பதிமூன்று ஆண்டுகளுக்கு முன், தனக்கு பதினொரு வயதே இருந்தபோது பாகிஸ்தானுக்கு வழிதவறிச் சென்று அங்கேயே சிக்கிக்கொண்ட இந்தியப் பெண்ணொருவர், புகைப்படங்களை வைத்து தனது குடும்பத்தினரை அடையாளம் கண்டதை அடுத்து, அவர்களுடன் ஒன்று சேர்வதற்காக தில்லி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
காது கேட்காத, வாய் பேசாதவராகவுள்ள கீதாவால் தனது குடும்பத்தினர் பற்றி விவரம் சொல்ல முடியாமல் போனதால் லாஹூரிலேயே குழந்தைகள் பராமரிப்பு இல்லம் ஒன்றில் அவர் வளர்க்கப்பட்டு வந்துள்ளார்.
நீண்ட எதிர்ப்பார்ப்புக்கு பிறகு நாடு திரும்பியுள்ள கீதா உற்சாகமாகவே காணப்பட்டார்.
இருநாடுகளின் முயற்சியால், கீதாவின் பெற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை உறுதி செய்ய தேவையான டி.என்.ஏ. பரிசோதனையும் இன்று மேற்கொள்ளப்பட்ட பிறகு முறைப்படியாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை டி.என்.ஏ. பரிசோதனை வேறு விதமாக அமைந்து விட்டால், அவர் இந்தியாவில் தங்க மாற்று ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள குடும்பத்தினரே, கீதா தங்களது குடும்பத்தை சேர்ந்த பெண் என்று கோரியுள்ளார்கள்.
அந்த குடும்பம் வசிக்கும் கிராமத்தை சேர்ந்தவர்களும், கீதாவின் வருகையை பெரிதும் எதிர்ப்பார்துள்ளனர்.
கீதா 11 வயதுள்ளபோது தவறுதலாக ரயில் மூலம் கராச்சி சென்றடைந்தார். பாகிஸ்தான் ராணுவத்தால் மீட்கப்பட்ட அவரின் நிலையறிந்து, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் காப்பகம் ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக அதே காப்பகத்தில் வசிந்து வந்த அவர், தற்போது தான் நாடு திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.
கீதா தொடர்புடைய குடியுரிமை ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால், இந்திய நாட்டுரிமை சட்டத்தில் மிகவும் அரிதாக பயன்படுத்தப்படும் குடியுரிமை சட்டப்பிரிவு 13ன் கீழ் அவருக்கு இந்தியர் என்கிற அங்கிகாரம் வழங்கப்படும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா திரும்பியுள்ள கீதாவுடன், பாகிஸ்தான் நாட்டில் அவரை பேணி பாதுக்காத்து வந்தவரும் உடன் வந்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என இருநாட்டு அரசுகளும் கூறியுள்ளன.
இப்பெண் தனது சொந்தப் பெற்றோருடன்தான் சேருகிறார் என்பதை உறுதிசெய்வதற்காக மரபணுப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கீதாவின் கதை, எல்லைக்கு இரண்டு பக்கத்திலுமே அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்திருந்தது.
அவரின் கதையை ஒட்டி சமீபத்தில் ஒரு ஹிந்தி திரைப்படமும் வந்திருந்தது.