இலங்கையில் மதுப் பொருட்களின் விற்பனையின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் மாவட்டமாக யாழ்ப்பாணம் முன்னணியில் இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
சுற்றுலா மையங்கள் மற்றும் நவீன பல்கலாசார சூழல் கோலொச்சும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கண்டி உள்ளிட்ட மாவட்டங்கள் சனத்தொகையின் அடிப்படையிலும் யாழ்ப்பாணத்தைத் தாண்டியவை.
ஆனாலும், யாழ்ப்பாணமே இதில் முன்னணியில் இருக்கின்றது. கடந்த நான்கு ஆண்டுகளில் அதன் அதிகரிப்பு பல மடங்காகியிருக்கின்றது.
கல்வி, கலாசாரம், பண்பாடு, சமூக விழுமியங்கள் பற்றி அதிகமாக அக்கறை கொள்ளும் (‘அலட்டிக் கொண்டிருக்கும்’ என்பதுதான் பொருத்தமாக இருக்கும்) சமூகமாக தன்னை தொடர்ந்தும் முன்னிறுத்தும் யாழ்ப்பாணமே, இன்னொரு பக்கம் மதுபாவனையில் முதன்மை இடத்திலிருந்து உச்ச சுதியில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது.
வேலைக்குச் செல்லாமலேயே அதிகமாக பணத்தினைச் செலவழிக்கும் இளைய தலைமுறை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு- கிழக்கு பகுதியில் கடந்த மூன்று தசாப்த காலத்தில் உருவாகியிருக்கின்றது.
அது, வேலையின் பெறுமதியையும் அதற்கான அர்ப்பணிப்பையும் புறந்தள்ளி வைக்குமளவுக்கான மனநிலையையும் உருவாக்கி விட்டிருக்கின்றது. வேலைக்கு செல்லாமலேயே அதிகமாக பணத்தினைச் செலவழிக்கும் தலைமுறையொன்று உருவாகியிருப்பது சமூக ரீதியில் பாரிய அச்சுறுத்தலானது.
பணப்புழக்கத்தின் தன்மை என்பது
நூறுகள், ஆயிரங்களைத் தாண்டி இலட்சங்கள் என்கிற நிலையை இன்று இலகுவாக எட்டியிருக்கின்றது. பொறுப்புணர்வும், அக்கறையும் அற்றவர்களிடம் அதிகமாகப் புளங்கும் பணம், துப்பாக்கிகளை விட ஆபத்தானது.
இன விடுதலைக்காக தொடர்ந்தும் அர்ப்பணித்து, அதன் போக்கில் ஆயுதப் போராட்டங்கள் வரை கோலொச்சிய சமூகமொன்று இன்று எதிர்கொண்டிருப்பது எதிரிகள் திட்டமிடும் ‘இன அழிப்பினையும்’ தாண்டிய அழிவு நிலை.
அரசியல் ரீதியான ஒருங்கிணைவும் பலமும் ஒழுக்கமும், எதிர்காலம் நோக்கிய சீரிய பார்வையும் ஒவ்வொரு சமூகத்துக்கும் அடிப்படை. அதுவும், இனவிடுதலைக்காகத் தொடர்ந்தும் போராடும் சமூகம் அவற்றை என்றைக்குமே புத்தியிலேற்றி செயலாற்ற வேண்டும்.
அரசியல் என்பது ‘வாக்கு அரசியல்’ என்கிற அளவில் அணுகப்பட ஆரம்பித்த தருணத்தில் அழிவு நோக்கி பயணித்த சமூகங்களோடு நாமும் இணைந்து கொண்டோம்.
விடுதலைக்கான அர்ப்பணிப்பை ஒரு பக்கம் மூர்க்கமாக கொடுத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் அதன் அடிப்படைகளைப் புறந்தள்ளி நாம் வீழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இன்றைக்கு நாம் வீழ்ந்து கொண்டிருக்கும் வேகம் எம்மை ஒட்டுமொத்தமாக தவிடுபொடியாக்கும் நிலையை எட்டியிருக்கின்றது.
அரசியல் ரீதியாக பலப்படுதல் என்பது தேர்தல்களில் ஒருங்கிணைந்து வாக்களிப்பது மட்டுமல்ல. ஜனநாயக ரீதியிலான கருத்துக்களையும், உரையாடல்களையும் தோற்றுவித்து செயற்படுவது.
அது, சமூக ரீதியில் முறையாக அடிமட்டத்திலிருந்து கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். அரசியலை சமூக நெறியாக எமக்குள் உள்வாங்க வேண்டும்.
அது, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திடத்தினையும், தீர்வினைக் காணும் உத்தியினையும், உறுதிப்பாட்டினையும் வளர்த்தெடுக்க உதவும். மாறாக, தேர்தல் அரசியலை மாத்திரம் முன்னிறுத்துவது குறைபாடுள்ள சமூகமொன்றையே உருவாக்கும்.
கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பின்னராக கிடைத்திருக்கின்ற சிறிய ஜனநாயக வெளியை அதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், இந்த வெளி இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருக்குமென்று சொல்ல முடியாது.
தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல்- பலம்- ஒருங்கிணைவு என்று பேசிவிட்டு மற்றைய தருணங்களில் அமைதியாதல் என்பது சமூக சீரமைப்புக்கு உதவாது.
இனவிடுதலை நோக்கி நாம் எவ்வளவு அர்ப்பணிப்போடு நகர்கின்றோமோ, அதைவிடவும் அதிகமான முக்கியத்துவத்தை செல்லரித்திருக்கின்ற எமது சமூகத்தினை மீளமைப்பதற்கு கொடுக்க வேண்டும்.
ஆயுதப் போராட்ட காலத்தின் பின்னராக கடந்த ஆறு ஆண்டுகளில் சமூக விரோதக் குற்றங்களும், பொறுப்பற்ற தன்மையும் எம் சமூகத்துக்குள் பெருமளவு அதிகரித்திருக்கின்றது.
1. வடக்கில் அதிகரிக்கும் மது- போதைப் பாவனை.
2. வேலையற்றவர்களின் அதிகரிப்பு.
மேற்கண்ட இரண்டு விடயங்களும் ஒட்டுமொத்த நாட்டுக்குமான பிரச்சினைதான். ஆனால், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு- கிழக்கு பகுதிகளில் இந்தப் பிரச்சினைகள் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன.
அதற்கு அரசாங்கம் பெரும் பொறுப்பினை ஏற்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கில்லை. ஆனால், அரசாங்கத்தினை மீறி நாமே எவ்வாறு பெரும் பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொண்டு அதன் அளவினைப் பெருப்பித்துக் கொண்டிருக்கின்றோம் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.
வடக்கு- கிழக்கு சமூக கட்டமைப்பு என்பது அதிக ஏற்றத் தாழ்வுகள் கொண்டது. அந்த ஏற்றத் தாழ்வுகளை ஆயுதப் போராட்டமும்- அதற்கான இணக்கமும் மேம்போக்காக நீக்கம் செய்தது. ஆனால், அதன் அடிப்படைகள் என்றைக்குமே மாறியிருக்கவில்லை.
அதனால், இன்னமும் அபத்தமான குழப்பமொன்று உருவாகி விட்டது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் நோக்கும் போது அந்த ஏற்ற தாழ்வுகளின் போக்கு பெருமளவு அதிகரித்து விட்டிருக்கின்றது.
அது, மேலும் மேலும் சமநிலையற்ற சமூகமொன்றை உருவாக்கி விட்டிருக்கின்றது. அதன்போக்கிலும், அது பிரசவித்த விளைவுகளின் போக்கிலும் மேற்கண்ட விடயங்களை கவனத்தில் கொள்ளலாம்.
ஆயுதப் போராட்ட காலத்தில் வடக்கில் பனை உற்பத்தியிலான மதுப்பொருட்களின் பாவனையே அதிகளவில் இருந்தது.
கடந்த ஆறு ஆண்டு காலத்தில் தென்னிலங்கையிலிருந்து அனைத்து வகை மதுப்பொருட்களும் வடக்கின் நகரங்களையும், சிறுநகரங்களையும், கிராமங்களையும் நிறைக்க ஆரம்பித்துவிட்டன.
அத்தோடு, மதுபாவனையை சமூக அங்கிகாரமாக கருதும் நிலைப்பாடொன்றும் ஆழமாக உள்வாங்கப்பட்டுவிட்டது.
முன்னைய நாட்களில் கள்ளுக்குடித்துவிட்டு அல்லாடும் நபர்கள் பற்றி தவிர்ப்பு மனநிலையோடு அணுகிய சமூகம், இன்று பியர் குடித்தலை பெரும் அங்கிகாரமாகக் கருதுகின்றது என்பது கவனிக்கத்தக்கது.
இன்னொரு பக்கம், இடம்பெயர்வும்- புலம்பெயர்வும் கல்வி மற்றும் தொழில் முனைப்புகள் கட்டமைக்கும் பொருளாதார ஆரோக்கியத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிட்டது.
உள்ளக இடப்பெயர்வு பாரம்பரிய தொழில்களை எம்மத்தியிலிருந்து பெருமளவு அகற்றம் செய்ய வைத்துவிட்டன.
