தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் தனிப்பட்ட குரோதங்கள் எதுவுமில்லை என கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளதோடு, இராஜதந்திர ரீதியிலான தவறுகளை புலிகள் இழைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் தற்கொலையே செய்துள்ளார் என சுட்டிக்காட்டியவர் தற்போது தமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் சக்தி அவசியம் என்பதால் தமிழர் விடுதலைக்கூட்டணியில் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
‘கேசரி’க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு;
கேள்வி:- ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யின் உபதலைவர் பதவியிலிருக்கும் நீங்கள் அதிலிருந்து விலக வேண்டு மென்ற தீர்மானத்தை எடுத்தமைக் கான பின்னணி என்ன?
பதில்:- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டுப்பிரிந்ததன் பிற்பாடு சில ஓய்வுக்கு பின்னர் நான் நேரடியாக தேசிய கட்சியான சுதந்திரக்கட்சியிலேயே இணைந்திருந்தேன்.
அதற்கு சில காரணங்களும் இருந்தன. குறிப்பாக யுத்தக்கொடூரத்திலிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக அந்த இணைவை பயன்படுத்தவேண்டுமென்றே எதிர்பார்த்தேன். தவிர அரசாங்கம் என்னைப் பயன்படுத்துவதற்கு தற்போதுவரையில் நான் இடமளிக்கவில்லை.
நடைபெற்று நிறைவடைந்த பொதுத்தேர்தலில் என்னைப்போட்டியிடுமாறு அழுத்தமளித்தார்கள். இருப்பினும் நான் போட்டியிட மறுத்திருந்தேன்.
முன்னதாக மட்டக்களப்பிலும் சரி ஏனைய பிரதேசங்களிலும் சரி பெரும்பான்மை தேசிய கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்பதை அறிவித்திருந்தேன். அந்த கொள்கைக்கு அமைவாகவே நான் போட்டியிட மறுத்திருந்தேன்.
தற்போதுள்ள நிலைமைகளின் பிரகாரம் தொடர்ந்தும் அக்கட்சியில் இருப்பதால் எமது மக்களுக்காக எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது. ஏன், பெறமுடியாதெனக் பார்ப்போமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாதை மாறிச் செல்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனவுக்கான ஆதரவை தெரிவித்து நூறுநாட்களுக்குள் அனைத்தையும் செய்துதருவதாக வாக்குறுதியளித்தார்கள்.
அதன் பின்னர் பொதுத்தேர்தலிலும் கடுமையாக வாக்குறுதிகளை வழங்கினார்கள். தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் பங்காளிகளாக மாறியபின்னர் அவர்கள் மௌனிகளாகிவிட்டனர்.
கேள்வி:- புதிய அரசாங்கத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகவே காணப்படுகின்றதே?
பதில்:-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம்.
ஆனால் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது. இலங்கை வரலாற்றினை பார்க்கையில் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கே அப்பதவி வழங்கப்பட்டிருக்கின்றது.
எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு அப்பதவி வழங்கிய வரலாறுகளில்லை. இம்முறையே அப்பதவி கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளமையால் அவர்கள் அரசாங்கத்தின் அங்கமாகிவிட்டார்கள்.
அவர்கள் அரசாங்கத்தின் வார்த்தையை மீறி செயற்படுவதென்பது முடியாத விடயம். இதனால் தமிழ் மக்களுக்கு விரக்தி ஏற்பட்டுள்ளது.
கேள்வி:- பலவீனமான நிலையில் இருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியை நீங்கள் தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன?
பதில்:- தமிழர் விடுதலைக் கூட்டணி பழம்பெரும் கட்சியாகும். இந்தக் கட்சியிலிருந்தே அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவரானார்.
இரா.சம்பந்தன் முதன் முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். அக்கட்சி ஆரம்பத்திலிருந்து இன்றுவரையில் காந்திய வழியிலேயே செயற்பட்டு வருகின்றது.
அதன் காரணத்தாலேயே அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், நீலன் திருச்செல்வம் என பலர் அழிக்கப்பட்டார்கள். இறுதியாக அவர்களின் கருத்துக்களே இன்று நிதர்சனமாகின்றன.
குறிப்பாக தற்போதைய தலைவர் ஆனந்தசங்கரி விடுதலைப்புலிகளால் துரோகியாக பார்க்கப்பட்டவர். அக்காலத்திலும் அவர் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு பலவிடயங்கள் குறித்து கடிதம் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டேயிருப்பார்.
அவருடைய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களின் யதார்த்தம் தற்போது வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பாலேயே திட்டமிட்டு இக்கட்சி ஓரங்கட்டப்பட்டுள்ளது. எனினும் அக்கட்சியின் தலைவர் கொள்கை மாறாதிருக்கின்றமை விசேடமானதாகும்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட இல்லாத நிலையில் இக்கட்சி காணப்படுகின்றதால் பலவீனமான கட்சியென பொருள்படாது.
இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளால் தமிழ் மக்களுக்கு இன்று மாற்று அரசியல் சக்திகள் அவசியமாகின்றன.
மேலும் ஆனந்த சங்கரியும் தன்னுடன் இணைந்து செயற்படுவதற்கான கதவுகள் திறந்திருப்பதாக அறிவித்திருந்தமையால் அவருடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்படவுள்ளேன். உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலிருந்து எமது பயணம் ஆரம்பமாகும்.
கேள்வி:- விடுதலைப் புலிகள் இயக் கத்திலிருந்து நீங்கள் பிரிந்தமைக் கான பிரதான காரணம் என்ன?
பதில்:-செப்டெம்பர் 11ஆம் திகதி அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னர் உலக அரசியல் ஒழுங்கில் மாற்றமேற்பட்டிருந்தது.
எங்கு பயங்கரவாதம் காணப்படுகின்றதோ அதனை அழிக்க வேண்டுமென்ற சட்டமும் ஏற்படுத்தப்பட்டது. அதன்போதே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க வேண்டுமென்று முடிவாகிவிட்டது.
அக்காலகட்டத்திலே ஒஸ்லோவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
இந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்ற வேண்டுமென எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. ஆகவே அரசியல் ரீதியாக இயக்கத்தை மாற்றமடையச் செய்வதற்கு முயற்சிகளை அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் இணைந்து மேற்கொண்டேன்.
