொண்ட எண்ணிக்கைப்படி45 000 உம் தமிழர் கணிப்பின் படி ஒன்றரை இலட்சமும் என பலியான தமிழ் மக்களின் இன அழிப்பை எடுத்துச் சொல்ல நிறுவிக் காட்ட உங்களுக்கு என்ன வலி?
எழுதிக் கேட்டால் தான் முன்பு சொன்னாராம்.. ஆனால் நிறுவாமல் சொல்லி பயன் இல்லையாம். அதனால் இப்பொழுது அப்படி சொல்வது ஆபத்தாம். அது சரி அவர்கள் குழந்தைகள் சாகவில்லை.. அவர்கள் உறவுகள் மண்ணுக்குள் புதையவில்லை.. அவர்கள் குடும்பம் இழப்புகளை சந்திக்கவில்லை..இவர்களுக்கு வலி எப்படி தெரியும்???
இலங்கை அரசு மீது நம்பிக்கையை உறுதியாகவே காட்டினார். கேட்டால்… பழங்கதை பேசி நம்பிக்கையீனமாக பேசி அரசோடு பேசிப் பெற்ற இந்த அரிய சந்தர்ப்பத்தை கெடுக்க விரும்பவில்லையாம்…
குவிக்கபப்ட்ட இராணுவம் வட கிழக்கில் இருந்து மீளப் பெறாத வஞ்சனை குறித்த கேள்விக்கு ஓரிரவுக்குள் மாற்றம் நிகழாது என்றார்…
சில ஆதரவான தேன் தடவிய பேச்சுக்களும் இருந்தன…
காணமல் போன மக்களுக்கு பதில் கேட்க விசாரிக்கப்பட வேண்டும். என்றார்.. முன்னாள் போராளிகளின் வாழ்வாதார சிக்கல் பற்றி பேசிய பொழுது அதற்கு வழி சொல்ல வேண்டும் என்றார். இனப்படுகொலை என ஏற்க செய்யும் வண்ணம் ஆதாரங்களை நாம் கொடுக்க வேண்டும் என்றார்… இப்படியும் அப்படியும் என பேசினார்.
அழகாக பேசினார்.. ஆனால் கலப்பு விசாரணையையும் சிங்கள அரசையும் பத்திரமாக பாதுகாத்து செவ்வனவே இலக்கு குலையாமல் பரப்புரை செய்தார்.
சர்வதேச விசாரணை வேண்டும் புலத்து தமிழ் மக்கள் தாயக மக்களின் பிரதிநிதிகளான தமது சொல் கேட்டு தமக்கு ஆதரவாக நடக்க வேண்டுமே அன்றி இங்கிருந்து எம் மக்களுக்கு எது சரி என சொல்லி வேறு பாதையில் போகக் கூடாது என்றார். எம் மக்களுக்காக நாம் புலத்தில் தமக்கு பிடிக்காத வகையில் போராடுவது தவறு என்றார்.
சிறைக் கைதிகள் விடுவிப்பு பற்றி கேட்டபொழுது பயங்கரவாத சட்டம் எடுக்கப்பட்டால் அனைவருமே விடுதலை செய்யப்படுவார்கள். புதிய அரசு தமக்கு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது என்றார்.
ஒன்று மட்டும் உண்மை.. அழகாக கருத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஆடுற மாட்டை ஆடி கறப்பது போல் இப்படியும் அப்படியும் பேசி கருத்தை திணித்தார். ஒரு வழி உரையாடல் என்றபடியால் கேள்வி இல்லா நாயகனுக்கு வெற்றி தானே???
ஊமைகளின் சபையில் பேசுபவன் அறிவாளி…..!!!!
. ஐயா சுமந்திரனே.. நீங்கள் பயங்கர குற்றவாளிகளியும் நிரபராதி என வாதிட்டு காக்க வல்ல சிறந்த அறிவாளியான வழக்கறிஞர் என ஒத்துக் கொள்கின்றேன். பாவம் தமிழ் மக்களை விட்டு விடுங்கள்!
