தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் அமரர் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இறுதிக் கிரியைகள் பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று பரந்தன் சிவபுரம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்காக அன்னாரின் பூதடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
அமரர் தமிழினியின் இறுதி ஊர்வலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச அரசில் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், நாட்டுப்பற்றாளர்கள், பாடசாலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் பங்கெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழினி கடந்த மே மாதம் 15ஆம் திகதி மஹரகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழினி, பின்னர் குடும்ப வாழ்வில் தம்மை முற்றாக இணைத்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.