இருந்தபோதும் ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்து வைத்தமை தொடர்பாக என்மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டமையால் அவ்வமைப்பிலிருந்து விலகினேனே தவிர எனக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குமிடையில் எந்தவிதமான தனிப்பட்ட குரோதங்களுமில்லை.
கேள்வி:- விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு உலக அரங்கில் ஏற்பட்ட, ஏற்படவுள்ள மாற் றங்கள், அதற்கான அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பாக தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தாலோ அல்லது உங்களாலோ தெரியப்படுத்தப்பட்டதா?
பதில்:-இந்த விடயம் தொடர்பாக பல தடவைகள் பிரபாகரனுடன் பேசியிருக்கின்றோம். ஒவ்வொரு பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் போதும் அது தொடர்பில் அவருக்கு தெரியப்படுத்தப்பட்டன.
எதிர்காலத்தில் உலக ஒழுங்கில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதால் எமது அடுத்த கட்ட நகர்வுகள் இவ்வாறுதான் மேற்கொள்ளப்படவேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டது.
அக்காலப்பகுதியில் இயக்கத்தினுள்ளிருந்து அரசியல் விடயங்களை திட்டமிடுவதற்காக ‘சிரான்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இருப்பினும் அந்நேரத்தில் இருந்த சூழ்நிலையில் ஆயுதப்போராட்டம் தான் முடிவு என்ற தீர்மானத்தினை எடுத்திருந்தனர்.
விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுத ரீதியாக போராடி பல வெற்றிகளைப்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
குறிப்பாக ஜெயசிக்குறு நடவடிக்கையின் போது களத்தில் நின்றவன் என்ற அடிப்படையில் அதன்போது எமக்கு பாரிய ஆட்பற்றாக்குறை ஏற்பட்டது.
அதன் பின்னர் வீட்டுக்கு ஒருவர் இயக்கத்தில் இணையவேண்டுமென்று கட்டாயத்தின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெற்றது. கட்டாய ஆட்சேர்ப்பின் மூலம் யுத்தத்தை தொடரலாம் என்பது முடியாத விடயமாகும். இதனால் மக்கள் தமது பிள்ளைகளை இழந்து துன்பத்திலிருந்தனர். அவர்கள் போராட்டத்தை விரும்பாது சலிப்படைந்திருந்தார்கள்.
கேள்வி:- விடுதலைப் புலிகளின் பின்னடைவுகளுக்கு உங்களின் பிரிவு மொரு காரணமாக கூறப்படுகின்றதே?
பதில்:-அது தவறான கருத்தாகும்.அதனை ஏற்கமுடியாது. நான் அந்த இயக்கத்திலிருந்து பிரிந்து வந்தவுடன் ஏனைய போராளிகளை வீட்டுக்கு அனுப்பியிருந்தேன்.
அந்த இயக்கத்திற்கு எதிராக ஆயுதமேந்தவுமில்லை. போராடவுமில்லை. அதேநேரம் பிரபாகரன் தொடர்பில் எந்தவிதமான விமர்சனங்களை நான் முன்வைக்கவுமில்லை. அவரும் என்னுடைய விடயங்கள் தொடர்பாக கூறவில்லை.
கேள்வி:- தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உங்களை விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளிக்கொண்டுவந்தமைக்கு தானே காரணமெனக்கூறியிருக்கின்றார். அதனாலேயே அவ்வமைப்பு பலவீனமாக்கப்பட்டதாகவும் கூறுகின்றாரே?
பதில்:– எனது பிரிவு அவ்வமைப்பை பலவீனமாக்கியிருக்கலாம். நான் யுத்தகளத்தில் தளபதியாக இருந்து செயற்பட்டதன் காரணமாக அவ்வாறு அமைந்திருக்கலாம்.
அதேநேரம் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தில் நியாயமொன்றும் இருக்கின்றது. அதாவது, ஒஸ்லோ பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலப்பகுதியில் உலக நாடுகளைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் மீது அழுத்தமொன்றை கொண்டுவந்திருந்தார்.
அந்த பாரிய அழுத்தத்தை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் புரிந்துகொண்டிருக்கவில்லை.
வெளிப்படையாக கூறுவதானால் சர்வதேச வலைப்பின்னலொன்றை ஏற்படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பை கட்டுப்படுத்த வேண்டுமென்ற திட்டத்தை ரணில் விக்கிரமசிங்க கொண்டிருந்தார்.
அதனடிப்படையிலேயே அவ்வாறான அழுத்தம் வழங்கப்பட்டது. அதனையே அவர் தனது பங்களிப்பாக கூறுகின்றார். மேலும் அவ்வாறான வலைப்பின்னலில் நாம் சிக்காது எவ்வாறு வெளியில் வருவதென்ற நகர்வில் தோல்வியடைந்துவிட்டோம்.
கேள்வி:- நீங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசெல்வதற்கு முன்னதாக உங்களுடன் பேரம் பேசப் பட்டதாகவும் அப்போதைய அரசாங் கத்தரப்பினர் சார்பில் சில முக்கியஸ்தர்கள் உங்களை தனியாக சந்தித் திருந்ததாகவும் கூறப்படுகின்றதே?
பதில்:- அவ்வாறு எந்தவொரு தரப்பினரும் என்னை அணுகவில்லை. ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கு செல்லும் காலகட்டத்தில் ஐ.தே.க.வின் செயலாளராக கடமையாற்றிய மலிக் சமரவிக்கிரம கட்டுநாயக்கவில் உள்ள எயார்போர்ட் கார்டின் விடுதியில் சந்தித்திருந்தார்.
அவர் பேச்சுவார்த்தைகளின் நிலைமைகள், தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்தே கலந்துரையாடியிருந்தார். மாறாக எந்தவிதமான பேரம்பேசல்களும் இடம்பெறவில்லை.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு விடுதலைப்புலிகளால் உருவாக்கப்படவில்லையென தற்போது கூறப்படுகின்றதே?
பதில்:- விடுதலைப்புலிகள் இயக்கமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கிழக்கிலிருந்தே இந்த உருவாக்கம் தோற்றம் பெற்றது.
அந்த உருவாக்கத்தில் நானும் ஒரு அங்கம். ஆனால் சம்பந்தன் தற்போது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையை செய்கின்றார்.
