கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப்பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவை காப்பாற்றி, கொழும்புக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருந்த அலி சாகிர் மௌலானா, அதுபற்றிய தகவல்களை கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.
‘கருணாவின் செயற்பாடுகளில் மாற்றத்தை அவதானித்த போது, அதுபற்றித் நான் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறினேன்.
அதற்கு அவர், அவருக்காக கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக பதிலளித்தார்.
இந்த விவகாரம் குறித்து, கரு ஜெயசூரிய, திலக் மாரப்பன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ ஆகியோரிடம் கலந்துரையாடினேன்.கவனமாக கையாளுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஒஸ்லோவில் நடந்த பேச்சுக்களின் பின்னர் வன்னி திரும்பிய கருணா, அங்கிருந்து மட்டக்களப்புக்குத் திரும்ப உலங்குவானூர்தி ஒன்றை ஒழுங்கு செய்து தருமாறு பாதுகாப்புச் செயலர் ஒஸ்ரின் பெர்னாண்டோவிடம் தகவல் பரிமாறுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் பாதுகாப்புச் செயலர் ஒஸ்ரின் பெர்னாண்டோவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அவர், மட்டக்களப்பு திரும்பியதும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பு எதையும் வைத்துக் கொள்ளவில்லை.பின்னர், வெருகலில் இருந்து வந்து கடற்புலிகள் தாக்குதல் தொடுத்துள்ளதாகவும், தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கருணா கூறினார்.
நான் அதைப் புரிந்து கொண்டேன். போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களுக்கு அதுபற்றி அறிவித்தேன்.
கருணாவை கொழும்புக்கு அழைத்துச் செல்ல ஒழுங்கு செய்தேன். அது ஆபத்தானது. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. நாம் அதிகாரத்தில் இருக்கவில்லை. எனினும் நாட்டுக்காக நான் அந்த ஆபத்தான காரியத்தை மேற்கொண்டேன்.
கருணாவையும் அவரது குழுவினரையும் எனது வாகனத்தில் ஏற்றினேன். எனது பாதுகாவலர்கள் அவரைச் சோதனையிட்டனர். அவர் ஆயுதம் தரித்திருக்கவில்லை. ஒரு பயணப் பெட்டியை மட்டும் வைத்திருந்தார். அதை திறந்து காட்டினார்.
அதில் முழுவதும், விடுதலைப் புலிகளின் முகாம்கள் பற்றிய வரைபடங்கள் தான் இருந்தன.
கருணாவுடன் ஐந்து பேர் வந்தனர். தம்புள்ளவில் நாங்கள், இராப்போசனம் அருந்தினோம்.
நான் அவரை பாதுகாப்பாக ஜெய்க்ஹில்டன் வரை அழைத்துச் சென்று விட்டேன்.” என்றும் கூறியுள்ளார்.