சென்னை: ஆயிரக்   கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் பழம்பெரும் நடிகை “ஆச்சி” மனோரமாவின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. மாலையிட்ட மங்கையில் அறிமுகமாகி கடைசி வரை தனது நகைச்சுவை நடிப்பாலும், குணச்சித்திர நடிப்பாலும் உலகத் தமிழர்கள் மனதில் நகைச்சுவை அரசியாக வலம் வந்த மனோரமா நேற்று இரவு மரணமடைந்தார்.மாரடைப்பு மற்றும் முதுமை காரணமாக அவர் மரணத்தைத் தழுவினார்.

ஆச்சி என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்பட்ட மனோரமாவின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. திரையுலகினர், பல்துறையினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல தரப்பினரும் மனோரமாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு மேல் மனோரமாவின் உடல் இறுதிச் சடங்குக்காக மயானத்திற்கு எடுத்து வரப்பட்டது. தி.நகர் இல்லத்திலிருந்து திரைத் துறையினர், பல்துறையினர், ரசிகர்கள் சூழ இறுதி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது மனோரமாவின் உடல்.

இறுதி ஊர்வலம் நெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் மனோரமாவின் உடல் எடுத்துச் வரப்பட்டது. ஊர்தியில் நடிகர்கள் வடிவேலு, மனோபாலா, கோவை சரளா, பொன் வண்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

வழியெங்கும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி தங்களை இத்தனை காலமாக சிரிக்க வைத்த அந்த நகைச்சுவை அரசிக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர்.

ஆயிரக்கணக்கில் மக்கள் இறுதி ஊர்வலத்தில் திரண்டு வந்ததாலும், வழி நெடுகிலும் பல ஆயிரம் பேர் காத்திருந்ததாலும் மிக மிக மெதுவாக மனோரமாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ஊர்தி நகர்ந்து வர நேரிட்டது.

இறுதியில், டிஜிபி அலுவலகம் பின்புறம் உள்ள இடுகாட்டுக்கு உடல் வந்து சேர்ந்தது. அங்கு மனோரமாவின் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர். இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் கட்டுக்கடங்காமல் கூடி விட்ட கூட்டத்தால் சடங்குகளைச் செய்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் போலீஸார் தலையிட்டு கூட்டத்தை சற்று கலைத்த பின்னர் மனோரமாவின் ஒரே மகன் பூபதி சடங்குகளைச் செய்தார். அதைத் தொடர்ந்து மனோரமாவின் சிதைக்கு பூபதி தீ மூட்டினார்.

முன்னதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இடுகாட்டுக்கு முன்கூட்டியே வந்து அங்கு தகனம் செய்வதற்கான இடத்தையும், ஏற்பாடுகளையும் நேரில் பார்வையிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version