சற்று விளக்கமாக பார்ப்போமாகவிருந்தால் அன்றைய காலத்தில் தராக்கி சிவராம் என்ற பிரபல்யமான ஊடகவியலாளர் இருந்தார். அவர் எனது நண்பரும் கூட.
அவரே இதற்கான முதல் யோசனையை முன்வைத்தார். அதாவது, ஐரிஸ் விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப்போராட்டம் ஒருபுறமாக முன்னெடுக்கப்பட்ட அதேசமயம் அதற்கு ஒப்பாக ‘சிங்பென்’ அமைப்பு அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்றில் இருந்தது.
ஆகவே இவ்வாறான கட்டமைப்பை நாமும் உருவாக்குவோமென என்னிடத்தில் ஆலோசனையை முன்வைத்து பிரபாகரனுடன் ஆலோசிக்குமாறு கோரினார். அந்த விடயத்தை நான் பிரபாகரனிடம் கூறினேன். அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட பின்னர் கூட்டமைப்பினை உருவாக்கினார்.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு விடுதலைப்புலிகளின் அரசியல் பினாமிகள் எனக் கூறப்பட்டது. அதனை முழுமையாக ஏற்றுக்கொள் கின்றீர்களா?
பதில்:- நிச்சயமாக. ஒருபுறம் விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படும். அதற்கு சமாந்தரமாகவும் ஆதரவாகவும் பாராளுமன்றில் குரல் எழுப்பப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காவே கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
மேலும் அக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைமையின் அங்கீகாரமின்றி இவ்வாறான கட்டமைப்பு உருவாக்கப்படமுடியாது என்பது யதார்த்தமான விடயம்.
விடுதலைப்புலிகளின் தலைமை, தளபதிகள் உட்பட பலர் மடிந்துவிட்டார்கள். மடிந்தவர்களுக்கு மதிப்பளிக்கவேண்டியது தமிழர்களாக இருக்கும் எமது கடமையாகும்.
அதனை விடுத்து அவர்கள் எதனையுமே செய்யவில்லை. அவர்களுக்கும் எமக்கும் தொடர்பில்லை. நாமே அனைத்தையும்செய்தோம் எனக்கூறுவது ஏற்றுக்கொள்ளமுடியாது.
கேள்வி:- 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியாகவிருந்தபோதும் வடக்கு கிழக்கில் மக்கள் வாக்களிக்க வேண்டாமென புலிகள் கோரியிருந்தார்கள். இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் அவர் மூலமாக வழங்கப்பட்ட பெருந்தொகை நிதியுமே காரணமெனக் கூறப்படுகின்றதே?
பதில்:- நிதிவழங்கினார்களா இல்லையா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஒரெயொரு விடயத்தை நான் நன்கு அறிந்திருந்தேன்.
ஒஸ்லோ பேச்சுக்களின் போது எம்மை சிக்கலுக்குள் உட்படுத்தியவர் ரணில் விக்கிரமசிங்க. அதனால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர் மீது கடுங்கோபம் கொண்டிருந்தார்.
அதனால் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக எவருக்குமே வாக்களிக்கவேண்டாமெனக் கோரியிருந்தாரே தவிர தனியே ரணிலுக்கு வாக்களிக்கவேண்டாமென கோரியிருக்கவில்லை.
கேள்வி:- பிள்ளையான் என அறியப் பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் உங்களுடன் இணைந்து புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறியிருந் தபோதும் அவர் பிரிந்து சென்றமைக்கான காரணமென்ன?
பதில்:– பிரிந்து போனார் எனக்கூறமுடியாது. பல தளபதிகளை காப்பாற்றுவதற்காக நான் தலைநகருக்கு அழைத்து வரப்பட்டேன். அவர்களை வேறுவேறாக பாதுகாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்போது பல போராளிகள் கொலை செய்யப்பட்டார்கள். குறிப்பாக கொட்டாவ எனும் இடத்தில் கஞ்சிக்குள் தூக்க மாத்திரையைக் கலந்து விடுதலைப்புலிகள் அவர்களை கொலைசெய்திருந்தார்கள்.
வாகரையில் வீடுகளுக்கு செல்ல தயாராக இருந்த பெண்போராளிகள் விடுதலைப்புலிகளால் சுடப்பட்டார்கள். அவர்களின் இறுதிக்கிரியைகளை செய்யக் கூட அச்சுறுத்தலுடன் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கு வாகரை பொதுமக்களே சாட்சியாளர்கள். அதன் பிற்பாடு ஐநூறுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள். எனது சொந்த சகோதரர் சுடப்பட்டார்.
மீண்டும் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த தளபதிகளை சுட்டார்கள். குறிப்பாக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரைக் காப்பாற்றிய ரொபேட், விசு, துரை, ஜிங்களித்தாத்தா, நிஸாம் போன்றவர்கள் நம்பிக்கையில் மீண்டும் சென்றபோது உடனடியாக சுடப்பட்டார்கள்.
அதனைத்தொடர்ந்து நான் இந்தியாவுக்கு குடும்பசகிதம் சென்றிருந்தேன். அக்காலப்பகுதியிலேயே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உருவாக்கப்பட்டது. அதில் நான் உறுப்பினராகக் கூட இருக்கவில்லை.
அதன்பின்னர் இந்தியாவிலிருந்து வருகை தந்து லண்டனுக்குச் சென்றிருந்தேன். அங்கு கைது செய்யப்பட்டு ஒருவருடத்திற்கு அதிகமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.
அதன் பின்னர் மீண்டும் இங்கு வருகை தந்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கோரினார். அதனை பெற்றேன். இதுவே உண்மையில் நடந்தது.
கேள்வி:- புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்ததன் பின்னர் வாகரையில் நீங்கள் முகாமிட்டிருந்ததா கவும் கிழக்கில் விடுதலைப்புலிகளின் புலானய்வுக் கட்டமைப்பை முழுமை யாக முடக்கியிருந்ததாகவும் யுத்தம் ஏற்படுவதற்கான நிலைமைகள் காணப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் உள்ளதே?
