முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தாம் கைது செய்யப்படவுள்ளதை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றுமுன்தினம் மாலை, பிள்ளையானிடம் விசாரணை நடத்தி, அவரைக் கைது செய்வதற்காக உத்தரவுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்தனர்.
ஆனால், பிள்ளையான் வீட்டில் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறியிருந்தனர்.
எனினும், பிள்ளையானின் தனிப்பட்ட வாகனம் அப்போது, அந்த வீட்டில் நின்றதால், குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.
இதையடுத்து. அவரது வீட்டைச் சுற்றி, புலனாய்வு அதிகாரிகள் இரகசியமாக நிறுத்தப்பட்டனர்.
அதேவேளை, மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் சகோதரரின் இல்லத்தையும், குற்றப் புலனாய்வு அதிகாரிகள் , சனிக்கிழமை இரவு சோதனையிட்டனர்.
எனினும், பிள்ளையான் சிக்கவில்லை. தாம் கைது செய்யப்படவுள்ள தகவலை அவர், புலனாய்வு அதிகாரிகள் சிலர் மூலம் முன்கூட்டியே அறிந்தே, இறுதி நேரத்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டு, கொண்டு செல்லப்படும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாவதை தவிர்க்கவே அவர் தலைமறைவாகியதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, நேற்றுமாலை 5.25 மணியளவில், பிள்ளையான் சட்டத்தரணி ஒருவருடன், விசாரணைக்காக, கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு தலைமையகத்துக்கு வந்தார்.
அவரிடம், குபுறுகிய நேர விசாரணை நடத்தப்பட்டதையடுத்து, உடனடியாகவே கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நேற்று இரவிரவாக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை மட்டுமன்றி, வேறு பல படுகொலைச் சம்பவங்கள் குறித்தும், பிள்ளையானிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, நேற்று கைது செய்யப்பட்ட பிள்ளையான், இன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில், முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.