தாம் லிபிய அதிபராக இருந்த முவம்மர் கடாபியின் தோளில் கைபோடவில்லை என்றும், அவர் தனது தோளில் கைபோட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார் சி்றிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
அனைத்துலக சமூகத்தினால் ஓரம்கட்டப்பட்ட கடாபியின் தோளில் கைபோட்டுக் கொண்டு ஒளிப்படம் எடுத்தவர்களால், அனைத்துலக ரீதியாக சிறிலங்கா தனிமைப்படுத்தப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“லிபிய அதிபர் முவம்மர் கடாபியின் தோளில் கையைப் போட்டிருந்ததால் தான், மேற்குலக நாடுகள் சிறிலங்காவுடன் விலகியிருந்தன என சிலர் குறிப்பிட்டனர்.
இவ்வாறு கூறப்படும் ஒளிப்படத்தில், எனது தோளில் தான் கடாபி கைபோட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு போரின் இறுதி மாதங்களில், சிறிலங்காவின் வெளிநாட்டு நிதிக் கையிருப்பு வேகமாக கரைந்து போனது.
நிதியை வழங்குவதை இழுத்தடிக்குமாறு மேற்குலக நாடுகள், அனைத்துலக நாணய நிதியத்துக்கு அழுத்தம் கொடுத்தன.
அப்போது எனது ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்றுக் கொண்டு, சிறிலங்காவுக்கு 500 மில்லியன் டொலரை முவம்மர் கடாபி வழங்கினார்.
அப்போது அந்த உதவி கிடைத்திராது போயிருந்தால், போர் வெற்றி கொள்ளப்படுவதற்கு முன்னர், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கும்.
போரை நிறுத்துவது குறித்து பேச்சு நடத்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எட் மில்லிபான்டும், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கோச்னரும், சிறிலங்கா வந்த போது எம்பிலிப்பிட்டிய பகுதிக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மரவள்ளிக்கிழங்கை சாப்பிடக் கொடுத்து அனுப்பினோம் என்றும் கூறினர்.
போரின் இறுதிக்கட்டத்தில், இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு எனக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வருகை தந்த பிரித்தானிய, பிரெஞ்சு அமைச்சர்களுக்கு என்ன உணவு வழங்கப்பட்டது என்பது எனக்குத் தற்போது ஞாபகத்தில் இல்லை.
ஆனால், போரை நிறுத்துவதற்கு நான் மறுத்தேன் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.
வெளிநாட்டின் துன்பங்களுக்கு நான் அடிபணியாததால் தான், நாம் இன்று பயங்கரவாதம் இல்லாத நாட்டில் வாழ்கின்றோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அமெரிக்க பிரேரணை எந்த வாக்கெடுப்புமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது இராஜதந்திர வெற்றி என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
ஜெனிவா தீர்மானம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அமெரிக்க பிரேரணை எந்த வாக்கெடுப்புமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது இராஜதந்திர வெற்றி என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
சர்வதேச சட்டவல்லுனர்களின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக பொறிமுறைக்கு வெளிநாடுகளின் நிதி உதவியே கிடைக்கபெறவுள்ளது.
இதனால் இலங்கையின் பொறிமுறை சர்வதேச பலமிக்க நாடுகளின் நிதியினால் முன்னெடுக்க வேண்டியேற்படும்.
ஆக்கிரமிப்பாளர் பிடியிலிருந்து இலங்கையை காப்பாற்றியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. எனினும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.
அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையின் ஊடாக இலங்கைக்கு எந்தவொரு நலனும் கிடைக்கபெற போவதில்லை.
இதனால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனையோ அல்லது அரசியல் ரீதியாக சாத்தியமற்றது என்பதனை புரிந்துகொள்ளாமல் அரசாங்கம் செயற்படுகின்றது.
நாட்டில் பாதுகாப்பிற்கு உறுதுணையாக உள்ள இராணுவ வீரர்களை பாதுகாக்க வேண்டியதே அரசாங்கத்தின் பிரதான கடமையாகும்.
