அதிபர் மாளிகையில், தாம் நிலத்தடி சொகுசு மாளிகையை அமைக்கவில்லை என்றும், அது விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்காக அமைக்கப்பட்ட பதுங்குகுழி என்றும், அதுபோன்ற பதுங்கு குழி அலரி மாளிகையிலும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
நாரஹேன்பிட்டிய விகாரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியி அவர்,”அதிபர் மாளிகையில் இரகசிய நிலத்தடி மாளிகை ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இது மாளிகை அல்ல. நாம் அமைத்தது பதுங்குகுழி.பதுங்குகுழி ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிப்பதை நான் மறுக்கவில்லை. அது போர்க்காலகட்டத்தில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி.விடுதலைப் புலிகளின் தரப்பு பலமடைந்திருந்த காலகட்டத்தில் எம்மை பாதுகாக்க வேண்டிய தேவை இருந்தது.அந்த நேரத்தில் முக்கிய பாதுகாப்பு கலந்துரையாடல்களையும் முக்கிய தீர்மானங்களையும் நாம் அதிபர் மாளிகையில் தான் மேற்கொள்வோம்.

அவ்வாறு இருக்கையில் அதிபர் மாளிகை தாக்கப்பட்டால் இந்த பதுங்குழியில் இருந்து செயற்படலாம் என்ற நோக்கத்துக்காகவே இதை உருவாக்கினோம்.

இந்த பதுங்குகுழியை வெளியில் இருந்து பார்க்கும் போது சாதாரண வீடு போன்று தெரியும். ஆனால் உள்ளே பாதுகாப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

போர்க்காலகட்டத்தில் இதை நாம் அமைத்தோம். அப்போதைய சூழ்நிலையில் புலிகளின் தாக்குதல் மிகவும் கடுமையானதாக இருந்தது.

விமான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டனர். அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள எமக்கு இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி இருந்தது.

அவர்களின் விமான தாக்குதல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் என்பன எமக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக இருந்தோம்.

அதிபர் மாளிகையில் மட்டுமல்ல அலரி மாளிகையிலும் இவ்வாறான பதுங்குகுழி உள்ளது. இன்னும் சில முக்கிய இடங்களிலும் பதுங்குகுழிகள் உள்ளன. அவற்றை அமைத்தது தவறென குறிப்பிட முடியாது.

நாம் தாக்குதல் நடத்தும்போது புலிகள் பதுங்குகுழி அமைத்தனர். அதேபோல் அவர்கள் தாக்கும் போது நாம் பதுங்குகுழி அமைத்தோம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனும் இவ்வாறு பதுங்குகுழிகளை அமைத்து வைத்திருந்தார். இராணுவத் தாக்குதலில் இருந்து தப்பிக்க அவர் வீட்டின் அடியில் பதுங்குகுழியை அமைத்திருந்தார். அதை எவரும் விமர்சிக்கவில்லை.

அதேபோல நாமும் எமது பாதுகாப்பிற்காக பதுங்குகுழியை அமைத்துக் கொண்டோம். புலிகள் செய்வது நியாயமெனின் நாம் செய்வதும் நியாயமானதே.

அவ்வாறு செய்யாமல் நான் இறக்க வேண்டும் என் நினைக்கிறீர்களா? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற எதிர்பார்க்கக் கூடாது.

புலிகளின் விமானங்கள் கொழும்பில் வந்து தாக்குதல் நடத்தியது இளையவர்கள் பலருக்கு மறந்து விட்டது.

பதுங்குகுழி அமைக்க எவ்வளவு செலவானது என்ற எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களும் அமைத்தனர், நாங்களும் அமைத்தோம் அவ்வளவு தான்” என்று தெரிவித்தார்.

 

மஹிந்தவின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை (படங்கள் )

ஜெனிவா தீர்மானம் இலங்கைக்கு ஆபத்து என்கிறார் மஹிந்த

151015101319_mahinda_rajapaksa_512x288_bbc_nocredit
இலங்கை தொடர்பில் ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கைக்கு மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்தத் தீர்மானத்தின் பல பத்திகள் மிகவும் ஆபத்தானவை என அவரது அறிக்கை கூறுகிறது.

அந்தத் தீர்மானத்தின் ஆறாவது பத்தியின் அடிப்படையில், போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஒரு புதிய சட்ட முறைமையை ஏற்படுத்த அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றும் இதில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் பங்குபெற வழி செய்யப்படுகிறது எனவும் கூறும் அவரது அறிக்கை, இதன் மூலம் நாட்டிலுள்ள குற்றவியல் நீதிவிசாரணை முறைமைக்கு இணையாக, சமாந்தரமாக மற்றொரு புதிய முறையை ஏற்படுத்தப்படுகிறது என்றும், அது நாட்டுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கும் எனவும் கூறுகிறது.

வெளிநாட்டு நிதி உதவியுடன் விசாரணை பொறிமுறைகள் செயற்படும் என்று ஐநா தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதையும் ராஜபக்ஷ கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கும் எதிரான போரை இடையில் நிறுத்த முயற்சித்த வெளிநாடுகளின் நிதியுதவியில் நடத்தப்படும் விசாரணைகளில் எவ்வாறு நீதி கிடைக்கும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது தலைமையிலான அரசாங்கமே மேக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவை அமைத்து, ஆயுத மோதல்களில் சிறந்த அனுபவம் உள்ள பல வெளிநாட்டு வல்லுநர்களிடமிருந்து எழுத்துமூலமான கருத்துக்களைப் பெற நடவடிக்கைகளை எடுத்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரணகம ஆணைக்குழு பரிந்துரைகளை ராஜபக்ஷ பரிந்துரைகள் என்று காண்பித்து தமது கருத்தை திணிக்க சிலர் முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஆனால் அந்த வல்லுநர்கள் தெரிவித்த கருத்துக்களை ஐ நா மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடருக்கு முன்னர் அதன் உறுப்பினர்களுக்கு அனுப்ப போதிய அவகாசம் இருந்தும், வேண்டுமென்றே தற்போதைய அரசு அதைச் செய்யவில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

விசாரணை நடைமுறைகளில் வெளிநாட்டு விசாரணையாளர்களை பயன்படுத்துவது உள்நாட்டு சட்ட நிபுணர்களை அவமானப்படுத்துவதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நடைமுறைகள் அனைத்துமே போரில் வெற்றி பெற்றவர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ஒரு திட்டமே எனவும் தனது அறிக்கையில் மஹிந்த கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version