இறைச்சிக்காக விலங்குகளை கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வனவிலங்கு ஆர்வலர்கள் உடல் முழுவதும் ரத்தத்தை பூசிக்கொண்டு சாலையில் படுத்து போராடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகரில்தான் இந்த நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது.
சர்வதேச அளவில் இறைச்சி உண்பதற்கு எதிராக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, மே மற்றும் செப்டம்பர் மாதங்களின் இறுதி நாட்கள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரான்ஸில் உள்ள 269 Life என்ற விலங்குகள் நல அமைப்பு மற்றும் இறைச்சிக்கு எதிரான சமூக ஆர்வலர்கள் சிலர், நூதன போராட்டத்தில் கடந்த 27ஆம் தேதி ஈடுபட்டனர்.
பாரீஸில் உள்ள Place du Palais Royal என்ற பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய உள்ளாடைகளுடன் உடல் முழுவதும் போலியான ரத்தத்தை பூசிக்கொண்டு, இறந்ததை போல் தரையில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆடுகளை கட்டி தொங்கவிட்டு பிறகு, அவற்றின் தலையை துண்டித்து கொல்வது போல, சில ஆண்கள் தங்களது உடலில் ரத்தத்தை பூசிக்கொண்டு ஆடுகளை போல தொங்கியவாறு காட்சியளித்தது காண்பவர்களை மிரள வைத்தது.
இது குறித்து பேசிய சமூக ஆர்வலர்கள், “விலங்குகளை கொல்வதால் அவைகள் அடையும் சித்ரவதையை அனைவரும் கண்கூடாக பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
எந்த காலத்தில் உடலுக்கும் மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை தருவது காய்கறி உணவுகள்தான் என்பதை மக்கள் உணர்ந்து இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும்” என்று கூறினர்.