அமெரிக்கா பிரேரணையின் 6 மற்றும் எட்டாவது பரிந்துரைகள் புனிதமான பொறுப்புளுக்கு எதிரானதாகும்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டமை அரசியலை மையமாக கொண்டு இடம்பெற்றதல்ல.
அது சமுத்திர ரீதியான ஏற்பட்ட பிரச்சினை என்பதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை என்பது அரசியல் ரீதியான நிபந்தனையை மையமாக கொண்ட சலுகையாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிகழ்ச்சி நிரலை இலங்கையின் மீது சுமத்தும் திட்டத்தை மையமாக கொண்டே குறித்த சலுகையை மீளப்பெறுவதற்கு என்னுடைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
சர்வஜன வாக்குரிமையின் ஊடாக மக்கள் அரசாங்கத்தை நிறுவியது நாட்டிற்கு ஏற்ற தீர்மானங்களை எடுப்பதற்கு என்பதனை மறந்துவிடக்கூடாது .
நான் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மும்மர் கடாபியின் தோளில் கையை வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.
எனினும் இது தொடர்பில் பிரபலமான அந்த புகைப்படத்தில் எனது தோளில் கடாபிதான் கையை வைத்திருந்தார்.
பரிந்துரைகளை நிறைவேற்றாவிடின் ஐ.நா.வெறுமனே இருந்துவிடாது- எச்சரிக்கை விடுக்கின்றது ஜே.வி.பி.
ஐக்கிய நாடுகள் சபையுடன் நட்புரீதியில் உறவாடுவதன் காரணமாக அனைத்தையும் சாதிக்க முடியும் என அரசாங்கம் கனவுகாணக் கூடாது.
ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தாவிடின் நிலைமைகள் மிகமோசமானதாக அமையும் என்பதை அன்பாக ஐ.நா.வலியுறுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
யுத்தம் முடிவடைந்தபோதே வடக்கின் பக்கம் மஹிந்த ராஜபக் ஷ திரும்பிப்பார்த்திருந்தால் இன்று இவ்வளவு மோசமானதொரு நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்காது. உடனடியாக தீர்க்கவேண்டிய தமிழ் மக்களின் பிரச்சினைகளை காலம் கடத்தி கொண்டுசென்றமையே இத்தனைக்கும் காரணமாகும் எனவும் அவர்கள் வலியுறுத்தினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றபோதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்
ஐ.நா. பேரவையுடன் நட்பு ரீதியில் செயற்படுவதனால் எம்மால் அனைத்து பிரச்சினைகளையும் சமாளிக்கலாம் என்று நினைப்பது தவறானதாகும்.
அவ்வாறு ஒரு எண்ணத்தில் இருந்து எதையும் சாதிக்க முடியாது. பிரதமர் ரணிலும் ஜனாதிபதி மைத்திரியும் ஐக்கிய நாடுகளின் நம்பிக்கையை வென்றதனால் இலங்கையின் மீதான அழுத்தங்கள் குறைவடைந்துள்ளதாக கொண்டாடுகின்றனர்.
ஆனால் இவை தொடர்ந்தும் நிலைக்கப்போவதில்லை. நட்பு ரீதியில் எந்தப்பிரச்சினைக்கும் தீர்வை எட்ட முடியாது.
ஐ.நாவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அவர்களின் அனைத்து செயற்பாடுகளும் அமையும். அதை எமது அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை எதிர்பார்த்ததை விடவும் அழுத்தம் குறைந்து வந்துள்ளமையினால் நாம் சாதித்துவிட்டதாக கூறுகின்றனர்.
ஆனால் இவர்கள் வலியுறுத்தியுள்ளதை குறுகிய காலத்துக்குள் செயற்படுத்தாவிடின் நிலைமை மிக மோசமானதாக அமையும்.
