பீகார் தேர்தல் களம் சுறுசுறுப்படைந்து வருகிறது. ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இரு மகன்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வைஷாலி மாவட்டத்தில் உள்ள மாகாவு தொகுதியில் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுகிறார். இளைய மகன் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் தேர்தலில் நிற்கிறார்.
இருவரும் கடந்த சனிக்கிழமையன்று நல்ல நாள் பார்த்து வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். வேட்பு மனுவில் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் தனக்கு 25 வயது என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் தனது வேட்புமனுவில் 26 வயதென்று குறிப்பிட்டுள்ளார்.
லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், கடந்த 2010ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு பாஸ் செய்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். இவருக்கு ரூ. 1.20 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் தனது மனுவில் கூறியுள்ளார்.
அதே வேளையில் தேஜஸ்வி யாதவ், கடந்த 2006ஆம் ஆண்டு 9ஆம் வகுப்பு முடித்ததாகவும் ரூ. 1.40 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிகார் தேர்தல் துணை ஆணையர் லட்சுமணன் கூறுகையில், ” அளிக்கப்படும் வேட்பு மனுக்களை ஏற்பது மட்டுமே தேர்தல் அலுவலரின் பணியாகும். வேட்பு மனு பரிசீலனையின் போதுதான் அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் சரியானதா இல்லையா என்பது குறித்து பரிசோதிக்கப்படும்” என்றார்.
இது குறித்து லாலு தரப்பிலோ, ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தரப்பிலோ அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் தேஜஸ்வி யாதவுக்கு நெருக்கமான நண்பர்கள், லாலுவின் மூத்த மகனை விட தேஜஸ்வி 2 வயது குறைந்தவர் என்று கூறுகின்றனர்.