குறிப்பாக, விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பிரதான தொழில்துறைகளை அகற்றம் செய்துவிட்டன. இன்றைக்கு எமது பகுதியில் இராணுவமும் தென்னிலங்கைக் குடியேறிகளும் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அத்தோடு, கல்வி மீதான பற்றும், அது கட்டமைக்கும் வேலைவாய்ப்புக்கள் தொடர்பிலும் குறை அணுகுமுறையொன்று உருவாக்கப்பட்டுவிட்டது. அது, எம்மத்தியில் வேலையற்றவர்களையும், பொறுப்பற்றவர்களையும் அதிகமாக உருவாக்கிவிட்டிருக்கின்றது.
புலம்பெயர்வு என்பது பொருளாதார ரீதியில் சில நன்மைகளை தந்ததாலும், சமநிலையற்ற தன்மையையும், பொறுப்பற்றவர்களையும் உள்நாட்டில் உருவாக்கி விட்டிருக்கின்றது.
உழைப்பின் பெறுமதியை உணராத சமூகமொன்று தலையெடுப்பது நினைத்துப் பார்க்கமுடியாத அச்சுறுத்தல்களை வழங்கக் கூடியது. இன்றைக்கு வேலையற்றவர்களின் அதிகரிப்புக்கு அதுவும் ஒரு காரணமாக கொள்ள வேண்டியது.
போரின் நேரடி விளைவுகளினால் வேலையின்றி தவிக்கின்றவர்கள் பற்றி எந்தவொரு குற்றச்சாட்டையும் இந்தக் கட்டுரையாளர் முன்வைக்கவில்லை.
மாறாக, விளைவுகளின் விளைவுகளினாலும், அதன் போக்கினாலான பொறுப்புணர்வின்றிய நிலைக்குள் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் பற்றி அதீதமான விமர்சனங்களைக் கொண்டிருக்கின்றார்.
வடக்கு- கிழக்கில், குறிப்பாக வடக்கில் 30 வயதுகளைக் கடந்தும் வேலையற்றவர்களின் (பட்டதாரிகளும் அடக்கம்) எண்ணிக்கை அதிகம். அவர்களில் அதிகமானவர்களிடம் இன்னும் இருப்பது வெளிநாட்டுக் கனவு.
பட்டதாரிகளிடம் இருப்பது அரச வேலை தொடர்பிலான ஏக்கம். இந்தக் கனவுடனும்- ஏக்கங்களுடன் 30 வயதுகளைத் தாண்டியும் ஏதுமற்று இருக்கின்ற நிலைமை ஏற்புடையதல்ல.
அது, குடும்பங்களுக்கு சுமையாக இருப்பதுடன், வளர்ந்து வரும் தலைமுறைக்கான முன்னுதாரணமாவும் மாறிவிடுகின்றது. அது, குறைபாடுள்ள சமூகத்தின் பிரசவிப்பாகும்.
வெளிநாடு சென்று உழைக்க வேண்டும் என்பதுவும், அரச வேலை எனும் அங்கிகாரத்துக்கான தவிப்பும் ஏற்புடையது.
ஆனால், அதனை அடையும் நியாயமான தன்மைகள்- முறைகள் தொடர்பில் அக்கறை கொள்வது அவசியமானது. அதுபோல, அவற்றுக்கான முனைப்புக்களை முன்னெடுக்கும் காலங்களில் மாற்று வேலைகள் அல்லது வேலைவாய்ப்புக்கள் தொடர்பிலும் ஆர்வம் கொள்ள வேண்டும்.
அரச வேலையொன்றுக்கான 35 வயதுகளைத் தாண்டியும் காத்திருப்பவர்களை எமது சமூகம் கொண்டிருக்கின்றது.
அவர்களின் பலர் மாற்று வேலைகளை பார்ப்பதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. புலம்பெயர் தேசங்களிலிருந்து இங்கு அனுப்பப்படுகின்ற பணத்தில் அரைவாசிக்கும் மேலாக வீணடிக்கப்படுகின்றது என்பது என்னுடைய எண்ணம்.
ஏனெனில், ஒரு மோட்டார் சைக்கிளை தம்பிக்கோ- தங்கைக்கோ வெளிநாட்டில் இருக்கும் அண்ணனோ- அக்காவோ வாங்கிக் கொடுக்கலாம், தப்பில்லை.
ஆனால், அந்த மோட்டார் சைக்கிளுக்கு தேவைப்படும் பெற்றோலுக்கும் சேர்த்து பணம் அனுப்புவது என்பது சமூகத்தின் பெரும் கேடாகும்.
இப்படியான நிலைமைகளும் தான் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு- கிழக்கில் இன்னமும் வேலையற்றவர்களை அதிகரிக்கச் செய்யவும் மறைமுகமாக ஊக்கப்படுத்துகின்றது. இவையும் சமூகத்தின் பெரும் அச்சுறுத்தலான காரணிகளாகும்.
புருஜோத்தமன் தங்கமயில்