உங்கள் வாதத் திறனில் எம் மக்கள் போராட்டத்தை நசுக்காதீர்கள்…
கனடா தமிழ்தேசியக் கூட்டமைப்பில் உள்ள குகதாசன் ஐயா போன்றவர்களில் நான் பெரும் மதிப்பு கொண்டவள். ஆனாலும் சூழ்ச்சியான ஒரு கூட்டம்.. மூத்த்ரை மதிக்கும் பண்பால் நாமும் ஊமைகள் ஆனோம்…
. மக்கள் கேள்வி கேட்டு சுமந்தரனுக்கு ஏதும் சிக்கல் வரும் என பக்கத்திலேயே அரங்கில் காவல் நின்று எவரும் குரல் உயர்த்தாமல் பார்த்து பார்த்து அமைதி காக்க சொல்லி அடக்கினார் குக தாசன் ஐயா…பாவம் அவர் போன்றோர்கள் வெளுத்த்ததை பால் என்று நினைப்பவர்கள்…
குகதாசன் ஐயா போன்ற மதிப்பிற்குரியவர்கள் பலர் நிறைந்த சபை..அவை விதிக்கு .கட்டுப்பட்டோம்… தோற்றுவிட்டோம் என்ற ஒரு ஏமாற்றம்..
கேள்வி கேட்க என்றே சென்ற என் போன்ற பலரும் ஏமாற்றத்தில்… ஆனால் சிலருக்கு பெரும் மகிழ்ச்சி…
“சுமந்தரனை பார்க்க கனடாவில் தமிழ் மக்கள் திரண்டு வந்தார்கள்” என செய்தி எழுத பாய்ந்து பாய்ந்து புகைப்படமும் எடுத்தார்கள்….இருந்து பாருங்கள் முக நூலிலும் நெற்றிக் கண் திறந்து ஐயா பெரியவர் எழுதுவார்…
எங்கள் வலி எமக்குள்…. அவையடக்கம்.. என்ற பெயரில் எம் வாய்கள் மூடப்பட்டன. இது தான் இன்றைய நிகழ்வின் சாரம்.
துண்டுகளில் எழுதி கேள்வி கேட்கலாம் என பணிப்பு.. துண்டும் கொடுத்தார்கள்.. எழுத சில நிமிட அவகாசம்.. விதி முறை மீறிய குரல்கள் முடக்கப்பட்டன. இல்லை அவர் பேசட்டும் என ஒரு நடிப்பு… என்னாமா நடிக்கிறார்…சுமந்திரன்..
கேள்வி எழுதிய ஒருவர் புலம்பினார்…
“நான் எழுதி கொடுத்த கேள்வியை வேண்டுமென்றே திரிபு படுத்தி படுத்தி நகைச்சுவை ஆக்கி அவையின் முன் அவமானப் படுத்தினார் சுமந்திரன்” என்றார்.
” தமிழ் மக்களின் சிக்கலில் தமிழக மக்களும் சாட்சியம் கூற வாய்ப்புண்டா?” என எழுதிக் கொடுக்கப்பட்ட கேள்வி “தமிழக மக்கள் மட்டும் சாட்சியம் கூறலாமா?” என சுமந்திரன் வாசித்து அவரின் இரசிகர்களை நகைசுவை சொல்லி சிரிக்க வைத்தார்..
கேள்விகள் எழுதி கொடுத்த எல்லோருக்கும் அதிருப்தி… அத்துணை விரைவில் எழுத முடியவில்லை… என சிலர் வேதனை பகிர்வு..
மக்கள் பிரதிநிதியிடம் கேள்வி குரல் எழுப்ப தடை. மீறி கேட்டால் அடக்க காவலுக்கு பாதுகாவலர் இருவர்…
சுமந்திரனுக்கு மக்களிடம் இருந்து எதற்கு பாதுகாப்பு? மக்கள் என்ன பயங்கரவதிகளா? மக்கள் கேள்வி என்ற அணு குண்டை வீசி சுமந்தரனை தாக்காமல் இருக்க இரண்டு பாதுகாவலர்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தார்கள் சீருடையில்.
