தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தற்போதும் பேரம் பேசும் நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும்  இவ்வாறான பேரம் பேசல்கள் நல்லாட்சித் தத்துவத்திற்கு ஏற்றதல்ல எனவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கினால் படையினருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஒருவர் கூறிய கருத்துக்கு அவர் கடும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

புதிய அரசாங்கமும் இராணுவத்தைப் பாதுகாக்கின்ற முயற்சியைத் தான் முன்னெடுத்து வருகின்றது.அந்தத் தீவிர முயற்சியின் காரணமாகத் தான் தற்போது தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவ்வாறு விடுவிப்பதாயின் இராணுவத்தையும் போர்க் குற்றத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கூறுகின்றது .

ஆனால், அவர்களின் இந்தக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமல்ல. ஏனெனில், இன்று சிறைகளிலுள்ள கைதிகள் ஏறக்குறைய ஐந்து தொடக்கம் இருபது வருடங்கள் வரை தொடர்ச்சியாகச் சிறைகளிலிருக்கின்றனர்.

ஒரு கைதி ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தால் அது பத்து வருடங்கள் சிறையில் இருந்தமைக்குச் சமன்.

ஆகவே,இப்போதிருக்கின்ற கைதிகள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தண்டனைகளை அனுபவித்தவர்கள். இதனால், கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்தால் படையினரையும் விடுவிக்க வேண்டுமென்று கூறுவது நியாயமற்ற கருத்து.

எங்களைப் பொறுத்த வரை அமைச்சர்கள் கூறுகின்ற கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல.

தற்போது சிறைகளிலிருக்கும் தமிழ்க் கைதிகளை விட மோசமான குற்றம் செய்தவர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்த்தார்கள்.

அவர்கள் இன்றும் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.இந்த நிலையில் அவர்களை விடுவிக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஒவ்வொரு கைதியின் விவகாரமும் தனித்தனியாக ஆராயப்பட்டு முடிவு: அமைச்சர் திலக் மாரப்பன

 tilak_marapane
அமைச்சர் திலக் மாரப்பன

தடுத்து வைக்­கப்­ப­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­கள் மீது சுமத்­தப்­பட்­டுள்ள வழக்­கு­களின் அடிப்­ப­டையில் ஒவ்வொன்­றாக ஆராய்ந்து தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்­சா­லைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்­பன தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தலை­மையில் அடுத்தவாரமே இது தொடர்பான இறுதி முடிவு எட்­டப்­படும் எனவும் அவர் குறிப்­பட்டார்.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் முக்­கிய சந்திப்­பொன்று நேற்று முன்­தினம் நடை­பெற்ற நிலையில் சிறைக் கைதி­களின் விடு­தலை தொடர்பில் நிலைப்பாடு எவ்­வாறு உள்­ள­தென வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில் தெரிவித்ததாவது:

“தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட தமிழர் தரப்­பினர் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து வரு­கின்­றனர்.

கடந்த காலத்தில் இருந்தே இந்த விடயம் தொடர்பில் கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.எனினும் சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் கைதிகள் தொடர்பில் விரைவில் ஒரு தீர்­மானம் எடுக்க முடி­யா­துள்­ளது.

முன்­னைய அர­சாங்­க காலத்தில் இந்த விட­யங்­கள் தொடர்பில் சட்ட ரீதியில் சரி­யாக செயற்­ப­டாத கார­ணத்­தினால் தான் இன்று இவ்வாறான சிக்கல் நிலை­மைகள் ஏற்­பட்­டுள்­ளன.

அதேபோல் எவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில் இவர்கள் கைது­செய்யப்பட்­டுள்­ளனர் என்­பது தொடர்பில் சரி­யான ஆதா­ரங்­களை பதிவு செய்­தி­ருக்­கவும் இல்லை.

இவ்­வாறு தடுப்­புக்­கா­வலில் உள்ள அர­சியல் கைதிகள் சிலர் குற்­ற­வா­ளிகள் என்று நீதி­மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதேபோல் யுத்த கால­கட்­டத்தில் புலி­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தையும், குற்­ற­வா­ளிகள் என்­பதை ஒப்புக்கொண்­ட­வர்­களும் இந்த பட்­டி­யலில் உள்­ளனர்.

அதேபோல் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு தொடர்ந்தும் தடுப்புக் காவலில் சிலரும் உள்­ளனர். ஆகவே இவை தொடர்பில் சரி­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்ட வேண்டும்.

எனவே குற்றம் சுமத்­தப்­பட்டு அது நிரூ­பிக்­கப்­பட்­டுள்ள கைதி­களை விடு­விக்க முடி­யாது. அவர்கள் தொடர்பில் எம்மால் எந்­த­வித மாற்று நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ளவும் முடி­யாது. இவர்கள் தொடர்பில் சட்ட முறைமைக்கு அமைய அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும்.

அதேபோல் பொது மன்­னிப்பு என்ற ஒன்று இல்லை. ஒவ்­வொரு வழக்கையும் அவ­தா­னித்து அதற்­க­மை­யவே தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும்.

ஆனால் விசா­ர­ணைகள் இன்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கைதி­களை பிணையில் விடு­விக்க முடியும். அதற்கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் தற்­போது மேற்­கொண்டு வரு­கின்­றது.

எவ்­வா­றெ­னினும் அடுத்த மாதம் முதல் வாரத்­தினுள் இந்த நபர்­களை விடு­விக்க வாய்ப்­புகள் அதி­க­மா­கவே உள்­ளன.

இவர்­களை விடு­விப்­பது தொடர்பில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ தலை­மையில் குழு­வொன்று ஏற்­க­னவே அமைக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­த­மரின் ஆலோ­ச­னைக்கு அமைய நாம் இந்த குழு­வி­னூ­டாக செயற்­பட்டு வரு­கின்றோம். ஆகவே அடுத்த வாரம் மீண்டும் பிர­தமர் மற்றும் ஜனா­தி­பதி ஆகி­யோரை சந்­தித்து இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

பொதுமன்னிப்புக் கோரிக்கை நிராகரிப்பு: மீண்டும் உண்ணாவிரதத்தில் குதிக்க கைதிகள் திட்டம்?

28-10-2015

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்பதை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ள நிலையில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகள் ஆராய்ந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது விடுதலை தொடர்பில் அரசால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.

தாம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டபோது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு வழங்கப்போவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தம்மை பொதுமன்னிப்பில் விடுவிக்குமாறு கோரி மீண்டும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப் போகின்றனர் என தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்று அரசு அறிவித்துவிட்டது.

தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சுமார் 217 தமிழ் அரசியல் கைதிகள் நாடு முழுவதிலும் உள்ள சிறைகளில் 6 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போது சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், பொதுமன்னிப்புக்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிணை அனுமதி வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு எடுத்துள்ள இந்தத் தீர்மானத்திற்கு தமிழ் அரசியல் கைதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில் தாம் கொடுத்திருந்த நவம்பர் 7 என்ற காலக்கெடுவுக்குள் அனைத்துக் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து தாம் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version