கோபி : கள்ளக்காதலனை திருமணம் செய்ய குழந்தையை கொலை செய்தேன் என்று கொடூர தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா நம்பியூர் அருகே உள்ள கெடாரை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (38). இவர் கார் டிரைவர்.
இவருக்கும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஷோபனாவுக்கும் கடந்த 6 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணமான 6 வது மாதத்திலேயே தம்பதியினருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே ஷோபனா, கணவனைப் பிரிந்து சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது கர்ப்பமாக இருந்தார்.
இங்கு அவருக்கு பெண் குழந்தைபிறந்தது. குழந்தைக்கு கிருஷ்ணபிரியா என்று பெயர் வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன் ஷோபனா, தாய் கண்ணம்மாள், தந்தை கணேசன், அண்ணன் ஆனந்த் ஆகியோருடன் கெடாரை கிராமத்துக்கு வந்து, தனியாக வீடு எடுத்து குடியேறினார்.
கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி, கிருஷ்ணபிரியாவிற்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே கிருஷ்ணபிரியா இறந்தாள். குழந்தையின் உடல் கெடாரையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஷோபனாவின் கணவர் வெள்ளியங்கிரி, நம்பியூர் போலீசில் கொடுத்த புகாரில், ‘’ மகள் கிருஷ்ணபிரியாவின் சாவில் சந்தேகம் உள்ளது’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, குழந்தையின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். உடல் உறுப்புகளை ரசாயன பரிசோதனை செய்து பார்த்தபோது உணவில் விஷம் கலந்து கொடுத்து குழந்தை கொலை செய்யப்பட்டுஇருப்பது தெரியவந்தது.
இதுபற்றி ஷோபனாவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை போலீசார் தேடியபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.
இந்த நிலையில் ஷோபனா நேற்று நம்பியூர் கிராம நிர்வாக அதிகாரி சுமதி முன் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் ஷோபனா கூறியதாவது: கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்த எனக்கு கோபியை சேர்ந்த ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவரை திருமணம்செய்யவும் முடிவு செய்தேன்.
2வது திருமணம் செய்வதற்கு மகள் கிருஷ்ணபிரியா தடையாக இருந்ததால், தயிர் சாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்துகொடுத்தேன்.
சந்தேகம் வராமல் இருக்க மயங்கிய நிலையில் கிடந்த மகளை தனியார் மருத்துவமனைக்குகொண்டு சென்றேன்.
ஆனால் வழியிலேயே கிருஷ்ணபிரியா இறந்துவிட்டாள். இவ்வாறு ஷோபனா கூறினார். இதையடுத்து, ஷோபனாவை கோபி 2வது மாஜிஸ்திரேட் பழனிவேலு முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில்அடைத்தனர்.