சென்னை: இளம் பெண்கள் 3 பேர் டிப்-டாப் உடையில் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கும் காட்சி வாட்ஸ்அப்பில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த கோரிக்கைகளை அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளது. பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்குதான் முதல் கையெழுத்து என்று அறிவித்துள்ளது.
பூரண மதுவிலக்கு கொள்கையில் அதிமுகவை தவிர அனைத்து கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன.பூரண மதுவிலக்கு போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிர் இழந்தார். அதன் பிறகு போராட்டத்தின் வீரியம் அதிகரித்தது. சென்னையில் கீழ்பாக்கம் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைகளை சூறையாடினர்.
தொடர்ந்து போராட்டம் அதிகரித்து வந்தது.
இதற்கிடையில் பெரியவர்கள் மட்டும் அல்லாமல் சிறுவர்கள் மது அருந்தும் காட்சிகள் வாட்ஸ்அப் மூலம் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் காதல் விரக்தியில் போதையில் சாலையில் விழுந்து கிடந்ததும் அதிர்ச்சி அளித்தது.
45 விநாடிகள் ஓடும் அந்த வாட்ஸ்அப் வீடியோ காட்சியில் 3 இளம் பெண்களும் டி-சர்ட், பேன்ட் அணிந்து டிப்டாப்பாக உள்ளனர். தோள்பை போட்டுள்ளனர். அதில், இரண்டு பேர் தங்களுக்கு மதுபானம் கொடுங்கள் என்று டாஸ்மாக் விற்பனையாளரிடம் கேட்கின்றனர்.
இதைத் தொடர்ந்து அவர் பாட்டிலை கொடுத்தவுடன் அதை எடுத்துக் கொண்டு தனது தோள் பைக்குள் வைத்தபடி சர்வ சாதாரணமாக செல்கின்றனர். இதை அருகில் நிற்கும் இளைஞர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
மேலும், தூரத்தில் நிற்பவர்கள் சிலர் ஆச்சரியத்துடன் அந்த காட்சிகளை செல்போன்களில் படம் பிடிக்கின்றனர்.
இருப்பினும் அதைப் பற்றி இளம் பெண்கள் கவலைப்படாமல் மதுபாட்டிலை எடுத்து செல்கின்றனர். இந்த வீடியோ காட்சிகள் மேற்கு மாம்பலத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
In chennai school girls are buying the alcohol in wine shop