பதில்:-விடுதலைப்புலிகளின் தலைமை அனைவரையும் வன்னிக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்போது அனைத்து தளபதிகளை அழைத்து விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தமைக்கான விளக்கத்தை பூரணமாக வழங்கியிருந்தேன். அதன்போது தளபதிகளின், போராளிகளின் பெற்றோர்கள் அங்கு வருகைதந்து விட்டார்கள். அதனால் இக்கட்டான நிலைமை ஏற்பட்டுவிட்டது.
அந்நிலையில் நான், யாருக்கு வன்னிக்கு செல்வதற்கு விருப்பமிருக்கின்றதோ அவர்கள் செல்லலாம். அதற்கு தடைவிதிக்கப்போவதில்லை.
ஏனையோர் அவர்களின் உறவுகளுடன் வீட்டுக்குச்செல்லலாம் என்ற அறிவிப்பைச் செய்திருந்தேன். அதனைத்தொடர்ந்தே ரமேஷ், ராம், பிரபா, ரமணன், கரிகாலன் அண்ணா, அவருடைய மனைவி என அனைவரும் சென்றிருந்தார்கள்.
அதேபோன்றுதான் புலனாய்வு பிரிவினர் மீது சந்தேகங்கள் ஏற்படுகின்றபோது அவர்களை பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக வன்னிக்குச் செல்லுமாறு கூறியிருந்தேன். காவல்துறையினரையும் அவ்வாறே கூறி அனுப்பி வைத்தேன். தவிர யாரையும் தடைசெய்யவில்லை. யுத்தம் புரிவதற்கான முஸ்தீபைச் செய்யவில்லை.
ஆனால் அக்காலத்தில் யுத்தத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சிகளை அரசாங்கம் மறைமுகமாக ஏற்படுத்திக்கொண்டிருந்தது. குறிப்பாக யுத்தநிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி ஆயுதங்களை கடற்பரப்பினூடாக மூதூருக்கு கொண்டுவருவதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. பட்டப்பகலில் ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டன.
நூற்றுக்கணக்கான போராளிகள் பஸ்ஸில் கொண்டுவரப்பட்டார்கள். அதனை அவதானித்துக்கொண்டிருந்தேன்.
அதன் பின்னர் இறுதியாகவொரு சம்பவம் என்னால் என்றுமே மறக்க முடியாததொன்றாகும்.
வெருகல் ஆற்றின் மறுபக்கத்தில் மூதூர் தளபதி சுசிலன் தலைமையில் படையினர் இருந்தனர். ஆற்றின் இப்பக்கத்தில் நான் இருந்தேன். அதன்போது போர்புரிவது எனது நோக்கமல்ல.
சகோதரப் படுகொலைகள் வேண்டாம் என்பதை தெளிவாக குறிப்பிட்டேன். எனினும் அதனையடுத்த சிலநாட்களில் வீடுகளுக்குச் செல்லவிருந்த பெண்போராளிகள் கொலைசெய்யப்பட்டார்கள். ஆறாயிரம் போராளிகள் என்னிடமிருந்தும் நான் யுத்தம் செய்யவில்லை.
கேள்வி:- அலிசாஹீர் மௌலானா உங்களை கொழும் புக்கு அழைத்து வந்தபோது சில ஆவணங்களை கொண்டுவந்தீர்கள் என கூறப்பட்டிருக்கின்றதே?
பதில்:- தமிழ் – முஸ்லிம் உறவுக்காக அலிசாஹீர் மௌலானாவும் நானும் மிக நெருக்கமாகச் செயற்பட்டவர்கள்.
அவரிடத்தில் அப்போதைய நிலைமைகளை நான் எடுத்துக் கூறியபோது அவர் அதனை ஏற்றுக்கொண்டு என்னை தலைநகருக்கு அழைத்து வந்திருந்தார். அவருடைய செயற்பாடு மிகவும் சிறந்தது. என்றும் நன்றிக்கடன் பட்டவனாக உள்ளேன்.
அதேநேரம் இங்கு வருகை தரும்போது வெறுமையான கைகளுடனேயே வந்திருந்தேன். எந்தவிதமான ஆவணங்களையும் நான் எடுத்து வந்திருக்கவில்லை.
மேலும் யுத்தம் தொடர்பில் மக்கள் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தொழில் நுட்பம் வளர்ந்திருக்கின்ற நிலையில் செய்மதிமூலம் வேண்டிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இராணுவமும் விடுதலைப்புலிகளும் 100 மீற்றர் இடைவெளியில் தடுப்பமைத்து இருக்கின்ற நிலையில் அங்கு மறைப்பதற்கு எதுவுமில்லை. ஆகவே நான் ஆவணங்களைக் கொண்டு வந்து கொடுத்து அதன் மூலம் இராணுவம் வெற்றியடைந்தது என்பது மிகவும் தவறானது.
கேள்வி:- முள்ளிவாய்க்காலில் பாரிய அவலம் நிகழ்வதற்கு யாருடைய தவறுகள் காரணமாக அமைந்தன எனக்கருதுகின்றீர்கள்?
பதில்:- அரசாங்கம், விடுதலைப்புலிகள் ஆகிய இரண்டு தரப்புக்களுமே காரணமாகின்றன. விடுதலைப்புலிகள் இயக்கம், மக்களை கேடயமாக வைத்திருந்தால் அரசாங்கம் எவ்விதமான தாக்குதல்களையும் மேற்கொள்ளாது பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் எனக் கருதினார்கள்.
கழுத்தில் சயனைட்டை வைத்து யுத்தம் செய்த விடுதலைப்புலிகள் இயக்கம் மக்கள் பின்னால் மறைந்து நின்று யுத்தம் செய்தமை தவறான விடயம்.
இறுதித்தருணத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டை உடைத்து மக்கள் அங்கிருந்து எவ்வாறு வெளியேறினார்கள் என்பதற்கு வன்னி மக்கள் சான்றாகின்றார்கள்.
அவர்கள் வெளியேறிய போது விடுதலைப்புலிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வரலாறுகளும் உள்ளன. அதற்கான காரணத்தைக் கேட்போது மேலிடத்து உத்தரவு என கூறப்பட்டமைக்கான சான்றுகளும் உள்ளன.
இதனாலேயே மக்களுடன் மக்களாக வருகைதந்திருந்த விடுதலைப்புலிகளை மக்களே இராணுவத்தினருக்கு அடையாளம் காட்டியிருந்தனர்.
