சென்னை: மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் அஞ்சலி செலுத்தினார். 12 வயதில் இருந்து நடித்துக் கொண்டிருந்த மனோரமா தனது 78வது வயதில் மரணம் அடைந்தார்.
சென்னை தி. நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் அவரது தோழி சசிகலாவும் வந்து மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பிறகு ஜெயலலிதா செய்தியாளர்களிம் கூறுகையில், மனோரமா ஒரு பெண் நடிகையர் திலகம். அவரின் மரணம் ஈடு இணையில்லாத இழப்பு ஆகும்.
மனோரமாவை போன்று ஒரு சாதனையாளர் இதற்கு முன்பு இருந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை. அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை எந்த காலத்திலும் யாராலும் நிரப்ப முடியாது.
அவர் என்னை அன்போடு அம்மு என்று தான் அழைப்பார். அவர் எனக்கு பலமுறை பாசத்தோடு உணவு பரிமாறி உபசரித்தவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மனோரமா மீது தனிப்பாசம் உண்டு.