ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள எந்திரன் 2-வில் ரஜினிகாந்த்துடன் நடிக்க, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஒப்புக்கொண்டுள்ளார். 50 நாட்கள் கால்ஷீட் தேதிகள், விமானச் செலவு, தங்கும் செலவு என அனைத்தும் சேர்த்து 100 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்கள் அர்னால்டு குழுவினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘எந்திரன்’ படத்தை தொடர்ந்து ‘எந்திரன் 2’ படத்தை இந்தியத் திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட இருக்கிறது.

‘கபாலி’ படத்துக்கு முன்பாகவே ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமான படம் ‘எந்திரன் 2’. ஆனால், பட்ஜெட் தொடர்பான பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமாகவே ‘கபாலி’ படம் தொடங்கப்பட்டது.

‘எந்திரன் 2’ கதை எப்படி இருக்கப்போகிறது, எவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு என்பதை இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக ஸ்ரீனிவாஸ் மோகன் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட குழுவிடம், ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

மேலும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு எவ்வளவு நாட்களாகும் என்று கேட்டிருக்கிறார் ஷங்கர்.

இதையடுத்து, ரஜினிக்கு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கமலை சந்தித்தார் ஷங்கர். இருவரும் நடித்தாலே, இப்படத்துக்கு போட்ட பணத்தை மிக எளிதாக எடுத்துவிடலாம் என்று தயாரிப்பு நிறுவனமும் நினைத்தது. ஆனால், கமல்ஹாசன் நடிக்க மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து அமீர்கான், ஹிருத்திக் ரோஷன் போன்றோரிடம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததால் கடைசியாக விக்ரமும் பரிசீலிக்கப்பட்டார்.

ஆனால் தயாரிப்பு நிறுவனமோ, பெரிய பட்ஜெட் என்று திட்டமிட்டிருக்கும்போது, மிகப் பெரிய நடிகர் யாராவது நடித்தால்தான் நல்லது என்று ஷங்கரிடம் கூறிவிட்டது.

இந்நிலையில், ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அர்னால்டு, இந்தியப் படங்களில் நடிக்க ஆசை என கூறியிருந்தார்.

அவர் நடித்தால் எப்படியிருக்கும் என்று திட்டமிட்டு, அவரை சந்தித்தார் ஷங்கர். கதையைக் கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்தார் அர்னால்ட். ஆனால், கால்ஷீட் தேதி பிரச்னையாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார் ஷங்கர். இறுதியாக 50 நாட்கள் கால்ஷீட் தேதிகள், இந்தியாவுக்கு வந்து போக விமானச் செலவு, தங்கும் செலவு என அனைத்தும் சேர்த்து ரூ. 100 கோடி கேட்டிருக்கிறார்கள் அர்னால்டு குழுவினர்.

‘எந்திரன் 2’ படத்துக்கான உடைகள் மற்றும் சிகை அலங்காரங்களை முடிவுசெய்வது உள்ளிட்ட முதற்கட்ட பணிகள், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அர்னால்டுக்காகச் செய்யப்பட்டு வருகின்றன.

இப்பணிகளுக்காகச் சில நாட்களில் அமெரிக்காவுக்கு செல்ல இருக்கும் ஷங்கர், அர்னால்டிடம் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இதைத் தொடர்ந்து ‘எந்திரன்-2’ ஒப்பந்தத்தில் அர்னால்ட் கையெழுத்திடவிருக்கிறார்.

ரஜினி, அர்னால்டு சம்பளம், கிராபிக்ஸ் செலவு, இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் என கணக்கிட்டால் படத்தின் பட்ஜெட் 350 கோடியைத் தாண்டிவிடும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

ரஜினி நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில், அவரை விட அதிகமாகச் சம்பளம் வாங்கி ஒருவர் நடிக்கவிருக்கும் முதல் படம் ‘எந்திரன்-2’தான்.

Share.
Leave A Reply

Exit mobile version