அதேநேரம் பயங்கரவாத இயக்கம் மக்களை கொலை செய்தால் அதற்கான சட்டங்கள் வேறுபட்டவை. ஆனால் இறைமையுள்ள நாடு அவ்வாறு செய்யுமானால் அது சர்வதேச ரீதியாக கருத்திலெடுக்கப்படும்.
அவ்வாறு செய்திருந்தால் அதற்கான விளக்கம், தீர்வு என்பன உடனடியாக எடுக்கப்பட்டிருக்குமானால் தற்போது இந்தளவுக்கு சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்டிருக்காது.
யுத்தம் நிறைவடைந்தவுடன் பூச்சியநிலை உயிரிழப்புக்களே நிகழ்ந்ததாக அரசாங்கம் பாராளுமன்றத்தில் அறிவித்தது.
அனைத்து நாடுகளுமே யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. எனவே உலக நாடுகள் அக்காரணத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
தென்னாபிரிக்காவில் அசாதாரண நிலைமைகளின் பின்னர் உடனடியாக உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவினார்கள்.
உடனடியாக விசாரணை மேற்கொண்டார்கள். இங்கு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்த போதும் அதன் பரிந்துரைகளை கவனத்தில்கொண்டு முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை அல்லது அரசாங்கம் தமிழ் மக்களிடம் பகிரங்கமான மன்னிப்பை கோரியிருக்கலாம்.
அவற்றை அவர்கள் செய்யவில்லை. இதனால் தான் போர்க்குற்றச்சாட்டுக்கள், மீறல்கள் என நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளார்கள்.
கேள்வி:- இக்காலப் பகுதியில் நீங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்தீர்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தீர்கள். எனவே அவலங்கள் நிகழாது தடுத்து நிறுத்துவது குறித்து அவரிடத்தில் எடுத்துக் கூறினீர்களா?
பதில்:- கூறியிருந்தேன். சில விடயங்களை அவர் செய்திருந்தார். வன்னியிலிருந்து போராளிகள் வருகை தரும்போது வெளிப்படையாக இல்லாது விட்டாலும் தீவிரமாக செயற்பட்டேன்.
ஒவ்வொரு நாளும் அப்போதைய ஜனாதிபதியைச் சந்தித்தேன். இவ்வாறு வருகை தரும் போராளிகள் மீது வழக்குத் தாக்கல்செய்யுமாறு வலியுறுத்தினார்கள்.
அதன்போது போராளிகளை மன்னித்து புனர்வாழ்வளிக்கும் பொறிமுறையொன்றை ஏற்படுத்தவேண்டுமெனக் கோரினேன். அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு 12 ஆயிரம் போராளிகளை விடுதலை செய்திருந்தார். அது வரவேற்கப்படவேண்டியதொன்றாகும்.
கேள்வி:- ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளின் பின்னரே விடுதலைப்புலிகள் அமைப்பினுள் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. உண்மையிலேயே அப்பேச்சுக்களின்போது என்ன நடந்தது?
பதில்:- போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியிருந்தன. எமது தரப்பிற்கு அன்ரன் பாலசிங்கமும், அரசாங்கத்தரப்பிற்கு ஜி.எல்.பீரிஸும் தலைமை தாங்கினர்.
நோர்வேநாட்டின் அனுசரணையாளர்களாக நோர்வே, நாட்டின் விடார் எல்கீசன், யோன் வெஸ்ட்பேக், எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் இருந்தனர்.
பேச்சுவார்த்தை தொடர்ந்த நாட்களில் திடீரென ஒருநாள் ஆவணமொன்று சமர்ப்பிக்கப் பட்டது. நாம் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்கின்றோம்.
இருப்பினும் எதுவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகவே இணக்கபாடொன்றின் ஊடாகவே பேச்சுவார்த்தையை முன்னகர்த்த முடியும் எனக் விதாஹல்ஹசன் குறிப்பிட்டார்.
இதன்போது அன்ரன் பாலசிங்கம் கோபமடைந்து முன்னறிவித்தல் இன்றி எவ்வாறு ஆவணத்தை சமர்ப்பிப்பீர்கள் என கேள்வியெழுப்பினார். அத்துடன் தலைமையு டன் கலந்தாலோசிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
கேள்வி:- சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆவணத்தில் என்ன விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது?
பதில்:- அதில் சமஷ்டி முறையிலான தீர்வை பரிசீலிப்பதென பேசுவோம். அதன் முடிவாக ஒப்பந்தத்திற்கு வருவோம். முதற்கட்டமாக பரிசீலிப்பதென்பதற்கு இணங்கி கையொப்பமிடுவோம் என்றே கோரப்பட்டிருந்தது.
கேள்வி:- அதன்பின்னர் இடம்பெற்ற விடயங்களை தொடந்தும் கூறுங்கள்?
பதில்:- இந்நேரத்தில் அவ்விடயம் தொடர்பாக நாம் கலந்துரையாடுவோம் என நான் அன்ரன்பாலசிங்கத்தை அழைத்தேன்.
அவர் வந்தவுடன் தொடர்ந்தும் நாம் தலையிடம் கேட்டுச் சொல்வதாக கூறி தாமதப்படுத்தினால் எம்மீதான மரியாதை குறையும். நாங்கள் தலைமைப்பேச்சாளர் என்பதால் உங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது.
மேலும் இதுவொரு நல்ல நகர்வாகும். உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
உருத்திரகுமாரன் ஜப்பான் பேச்சுக்களின் போது நிகழ்ந்த அனுபவங்களை சட்டநுணுக்கங்களையும் கூறினார்.ஜோய் மகேஸ்வரனும் வரவேற்றார். தமிழ்ச் செல்வன் மட்டுமே தலைவரிடத்தில் கேட்கவேண்டுமென்றார்.
பல கருத்துக்களுக்கு மத்தியில் இறுதியில் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடுவதெனவும் பின்னர் தலைவரிடத்தில் அதனை தெளிவுபடுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் நாட்டிற்கு வருகைதந்திருந்தோம். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட விடயம் நாம் வருகை தர முன்னதாகவே பிரபாகரன் அறிந்திருந்தார்.
