விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் மரணச் செய்தி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் பிணைந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு துயரச்செய்தியாக வந்திறங்கியிருக்கிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராகவும் அரசியல்துறை பொறுப்பாளராகவும் தான் சார்ந்த அமைப்பின் முகங்களில் ஒன்றாகவும் வெளித்தெரிந்த காரணத்தினால் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெரும் கொடூரங்களை அனுபவித்த ஒரு போராளிகளில் ஒருவர் தமிழினி.

இன்று சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு விடயமாக மாறியிருக்கும் செய்தியையும் தமிழினியின் மரணம் தொடர்பான செய்தியையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே நோக்கவேண்டியிருக்கிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு போர்முடிவுற்ற கையோடு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அவர், கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு விசாரணையின் பின்னர் வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டார்.

அதன்பின்னர் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்ட மா அதிபர் திணைக்களம்  கைவிரித்தகையோடு பூந்தோட்டம் முகாமில் ‘புனர்வாழ்வு’ அளிக்கப்படுவதற்கு சம்மதம் தெரிவித்ததால் விடுதலைசெய்யப்படலாம் என்ற ‘கோட்டாபய’ நீதியின் அடிப்படையில் மூன்று வருடங்களின் பின்னர் விடுதலையானவர் தமிழினி.

மேலே குறிப்பிட்ட விடயங்களை ஒரு சில வசனங்களில் அடக்கிவிடக்கூடிய சம்பவங்களாக அடுக்கிக்கொண்டாலும் அந்த மூன்று வருடங்களில் தமிழின விடுதலைக்காக போராடப்புறப்பட்ட போராளி ஒருவர் இலங்கையின் சிறைகளில் அனுபவித்த கொடுமைகளும் வேதனைகளும் சொல்லிமாளாதவை.

ஆனால், தடுப்பிலிருந்த தமிழினி அனுபவித்த கொடுமைகளைவிட விடுதலையான பின்னர் அவர் அனுபவித்த கொடுமைகள்தான் அதிகம் எனலாம்.

இவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோதே இவரின் விடுதலைக்காக வாதாடிக்கொண்டிருந்த தமிழ் வழக்கறிஞர் ஒருவர் இவருக்காக ஆஜராவதை நிறுத்திக்கொண்டார்.

Thamilini‘உண்மையான புலிகள் எல்லாம் இறந்துவிட்டார்கள். தமிழினி அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் துரோகி‘ என்று அறிவிக்கப்பட்ட அநாமதேய அழுத்தங்களின் அடிப்படையில் அந்த வழக்கறிஞர் தனது பணியை இடைநிறுத்திக் கொண்டார்.

மறுபுறத்தில், இப்படியொரு புலியை விடுதலை செய்திருக்கிறீர்களே?என்று சிங்கள இனவாதிகள் தங்கள் பங்குக்கு அரசுக்கு அழுத்தம் வேறு.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர் தரப்பிலிருந்து தமிழினி எதிர்நோக்கிய அவமானங்களும் ஏளனங்களும்தான் என்று இன்னொரு பட்டியல்.

போர்முடிந்த 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் –

‘இறந்த புலிகள்தான் வேண்டும். உயிருடன் உள்ள புலிகள் வேண்டாம்’ என்ற விநோத மனநிலையுடன் இறுதிப்போரில் சரணடைந்த போராளிகளையெல்லாம் ஒருவித கையாலாகாதவர்களாகவும் கழிவெச்சங்கள் போலவும் பார்த்த மகா கொடுமை நிலவிய காலத்தில் தமிழினியும் அந்த அக்னிக்குண்டத்தில் குதித்தெழுந்து ‘தூயபுலி’ என்று நிறுவுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்.

புனர்வாழ்வு என்ற பெயரில் போராளிகளை கழுவிச் சுத்தம் செய்வதாக சர்வதேசத்துக்குக் காண்பிப்பதற்காக தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை எவ்வளவுக்கு கொச்சையாக்க முடியுமோ அவ்வளவுக்கு குதறி நிர்வாணமாக தெருவில் தூக்கி வீசிய போராளிகளை, சிங்கள தேசத்தின் அதே குரூரத்துடன் தமிழர் தாயகமும் வதை செய்தது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் தமது எஞ்சிய வாழ்வை ஏதாவது பணிபுரிந்து சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு கடை கடையாக வேலை கேட்டு அலைந்த போராளிகள் பலர் அடித்துத் துரத்தப்பட்டனர்.