“நீங்களாவது அவர்களின் அடக்குமுறையை மீறி கேள்வி கேட்டு இருக்கக் கூடாதா?” சிலர் என்னிடமும் கோபித்தார்கள்.
கனடா தமிழ்தேசிய கூட்டமைப்பில் மூத்தோரே அதிகம் ….அவர்களில் பலர் போராட்ட காலங்களில் எம்மோடு இருந்தவர்கள்.. இப்பொழுது கூட்டமைப்பில் ஏதோ வெட்டி விழுத்தும் என நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். அது அவர்கள் கருத்து… அவர்கள் மனம் நோகும் வகையில் அவர்கள் ஒழுங்கமைத்த கூட்டத்தில் நான் கலகம் விளைவித்தேன் என்று இருக்கக் கூடாது என அமைதி காத்தேன் என புரியவைத்தேன்.
அத்தோடு நான் தனி நபராக அங்கு செல்லவில்லை. கனடியத் தமிழ் வானொலியின் பிரதிநிதியாக சென்று இருந்தேன். மக்கள் வானொலி என்ற கட்டுக் கோப்பை காக்கும் பொறுமை, பொறுப்பு என்னை கட்டிப் போட்டது.
ஆனால் கனடாத் தமிழ் கூட்டமைப்பினர் நிகழ்வுக்கு ஆதரவு தந்த மற்றும் வருகை தந்த ஊடகங்கள் என பலரை பட்டியலிட்டார்கள்.
ஆனால் கனடியத் தமிழ் வானொலியின் பிரதிநிதிகளாக நான் மற்றும் சக கலைஞர் வை. கே.நாதன் போன்றோர் அங்கு கலந்திருந்தும் எங்கள் வானொலியை இது மக்கள் வானொலியாக ஒலிக்கும் தமிழ்த் தேசிய வானொலி என்ற ஒரே காரணத்திற்காக வேண்டுமென்றே புறக்கநிதார்களோ என எண்ணத் தோன்றியது.
மக்கள் பிரதிநிதியை கேள்வி கேட்க மக்களுக்கும் உரிமை இல்லை. மக்கள் குரலான ஊடகங்களுக்கும் அனுமதி இல்லை.
ஊமைகளாக இருந்த நாம் “சுமந்தரனின் பேச்சை கேட்க ஆர்வத்தோடு இவர்கள எல்லோரும் கலந்து கொண்டார்கள்” என்ற கொட்டமிட்ட செய்திகள் இத்தனை கனடியத் தமிழ் மக்கள் என்ற எண்ணிக்கைக்குள் அடங்கினோமே என வேதனையோடு வெளியே வந்தோம்..
மொத்தத்தில் பெரிய சிவன் ஆலயத்தில் படையல் பிரசாதம் இன்றி ஒரு பிரசங்கம் கேட்டு வெளியே வந்தோம்…
ஒன்று மட்டும் உறுதி!
எந்த சாமியும் ஆசாமியும் எம் மக்களுக்கு கை கொடுக்கப் போவதில்லை!.. எம் மக்களுக்கு உண்மையின் பெரு நெருப்பு ஒன்றே துணை!!
தாயகத்தில் உள்ள மக்களின் தலை விதி இந்த உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்வதில் தான் உள்ளது! பார்க்கலாம்.. எழுதிச் செல்லும் விதியின் கையாக எந்த விரல்கள் இனி வரும் காலத்தில் தமிழர் தலைவிதியை எழுதும் என்று.. அது வரை.. இது போன்ற தலை விதிகள் எம் தலையில் விரும்பியோ விரும்பாமலோ எழுதப்படவே செய்யும்!
சரி உங்களிடமாவது நான் எழுதிக் கொடுத்த கேள்விகளை முன்வைக்கின்றேன்.
நன்றி: சிவ வதனி பிரபாகரன்