நாம் இங்கு வருகைதந்து மறுதினம் பிரபாகரனை சந்தித்தோம். அதன்போது தன்னை கேட்காது கைச்சாத்திட்டமை குறித்து கடுங்கோபம் கொண்டிருந்தார்.
ஆவணத்தை கொடுத்தபோது அதனை கிழித்து வீசினார். ஒருவரி கூட படித்திருக்கவில்லை. அன்றைய தினம் 7மணிக்கு முக்கிய தளபதிகள் பங்கேற்புடன் கூட்டமொன்று நடைபெற்றது.
கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் எனது தூண்டுதலிலேயே பாலா அண்ணா கையெழுத்திட்டார் என்ற விடயம் இறுதியாக பிரபாகரனுக்கு கூறப்பட்டது.
அதனால் கடுமையான கோபமடைந்திருந்தார். சூசை, தமிழ்ச்செல்வன், தீபன், பாணு, என அனைவரும் அமைதியாக இருந்தனர். அவருடைய பேச்சுக்கள் கடுமையடைந்தன. இறுதியாக என்னைப்பார்த்து மாத்தையா போன்றே நீயும் துரோகம் செய்து விட்டாய் என்ற வார்த்தையை பிரயோகித்தார்.
கடவுளாக நினைத்தவர், பலதடவைகள் அவருக்காக போராடியா அவரை காப்பற்றிய என்னைப்பார்த்து இவ்வாறு கூறிவிட்டாரே என ஆதங்கம் என்னுள் ஏற்பட்டது.
அந்த சூழலில் தமிழேந்தி, பாலகுமார் விடுதலைப் போராட்டத்தை விற்றுவிட்டார்கள் என ஆவேசமாக வார்த்தைகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர்.
ஆகவே சூடான வாதங்களால் பலபிரச்சினைகள் ஏற்படும் என்பதால் இந்த ஒப்பந்தத்தை ஏற்கமுடியாது என நானே அறிவிக்கின்றேன் என கூறினேன். நீ அவ்வாறே செய் என பிரபாகரன் கூறவும் அந்த கூட்டம் நிறைவானது.
அதன் பின்னர் என்னால் அவ்வொப்பந்தத்தை ஏற்கவில்லையென அறிவிப்பை செய்யமுடியாதிருந்தது. சமாதான ஒப்பந்தத்தில் ஆறு தளபதிகளுக்கு ஹெலிகொப்டரில் பயணிக்கும் வரப் பிரசாதம் வழங்கப்பட்டிருந்தது.
என்ன செய்வதென்ற நிலையில் இருந்த நான் இறுதியாக அதனைப் பயன்படுத்தி ஓமந்தையிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்தேன்.
அதன் பின்னர் என்னால் அந்த அறிவிப்பை செய்யமுடியாதென்பதையும் அவருக்கு அறிவி த்ததுடன் நான் அமைதியாக இங்கேயே இருக்கின்றேன் என பிரபாகரனுக்கு கூறினேன்.
அவ்வாறே இருந்தேன். அத்தோடு அந்தக் காலத்திலேயே போராளிகளை வன்னி அனுப்புமாறு கோரிய நிலைமைகள் மோசமடைந்ததால் பிரியவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டேன்.
கேள்வி:- ஐ.நா அறிக்கையில் உங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளனவே?
பதில்:- முதலாவதாக ஐ.நா. மனித உரிமை மன்றம் இறுதி யுத்தம் தொடர்பாகவே விசாரணை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவதாக கருணா குழு இறுதி யுத்தத்திற்காக சிறுவர்களை படையில் இணைத்தது எனக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறவில்லை. முள்ளிவாய்க்காலில் தமிழ் இராணுவவீரர் போரிடவுமில்லை.
நாட்டில் நான் இருக்காத காலத்தில் என்னுடைய பெயர் மிகமோசமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எவர் சுடப்பட்டாலும் கருணா குழுவென்றே கூறினார்கள். உண்மை அதுவல்ல.
அண்மையில் தொலைக்காட்சியொன்றுக்கு செவ்வியளித்த பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா இறுதி யுத்தம் தொடர்பாக கூறுகையில் கருணா என்பவர் யுத்தத்தில் எமக்கு எதனையுமே செய்யவில்லை எனக் கூறியிருக்கின்றார். அதுசிறந்த உதாரணமாகும்.
நீண்டகாலம் ஆயுதப்போராட்டத்தில் இருந்த என்னூடாக அரசியல் தீர்வை பெறுவதற்கே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ முற்பட்டாரே தவிர என்னை யுத்தத்திற்கு உதவுமாறு கோரியிருக்கவில்லை. அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவும் கோரவில்லை.
கேள்வி:- எனினும் அப்போது இடம்பெற்ற கொலைகளின் சூத்திரதாரியாக நீங்களே கூறப்பட்டீர்கள்?
பதில்:- அதற்கு காரணமொன்று இருக்கின்றது. அக்காலத்தில் விடுதலைப்புலிகள் சிலரை சுட்டுக்கொலை செய்ததனால் அச்சத்தில் பல இளைஞர்கள் இராணுவத்துடன் இணைந்திருந்தார்கள்.
கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான நிலைமை அதிகமாக காணப்பட்டது. அதனை மையப்படுத்தியே கருணாகுழு என புனைக் கதைகள் உருவாகியிருந்தன. எனினும் எனக்கு அதில் எவ்விதமான தொடர்பும் இருந்திருக்கவில்லை.
கருணா குழு காரணமென கூறப்பட்ட பலகொலைகள் தொடர்பான விசாரணைகளில் உண்மைகள் வெளிவரஆரம்பித்துள்ளன. ஆகவே எனது பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
அதுதொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டால் அதற்கு முகங்கொடுக்க தயாராகவுள்ளேன். அதன் மூலமே இவ்விடயங்களில் எனக்கு எந்தவிதமான தொடர்புமில்லை என்பதை நிரூபிக்க முடியும்.
அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டவுடன் நான் கைது செய்யப்படுவேன் எனக்கூறினார்கள். எதுமே நடைபெறவில்லை. காரணம் நான் எதனையுமே செய்யவில்லை.
கேள்வி:- யுத்தம் உக்கிரமடைந்த நிலையில் விடுதலைப்புலிகள் அதனை நிறுத்துவதற்கு, அல்லதுவெளியேறுவதற்காக முனைப்புக்களை செய்திருந்தார்களா?