சாதி மறுப்பைக் கொள்கையாகப் பிரகடனம் செய்து அதற்குத் தாங்களே உதாரணமாக வழிநடந்து போராளிகள் மத்தியில் விடுதலைப் புலிகளால் செய்துவைக்கப்பட்ட சமத்துவமான திருமணங்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரிக்கப்பட்டன.

சாதி மாறி திருமணம் செய்தவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் பலாத்காரமாக குடும்பத்திலிருந்து பிரித்துக்கொண்டு சென்றனர்.

இப்படி போர் முடிந்த கையோடு முன்னாள் போராளிகளின் மீது காறி உமிழப்பட்ட எச்சிலில் நீராடிய பல்லாயிரக்கணக்கானவர்களில் தமிழினியும் ஒருவர்.

1991இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து போர்முனைப் பணிகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த காலப்பகுதியில் அரசியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு தலைமைப் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

தலைமைக்கு விசுவாசமாகவும் அமைப்பின் பணிகளை நேர்த்தியாக நிறைவேற்றுவதற்காகவும் கடுமையான உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளையும் தவறாது கடைப்பிடித்தவர் தமிழினி.

அது சிலவேளைகளில் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியது உண்மை. அது விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு சில கொள்கைகள் மீதான வெறுப்பாக பதிவுசெய்யப்பட்டாலும் அந்த விடயங்களைக் களத்திலே நிறைவேற்றுபவர்கள் என்ற வகையில் தமிழினி போன்றவர்கள் தங்கள் நேரடி எதிரிகளாக மக்களால் காணப்பட்டார்கள்.

இந்த விவகாரம் போர் முடிவடையும் தறுவாயில் மேலும் இறுக்கமடைந்திருந்ததையும் தமிழினி தலைமையில் அரசியல்துறையினர் மேற்கொண்ட ஆட்சேர்ப்புக்கு எதிரான பொதுமக்களின் கோபம் எவ்வளவுதூரம் பெரும் முரண்பாடுகளாக வெடித்தது என்பதும் போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ் மக்களின் மனங்களில் விழுந்த ஆழமான காயங்கள்.

‘வரலாற்றில் சத்தியத்தைப் பதிவு செய்ய முற்படும் நாம், சாவு மன்னிப்புச் சலுகையை நீட்டிமுழக்கி அந்தச் சலுகையின் நிழலில் சத்தியங்களை மறைத்தால் அது வரலாற்றுக்குச் செய்யப்படும் துரோகம்’ என்று எழுத்தாளர் எஸ்.பொ. கூறுவதைப்போல,

தமிழினி கடைசிக்காலப் போர் மேட்டில் செய்த காரியங்களுக்காக சீறிச் சினக்கும் எவரும், அந்தக் காரியங்கள் அனைத்தையும் அவர் தனது சொந்தக் காரணங்களுக்காக மேற்கொள்ளவில்லை என்பதையும் அவர் சார்ந்த அமைப்பின் வேலைத்திட்டத்தின் அங்கமாகவே செய்தார் என்பதையும் மறந்துவிடுகின்றனர்.

சிறையிலிருந்து விடுதலையான தமிழினி, எந்த மக்களுக்காகப் போராடுவதற்காக கிட்டத்தட்ட இருபது வருடங்களாகத் தனது வாழ்வையே அர்ப்பணித்தாரோ அந்த மக்களையே முகம் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

நடந்து முடிந்த போரும் அது தமிழ்ச் சமூகத்தைப் புரட்டிப்போட்டுவிட்டுச் சென்ற போக்கும் அவ்வாறான ஒரு துரதிர்ஷ்ட சூழ்நிலையை உருவாக்கியது.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலையான தமிழினியை கிளிநொச்சிக்கு வந்து தங்களுடன் தங்குமாறு அவரது தாயாரும் தங்கையும் அழைத்தனர்.

தமிழினி அடியோடு மறுத்துவிட்டார். இருபது வருடம் வாழ்ந்த உலகத்திலிருந்து அவ்வளவு வேகமாக வெளியேற முடியாது என்றும் விரக்திநிலைக்குத் தனிமை மேலும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் செஞ்சோலை சிறுவர்களுடன் சேர்ந்திருந்து பணியாற்றுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தனது விடுதலைக் கனவுகளை நனவாக்கி, காணவிருந்த அந்தப் பெருநிலப்பரப்பை இன்னொரு வடிவத்தில் பார்க்கமுடியாத ஏக்கத்திலும் அங்குள்ள மக்களை முகம்கொடுக்கமுடியாத குற்ற உணர்விலும் கொழும்பிலேயே தங்கியிருக்க முடிவெடுத்தார் தமிழினி.

