சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டு வந்த பிரபல மும்பை தாதா சோட்டா ராஜன் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு காலத்தில் மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்த தாவூதின் கும்பலில் சோட்டா ராஜன் 2-வது நபராக இடம் பெற்றிருந்தார்.
சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தாவூதுக்கு எதிராக தனி அணியாக செயல்பட ஆரம்பித்தார் சோட்டா ராஜன். இதனால் இருவருக்குமிடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சோட்டா ராஜனின் கதையை முடிக்க தாவூத் திட்டமிட்டார்.
2000-ஆம் ஆண்டு பாங்காக் மார்க்கெட்டில் தாவூத் ஆட்களால் ராஜன் சுற்றி வளைத்து அவர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் சோட்டாவின் உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்தது. எனினும் தீவிர சிகிச்சைக்கு பின் ராஜன் உயிர் பிழைத்தார். அதன்பின் ராஜன் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், சோட்டா ராஜன் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து இந்தோனிசியாவின் பாலி தீவில் உள்ள உல்லாச விடுதி ஒன்றுக்கு வந்தபோது சோட்டா ராஜனை கைது செய்ததாக பாலி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கான்பெராவில் இருந்து ஆஸ்திரேலிய போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் பாலி விமான நிலையத்தில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும், இன்டர்போல் அமைப்பின் உதவியுடன் விரைவில் இந்திய அரசிடம் சோட்டா ராஜனை ஒப்படைக்கவுள்ளதாகவும் பாலி போலீசார் தெரிவித்தனர்.
இன்டர்போல் விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு சிபிஐயிடம் தரப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்திலும் சிபிஐதான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா அரசுகள் ஒத்துழைப்போடுதான் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.