பதில்:- அவ்விடயங்கள் குறித்து எனக்கு எவையுமே தெரியாது. இருப்பினும் அவ்வாறான முஸ்தீபொன்று நடைபெற்றிருக்கின்றது. கடற்புலித்தளபதி சூசை வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு ஆயுதங்களை மௌனிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
உரிய முறையில் அரசாங்கத்தை தொடர்புகொண்டிருந்தார்களா என் பது எனக்கு தெரியாது. சுந்திரநேருவும் அதுகுறித்து கருத்துக்களை முன்வைத்திருந்தார். எனினும் அவ்வாறு முயற்சித்திருப்பார்களாயின் அது காலங்கடந்த நடவடிக்கையென்றே கருதுகின்றேன்.
கேள்வி:- மரபுவழி போர்முறைமை, முப்படைகள் எனக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் போரில் தோல்வியடைந்தமைக்கான காரணமென்ன?
பதில்:- விடுதலைப் புலிகள் அமைப்பை மரபு வழி யுத்தத்திற்கு மாற்றியமைத்தது நானே. பூநகரி யுத்தத்தின் பின்னர் அம்முறைமைக்கு மாறியிருந்தோம்.
முன்னதாக நாம் மரபுவழி யுத்தத்திற்கு செல்லவேண்டும் என பிரபாகரனிடம் வலியுறுத்தினேன். தவறின் இராணுவம் குடாநாட்டை விரைவில் கைப்பற்றுவார்கள் என கூறியிருந்தேன்.
அதேபோன்று மூன்று மாதங்களில் இராணுவம் குடாநாட்டை ஆக்கிரமித்தது. பின்னர் மட்டக்களப்பிலிருந்து நான் வன்னிக்கு அழைக்கப்பட்டு மரபுவழிக்கு யுத்தம் தொடர்பான திட்டம் தீட்டப்பட்டு வன்னி யுத்தத்தில் வெற்றி கண்டோம்.
நான் வெளியேறிய போது 10ஆயிரம் எல்லைப் படைவீரர்கள் உட்பட 40 ஆயிரம் போராளிகள் காணப்பட்டார்கள். கொக்குதொடுவாய் முதல் மன்னார் நாயாறு முதல் இராணுவத்தின் எல்லையிலிருந்து 100 மீற்றர் இடைவெளி காணப்பட்டது.
இவ்வாறிருக்கையில் மூர்க்கத்தனமாக இரா ணுவ நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படும்போது இராணுவரீதியான தந்திர உபாயத்தை மாற்றியிருக்க வேண்டும்.
கடந்த காலத்தில் முன்னெடுப்புக்களைச்செய்த இலங்கை இராணுவமே தற்போதும் போரிட வந்திருந்தது. வெளிநாட்டு இராணுவம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியிருந்தாலும் போரிட்டது இலங்கை இராணுவமே.
ஆகவே தந்திரோபாயங்களை மாற்ற தவறியிருந்தமையே விடு தலைப்புலிகளின் தவறாகின்றது. எனது பார்வையில் யுத்தத்தின் இறுதியில் விடுதலைப்புலிகள் கடற்கரையில் ஒருங்கிணைந்தமையே விடுதலைப்புலிகளின் பாரிய தவறாக காணப்படுகின்றது.
கேள்வி:- விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் தற்கொலை செய்திருக்கலாமென எந்த அடிப்படையில் கூறியிருந்தீர்கள்?
பதில்:- நான் எனக்கு தெரிந்த யுத்த அனுபவத்திலேயே அவ்வாறு கூறினேன். காரணம் அவர் படைநடவடிக்கையில் இறந்திருந்தால் அவருடைய உடலின் ஏனைய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டிருக்கும்.
ஆனால் அவ்வாறான எந்தக்காயங்களும் இருந்திருக்கவில்லை. அவர் வலக்கை பழக்கமுடையவர். துப்பாக்கியை எடுத்துசுடும்போது இடதுபுறமாக ரவை துளைத்துச் சென்றிருக்கும்.
கேள்வி:- பிரபாகரன் இரண்டு கைகளாலும் துப்பாக்கியை பயன்படுத்தும் திறன்கொண்டிருந்தவர் எனக் கூறப்படுகின்றதே?
பதில்:- இல்லை, அவர் வலக்கை பழக்கமுடையவர். இரண்டு கைகளாலும் எவரும் துப்பாக்கியை பயன்படுத்தமுடியும். ஆனால் துல்லியமாக சுடமுடியாது. அவர் வலது கையாலேயே துல்லியமாக சுடுவார் என்பதன் அடிப்படையிலேயே கூறுகின்றேன்.
அதேநேரம் கங்காராம விஹாரையைச் சேர்ந்த தேரரும் விஞ்ஞான ரீதியாக தற்கொலை செய்த ஒருவருக்கே கண்திறந்திருக்குமெனக் கூறியிருந்தார். நான் அடையாளம் காட்டச் சென்றபோது பிரபாகரனின் கண்கள் திறந்தேயிருந்தன.
கேள்வி:- ஏனைய தளதிபதிகளின் உடல்களையும் கண்டீர்களா?
பதில்:- இல்லை, நான் ஏனைய தளபதிகள் எவரினதும் உடல்களையும் காணவில்லை. ஆனால் பிரபாகரனின் உடலுக்கு அருகில் ஆங்காங்கே 18 முதல் 20 உடல்கள் காணப்பட்டன. அவை அவருடைய மெய்ப்பாதுகாவலர்களாக இருக்க முடியுமென்றே கருதுகின்றேன்.
கேள்வி:- இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பிருக்கின்றதா? இதனால் தான் இறுதி யுத்தம் நடைபெற்றிருந்தபோது இந்தியா மெத்தனப்போக்கை கடைப்பிடித்ததா?
பதில்:- ராஜிவ் காந்தியின் கொலைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பிருப்பதென்பது வெளிப்படையான விடயம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும், பொட்டு அம்மானும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள்.
ராஜீவ் காந்தியை கொலைசெய்தவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.அவர்களின் வாக்குமூலத் தின் பிரகாரம் அந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
விடுதலைப்புலிகள் இயக்கம் இழைத்த தவறு இதுவாகும். விடுதலைப்புலிகள் இயக்கம் அவ்வப்போது இவ்வாறான இராஜதந்திர ரீதியாக தவறுகளை இழைத்திருந்தார்கள்.
