நியூயார்க்: பெண் மேக்கப் கலைஞர் ஒருவர் தன் செல்ல நாயைப் போன்றே மேக்கப் போட்டுக் கொண்டு, அந்த வீடியோவை இணையத்தில் உலவ விட்டுள்ளார்.
வீடுகளில் மனிதர்களுக்கு இணையாக வளைய வருபவை நாய்கள். உலக அளவில் நாய் வளர்ப்போரில் பலர், அவர்களது நெருங்கிய உறவினரைக் காட்டிலும் தங்கள் வீட்டு நாயையே அதிகம் நேசிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
அந்தளவுக்கு செல்லப்பிராணியாக நாய்கள் பேர் போனவை. இந்நிலையில், இலானா என்கிற அமெரிக்க மேக்கப் கலைஞர், தன் செல்ல நாய் மீது கொண்ட அதீத பாசத்தால், அதன் முகம் போன்றே தனக்கும் மேக்கப் போட்டுள்ளார்.
இலானாவிடம் இருப்பது ‘சைபீரியன் ஹஸ்கி’ என்கிற வகையைச் சேர்ந்த நாய். அந்த நாய் மீது தான் கொண்ட அளவில்லாத பாசத்தைக் காட்டுவதற்காக, அந்த நாயின் முகத்தைப் போன்றே அச்சு அசலாக தானும் மேக்கப் போட்டுக் கொண்டுள்ளார் அவர்.
நாய் மேக்கப்புடன், தனது நாய் அருகில் நின்று வீடியோ எடுத்துக் கொண்டுள்ளார் இலானா. கூடவே தனது மேக்கப் காட்சிகளையும் அவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இலானாவின் மேக்கப்பை பார்க்கும் போது வித்தியாசமே இல்லாமல், தத்ரூபமாக உள்ளது. தனது நாயின் முகம் போலவே தத்ரூபமாக தன் முகத்தின் மீது அவர் மேக்கப் போட்டுள்ளார்.
யூடியூப்… கடந்த ஆகஸ்ட் மாதம் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவை இதுவரை எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.