தமிழ் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் பற்றிய விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்விசாரணைகள் நடைபெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்கள் பிரதான பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை பற்றியும் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இப்படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஏனைய தமிழ் அரசியல் தலைவர்களின் கொலைகள் பற்றியும் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அவ்விசாரணைகளின் போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய விசாரணைகளும், தண்டனைகளும் எதிர்காலத்தில் அரசியல் தலைவர்களின் படுகொலைகளை தடுப்பதற்கு வழிவகுக்கும் எனலாம்.
தமிழ் அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதனைப் போன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மூதூர் முதல்வர் என அழைக்கப்பட்ட அப்துல் மஜீத், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.ஏ.மஹ்ரூப், இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களாக இருந்த முஹம்மட் மன்சூர், அலி உதுமான், மு.காவின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆகியோர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களின் படுகொலைகள் பற்றியும் விசாரணைகள் நடைபெற வேண்டும்.
குறிப்பாக, முஸ்லிம்களுக்கு தனித்துவமானதொரு கட்சியை உருவாக்கியவர், பெரும்பான்மையான முஸ்லிம்களை ஒரு கட்சியின் கீழ் கொண்டு வந்து பேரம் பேசும் சக்தியை ஏற்படுத்தியவர் என்ற பல பெருமைகளுக்குரியவரான அஷ்ரபின் மரணம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று முஸ்லிம் மக்களினால் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.
அஷ்ரப் 2000.09.16ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் மரணமானார். ஆனால், அது திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என்பதே முஸ்லிம்களின் கருத்தாக உள்ளது.
அவருக்கு ஆயுதக் குழுக்களினால் மரண அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. அரசியல் ரீதியாகவும் எதிர்ப்புக்கள் இருந்தன.
அவர் அன்றைய அரசாங்கத்தில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தமையை பேரினவாதிகள் விரும்பவில்லை. அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். மேலும், அவரின் தலைமையின் கீழ் மு.கா. பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்து வந்ததை பேரினவாத அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இத்தகையதொரு பின்னணி இருக்கின்ற நிலையில்தான் அவர் ஹெலிகொப்டர் விபத்தில் மரணமானார்.
ஆனால், இவர் மரணமடைந்த போது ஹெலிகொப்டரின் கருப்புப் பெட்டியும் காணாமல் போயிருந்தது. இது முஸ்லிம்களிடையே பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது.
முஸ்லிம்களிடையே காணப்படும் இந்த சந்தேகங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஷ்ரபின் மரணம் குறித்து விசாரணை செய்வதற்கு அன்றைய அரசாங்கத்தினால் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றி எந்தவொரு தகவல்களும் வெளியிடப்படவில்லை.
தற்போது தமிழ் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் பற்றிய விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அவர்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மரணம் பற்றிய விசாரணைகள் இடம்பெறாத நிலையில், அவர்களுக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்களின் படுகொலைகள் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது முஸ்லிம்களுக்கு செய்யும் பாரபட்சமானதொன்றாகும்.
இதனை குறிப்பிடுவதனை வைத்து தமிழ் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் பற்றி விசாரிக்க கூடாதென்றோ, இடைநிறுத்தி வைத்து விட்டு முஸ்லிம் அரசியல் தலைவர்களின் படுகொலைகளை விசாரிக்க வேண்டுமென்றோ கூறவரவில்லை.
முஸ்லிம் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் தொடர்பில் காட்டப்படும் பாரபட்சத்தை சுட்டிக் காட்டவே இது ஒப்பீட்டு ரீதியாக எடுத்துக் காட்டப்படுகிறது.
இதேவேளை, இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளவர்களின் இயலாமை புடம்போட்டுக் காட்டுவதற்கு தமிழ் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் பற்றிய விசாரணைகள் நல்லதொரு உதாரணமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் அரசியல் தலைவர்களின் படுகொலைகளை விசாரிப்பதற்கு அழுத்தங்களை கொடுத்து அதனை சாத்தியமாக்கியுள்ள நிலையில் முஸ்லிம் அரசியல் தலைவர்களினால் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் படுகொலைகளை விசாரிப்பதற்கு அழுத்தங்களை கொடுக்க முடியாதது ஏன்?
ஆகக் குறைந்தது தங்களுக்கு அரசியல் பாடத்தை கற்றுக் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் என்ற முகவரியைப் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக இருந்த அஷ்ரபின் மரணத்திற்குரிய காரணங்களை கண்டு கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படாதிருப்பது வருந்தத்தக்கதாகும்.
இன்று பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்தவர்கள்.
இருப்பினும் அவர்கள் எல்லோரும் அஷ்ரபின் கொள்கைகளை மறந்ததைப் போன்று அவரின் முகத்தையும் மறந்துள்ளார்கள்.
பாராளுமன்ற உறுப்பினராவதற்கும், அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் காட்டும் ஆர்வம், தமது தலைவரின் மரணம் குறித்து காட்டாதிருப்பது நியாயமானதல்ல.
இதேவேளை, ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் ஹுஸைன் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் பற்றி அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டுமென்று கேட்டுள்ளார்.
அவரினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள 20 அம்சங்கள் கொண்ட அறிக்கையில் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் பல நியமிக்கப்பட்டுள்ளன.
அவை விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளன. ஆனால், எல்லா அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் முஸ்லிம்களும் கணிசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவைகளுக்குரிய தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். கடமைகளை மறந்து கொண்டிருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அஸ்ரப்பின் மரணம் குறித்து விசாரணைகள் நடைபெற வேண்டுமென்று அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பார்கள் என்று நம்பமுடியாது.
அமைச்சர் பதவிகளுக்கும், ஏனைய சொகுசுகளுக்கும், தனிநபர் சொத்துக் குவிப்புக்கும் தடைகளை ஏற்படுத்திவிடுமென்று சிந்திக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் வரைக்கும் முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து வாழ முடியாது.
ஒரு சமூகம் தலை நிமர்ந்து வாழ்வதென்பது அச்சமூகத்தின் தலைவர்களின் செயற்படுகளிலேயேதங்கியுள்ளன.
முஸ்லிம் அரசியல் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் சமூக சிந்தனைகளிலிருந்து விடுபட்டு தனது குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதனை முஸ்லிம்கள் பரவலாக அறிந்திருந்தும் மீண்டும் மீண்டும் அத்தகையவர்களுக்கே வாக்களித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏமாறுகின்றவர்கள் உள்ளவரை ஏமாற்றுகின்றவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
முஸ்லிம்களின் உரிமை அரசியலை தங்களின் சுயநலன்களுக்காக புதைத்தவர்கள் இன்று அரசாங்கத்தின் பக்கம் இருந்து கொண்டு அபிவிருத்தி அரசியலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
அபிவிருத்தி அரசியலை திட்டமிடாது அரசாங்கத்தின் நிதியை வீண்விரயமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். கடற்கரையிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் நிந்தவூரில் ஆயுர்வேத வைத்தியசாலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
நிந்தவூர் வைத்தியசாலையும் இதே மாதிரியே அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அவ்வைத்தியசாலை பல தடைகைளை எதிர்கொண்டுள்ளது.
இதே போன்று அம்பாரை மாவட்டத்தில் பல அபிவிருத்திப் பணிகள் திட்டமிடப்படாத வகையிலும், பிரதேச செயலாளர்களின் அனுமதியை முறையாகப் பெற்றுக் கொள்ளாத வகையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இது பற்றி அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு அரசாங்கத்தின் நிதியை பொறுப்புடன் மக்கள் பயன்பெறும் வகையில் செலவு செய்யப்படுவதற்கு; நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.