இந்திய அமைதிப்படையுடன் போரிட்டோம். அவர்களை வெற்றி கொண்டோம். அத்துடன் அனைத்தையும் நிறுத்தியிருக்க வேண்டும். அதனை விடுத்து இன்னொரு நாட்டுக்குள் சென்று அந்நாட்டின் தலைவரை கொலை செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ள முடியாது.
விடுதலைப்புலிகளுக்கு பயிற்சியளித்த நாடு. ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது.
முத லாவதாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்த நாடாகவும் இருக்கின்றது. ஆகவே பயிற்சியளித்த நாடே தடைசெய்யுமளவிற்கு சென்றிருந்தமை கடுமையான பின்னடைவா கும்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது அதில் விடுதலைப்புலிகளும் அங்கமாக இருந்திருக்க வேண்டும். மாற்றாக அதனை நிராகரித்திருந்தார்கள்.
அச்செயற்பாடும் இந்தி யாவுக்கு பிடித்திருக்கவில்லை. பின்னர் ராஜீவ் காந்தியையும் கொலை செய்தவுடன் ஆறுகோடி தமிழர்கள் இருக்கும் நாட்டுக்கு அருகில் இவ்வாறான இயக்கமொன்று உருவாகுவதை முற்றாக விரும்பவில்லை.
இந்நிலையில் இறுதிக்கட்டத்தில் முற்றுமுழு தாக விடுதலைப்புலிகளை வெறுத்ததோடு மறைமுகமாக அரசாங்கத்திற்கு உதவியது. விடுதலைப்புலிகள் அழிந்து போகவேண்டும் என்பதில் அவர்கள் முடிவாக இருந்ததால் எந்தவிதமான குரலும் கொடுக்காது பாரபட் சமாக இருந்தார்கள்.
கேள்வி:- ஆட்சி மாற்றத்தின் பின்னர் நீங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் ஓரங்கட்டப்படுகின்றீர்கள் என உணர்கின்றீர்களா?
பதில்:- அவ்வாறில்லை. நான் தேசிய கட்சியில் உபதலைவராக இருக்கின்றேன். இதுவொரு வரலாற்று முக்கியமான விடயமாகும்.
எதிர் காலத்தில் இவ்வாறான பதவி தமிழருக்கு வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறியான விடயம். ஆட்சி மாற்றத்தின் பின்னர் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதன்போதும் உபதலைவராகவே என்னை ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன நியமித்திருக்கின்றார். ஆகவே அவருக்கும் எனக்கும் எந்தவிதமான பிரச்சினைகளுமில்லை.
இருப்பினும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறவேண்டுமென்பதற்காக தமிழ்க் கட்சியில் இணைந்து குரல்கொடுக்க வேண்டுமென நான் எடுத்த தனிப்பட்ட முடிவேயாகும்.
கேள்வி:- தமிழ்க்கட்சியொன்றிலிருந்து நீங்கள் குரல்கொடுக்கும்போது தென்னிலங்கைக்கு வேறு பட்டதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துமெனக் கருது கின்றீர்களா?
பதில்:- பாரம்பரிய கட்சியை நாம் கட்டியெ ழுப்ப வேண்டிய தேவை எமக்குள்ளது. எதிர் வரும் உள்ளூராட்சி சபையிலிருந்து அதற்கான அடித்தளமிட்டு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வுள்ளன. இது மிகவும் கடினமான பணியாகும்.
இந்தகட்சியைப் பொறுத்தவரையில் அனை த்து தலைவர்களும் ஆயுதப் போராட்ட அமைப் புக்களால் கொல்லப்பட்டுள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இக்கட்சி வளரக் கூடாது என்பதில் உறுதியாகவுள்ளது. இந்தக் கட்சி வளருமானால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமென கருதுகின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத் தியில் ஆட்டம் கண்டிருக்கின்றது. இந்தக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியே இல்லை.
கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டுமென சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கல நாதன், சித்தார்த்தன் ஆகியோர் கோருகின்ற னர். இருப்பினும் சம்பந்தனுக்கோ, மாவைசேனா திராஜாவுக்கோ அதில் விருப்பமில்லை.
அவர் களுடைய ஆதிக்கம் இல்லாது போய்விடும் எனக் கருதுகின்றார்கள். கடந்த வாரம் கூட கொழும்பில் சந்தித்திருந்தார்கள். இருப்பி னும் தீர்மானம் எடுக்கவில்லை. கூட்டமைப்பு குழப்பமான நிலையிலேயே சென்றுகொண்டி ருக்கின்றது.
மறுபக்கத்தில் வடக்கு முதல்வர் விக்கினேஸ் வரன் வேறொரு நிலைப்பாட்டில் இருக்கின்றார். இருப்பினும் அவரை நான் மதிக்கின்றேன். அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியிலும், தன்னுடைய கொள்கையிலும் மாறாது உறுதியாக இருக்கின்றார்.
அவர் அரசியலுக்கு புதிதாக வருகை தந்திருந்தாலும் அவர் சிறந்த தலைவராகவே காணப்படுகின்றார். அவரை யெல்லாம் தூக்கியெறிந்தே தமிழரசுக் கட்சி இயங்க ஆரம்பிக்கின்றது. எனவே தமிழ் மக் களின் குரலாக மாற்றுசக்தி அவசியமாகின்றது.
கேள்வி:- இனப்பிரச்சினை தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றீர்கள்?
பதில்:- வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய நிலமாகும். தமிழ் மக்கள் தனி இனம் என்பதற்கு பாரம்பரிய நிலம், கலாசாரம், விழுமியங்கள், வரலாறுகள் என்பன சான் றாகின்றன. ஒரு தனி இனம் இன்னொரு தனி இனத்துடன் இணைந்து வாழமுடியும்.
அதனடிப்படையில் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ண உரிமை வழங்கப்படவேண்டும். அதன் மூலம் பரந்து பட்டு வாழும் எமது இனம் சுதந்திரமாக, அபிலாஷைகளுடன் உரி மைகளைப் பெற்று வாழமுடியும் என்பது எனது நிலைப்பாடாகும்.