அதேபோல் சர்வதேசத்தின் தலையீடு எமது நாட்டுக்கு வரக்கூடாதெனின் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேசக் கதவுகளை மூட வேண்டும்.
இலங்கை மீதான அழுத்தங்களில் இருந்து நாம் தப்பிக்க வேண்டுமாயின் முதலில் இலங்கையில் மனித உரிமை செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்.
இலங்கை வாழ் மக்கள் அனைவரின் உரிமைகளையும் சம அளவில் பலப்படுத்த வேண்டும். இலங்கையில் நம்பத்தகுந்த வகையில் சட்டதிட்டங்களை பலப்படுத்தவேண்டும்.
அதேபோல் இலங்கையில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் நம்பத்தகுந்த வகையில் நீதி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
எமது நாட்டில் மனித உரிமைகளை பலப்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் கற்பிக்கவேண்டிய அவசியம் இல்லை.
உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளை மீறியவர்கள் எமக்கு மனித உரிமைகளை கற்பிப்பது வேடிக்கையான விடயமேயாகும்.
ஆனால் எம்மீதும் தவறுகள் இல்லாமலும் இல்லை. கடந்த காலங்களில் இலங்கையில் மிக மோசமான அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்ததை மட்டுமே பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
அதன் பின்னர் இங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். ஆகவே கடந்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
யுத்தம் முடிவடைந்தபோதே வடக்கின் பக்கம் மஹிந்த ராஜபக் ஷ திரும்பிப்பாத்திருந்தால் இன்று இவ்வளவு மோசமானதொரு நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்காது.
அன்று மஹிந்த விட்ட சிறு சிறு தவறுகள் இன்று மிகப்பெரிய பூகம்பமாக எம்மையே அழிக்கும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளன.
இன்று நாட்டுக்கு எதிரான பலமான அழுத்தங்கள் ஏற்பட பிரதான காரணம் மஹிந்த ராஜபக்ஷவேயாகும். உடனடியாக தீர்க்கவேண்டிய தமிழ் மக்களின் பிரச்சினைகளை காலம் கடத்தி கொண்டுசென்றமையே இத்தனைக்கும் காரணமாகும்.
தமிழ் மக்களும் எமது மக்கள் என்ற நிலைபாட்டை அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீர்வை பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.
அதேபோல் வடக்கில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளன. முன்னைய அரசாங்கம் தமிழ் மக்களின் பாதுகாப்பு விடயத்தில் தவறிழைத்மை அனைவராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதை இப்போதும் பேசாது இந்த அரசாங்கம் வடக்கில் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடும்போது அப்பாவித் தமிழ் இளைஞர்கள் இன்னும் சிறைகளில் அடைபட்டு வாழ்வது எந்தவகையிலும் நியாயமற்றதாகும்.
ஆகவே அப்பாவி தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது வரையிலும் அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரியவில்லை.
இலங்கையில் அனைத்து மக்களின் ஆதரவிலும்தான் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுகின்றனர். ஆனால் எமது நாட்டின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசம் வலியுறுத்திய பின்னரே இங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு நாம் நடந்துகொள்வது வெட்கப்படவேண்டிய விடயமாகும்.
ஆரம்பத்தில் இலங்கை தொடர்பில் குற்றச்சாட்கள் முன்வைக்கப்பட்டபோதே இலங்கையில் நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் மற்றும் உள்ளக பொறிமுறைகளை அடிப்படை மட்டத்திலேனும் முன்னெடுத்திருந்தால் இன்று அவசர அவசரமாக எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
ஆனால் இப்போதும் நாம் சர்வதேசத்தை சமாளிக்க முடியும் என்ற நிலையில் செயற்பட்டால் எதிர்காலத்தில் முன்வைக்கும் நடவடிக்கைள் மிகமோசமானதாக அமையும்.
ஆகவே இப்போது காலதாமதம் இன்றி அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அரசாங்கம் அனைத்து நடவைக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றார்.