முழுநேர களப்போராளி என்ற பணியிலிருந்து ஓய்வான அந்தக்காலப்பகுதியில்தான் ஈழத்தமிழ் படைப்புலகத்துக்குச் செறிவான எழுத்துக்களுடன் தமிழினி என்ற போரிலக்கிய படைப்பாளி அறிமுகமானாள்.

முன்னர் அவரது படைப்புக்கள் வெளியாகியிருந்தபோதும், 2012இற்குப் பின்னர் இணையங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்று வெளியான தமிழினியின் கவிதைகளும் சிறுகதைகளும் ஆழ்மன ரணங்களை வெளிப்படுத்தும் செறிவுடையவையாகக் காணப்பட்டன.

அவரது கவிதைகள் தான் சார்ந்த மக்களின் துயரங்களை மொழிபெயர்த்தன, வெற்றுக் கண்களுக்குப் புலப்படாத உள்ளுணர்வுகள் உரையாடின. அவ்வளவு கனதியான உணர்வுகளைத் தாங்கிவருகின்ற படைப்புக்களாகவே பதிவுசெய்யப்பட்டன.

ஒரு காத்திரமான படைப்பாளியாகத் தமிழினியை வரவேற்பதற்கு யதார்த்த உலகுக்குள் குணமாகிவரும் ஈழத்தமிழுலகம் மீண்டும் காத்திருந்தபோது பொல்லாத மரணம் ஒன்று அவரைப் பொருட்படுத்தாமல் தூக்கிச்சென்றுவிட்டது.

ஒருவகையில் இந்த மரணம் மகிழ்ச்சிக்குரியதுதான்.

ஆற்றமுடியாத குற்றஉணர்வினாலும் மாறாத நோயினாலும் பீடிக்கப்பட்டு தவணைமுறையில் மரணத்துடன் சமரசம் செய்துகொண்டிருப்பதிலும் பார்க்க சீக்கிரம் இந்தப் பீடைகளிடமிருந்து விடுலை பெறுவதற்குச் சாவு ஒன்றுதான் சரியான வழி.

தமிழினியின் உடலைக் கடைசிக்காலத்தில் அரிக்கத் தொடங்கிய புற்றுநோய்க்கு மட்டுமல்ல அவரது மனவடுக்களுக்குக்கூட இவ்வுலகில் எங்கும் மருந்தில்லை.

தமிழினியின் மரணம் தனியொரு போராளியின் மரணம் அல்ல. அவரைப்போல நித்தமும் செத்துக்கொண்டிருக்கும் எத்தனையோ போராளிகளின் குறியீட்டு வலி. அடையாள ஆதங்கம்.

வரலாறு ஓர் இனத்துக்கு இழைத்த துரோகத்தின் ஆதாரம். கழிவிரக்கம்கூட காலாவதியாகிப்போன ஒரு தசாப்தத்தினால் தவறவிடப்பட்டவர்கள்.

இந்த ரணத்தை அவர்கள் சார்ந்த மண்ணும் மக்களும் மறக்காதவரை அவர்களது ஆத்மா சாந்தியடையும்.

போரடிக்கும் கருவி…

எல்லாமே முடிந்து

போனதாக

இறுகிப்போனது

மனசு…

இருப்பினும்

ஏதோவொரு

தொடக்கத்தை நோக்கியே

சஞ்சரிக்கிறது

சிந்தனை…

ஒவ்வொன்றிற்கும்

ஒரு காலமுண்டு

மௌனமாயிருக்கவும்,

பேசவும்,

பகைக்கவும்,

சிநேகிக்கவும்…

அதினதன் காலத்தில்

அத்தனையையும்

நேர்த்தியாக

நகர்த்திச் செல்கிறது

காலம்.

முந்தினதும்

பிந்தினதுமாக

சுழலும்

காலத்தின் கைகளில்

நானும் ஒரு

போரடிக்கும் கருவிதான்…

01.08.2015.
தமிழினி ஜெயக்குமரன்   

 

தமிழினியின் இறுதி ஊர்வலம்…. பெருந்தொகையான மக்கள் பங்கேற்பு- (வீடியோ. படங்கள்)

Share.
Leave A Reply

Exit mobile version