அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நாட்டின் வட பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் நடவடிக்கை பற்றிய விவாதம் நடைபெற்றது.

இதன்போது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் சில அபிப்பிராயங்களை முன் வைத்தன.

பெயரளவில் சம்பிரதாயபூர்வமான எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கும்போது, ‘இலங்கை – இந்திய கடற்படைகள் கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம், இருநாட்டு மீனவர்களும் மற்றவர்களது கடற்பிரதேசத்தில் ஊடுருவுவதைத் தடுக்கலாம்’ என்ற கருத்தை முன்வைத்தார்.

உண்மையான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார பேசும்போது, ‘இந்தப் பிரச்சினையை இலங்கை சர்வதேச அரங்கில் எழுப்ப வேண்டும்’ என்ற கருத்தை முன்வைத்தார்.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹெரத் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், தமிழக மீனவர்களின் ஊடுருவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீன்பிடிப் படகு முதலாளிகளிடம் கூலிக்காக வேலை செய்யும் சாதாரண ஏழை மீனவர்களைக் கைது செய்வதை விடுத்து, ஊடுருவும் படகுகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன் வாரந்தோறும் சராசரியாக சுமார் 1,500 வரையிலான தமிழகப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பினுக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.

தமிழக மீனவர்களின் ஊடுருவல் பிரச்சினை என்பது இன்று நேற்று ஏற்பட்ட ஒரு பிரச்சினை அல்ல. இலங்கை சுதந்திரம் பெற்ற 1948இல் இருந்து இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது.

அதில் ஒரு வேறுபாடு என்னவெனில், இலங்கையில் தமிழ் ஈழத்துக்கான ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆரம்பித்த பின்னர், அது கூடுதலாகத் தீவிரமடைந்திருக்கிறது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தரை மார்க்கமான எல்லைகள் இல்லை. அதனால் இந்தியாவுக்கு அதன் ஏனைய அண்டை நாடுகளுடன் இருப்பது போன்ற எல்லைப் பிரச்சினைகள் எதுவுமில்லை.

ஆனால் வரலாறு விட்டுச் சென்ற ஒரு பிரச்சினை இருந்தது. அது மலையகத்தில் தமது பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கென பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களினால் தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் தொழிலாளர்களின் பிரச்சினையாகும்.

ஆனால் அது இலங்கையில் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த இரண்டு சந்தர்ப்பங்களில் சிறீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம், சிறீமாவோ – இந்திரா ஒப்பந்தம் என்பனவற்றின் மூலம் பெரும்பாலும் பூரணமாகத் தீர்க்கப்பட்டுவிட்டது.

(இலங்கையில் தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையிலான பிரச்சினையும் இதே பிரித்தானிய காலனித்துவவாதிகளால் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்ட ஒன்று என்பது இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது)

1439913570-402அதன்பின்னர் இப்பொழுது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை, தமிழக மீனவர்களின் ஊடுருவல் பிரச்சினையாகும்.

இந்தப் பிரச்சினை மிகவும் சுலபமாகத் தீர்க்கக்கூடிய ஒரு பிரச்சினையாகும். அதாவது தமிழக மீனவர்கள் அடாவடித்தனமாக இலங்கையின் கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடிப்பதைத் தவிர்த்தால், இந்தப் பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும்.

ஆனால் அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவ்வாறு செய்ய மறுக்கிறார்கள்.

இதற்குக் காரணம், தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள்தான். இலங்கைக் கடற்பரப்பினுள் ஊடுருவும் பெரும்பாலான மீன்பிடிப்படகுகள், அங்குள்ள ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் என்பனவற்றுக்குச் சார்பான முதலாளிகளுக்குச் சொந்தமானவையாகும்.

எனவே, இலங்கைக் கடற்பரப்பினுள் ஊடுருவும் தமிழகப் படகுகளையும், மீனவர்களையும் இலங்கை கடற்படை கைப்பற்றிக் கைதுசெய்தால், அவ்விரு கட்சிகளும் கூப்பாடு போடுவதும், போராட்டங்கள் நடாத்துவதும், மத்திய அரசுக்கு தந்திகள் அனுப்புவதும் வழமையாக நடைபெறும் விடயங்களாக இருக்கின்றன.

அதற்கு இரண்டு விடயங்கள் காரணங்களாக இருக்கின்றன.

ஒன்று, இலங்கை கடற்படையின் நடவடிக்கையால், தமக்கு சார்பான மீனவ முதலாளிகளின் வருமானம் பறிபோகிறது என்ற கவலை.

இரண்டாவது, தமிழக கடற்கரை நீளத்துக்கு பரந்து வாழும் 10 இலட்சம் மீனவக் குடும்பங்களின் வாக்குகளை இந்தப் பிரச்சினையை வைத்து கவர்வது.

அதனால் இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமின்றி, மீனவர்களின் வாக்குகளை மனதில் வைத்து இதர கட்சிகளும் இப்பொழுது ‘கும்பலிலே கோவிந்தா’ போட ஆரம்பித்துள்ளன.

சர்வதேசியத்துவம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட, சின்னஞ்சிறிய இலங்கையின், அதிலும் அந்த நாட்டின் வடபகுதியில் வாழும் தமிழ் பேசும் மீனவர்கள்தான் தமிழக மீனவர்களின் அத்துமீறலால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கவனத்தில் எடுக்காது, பிழைப்புவாத திராவிடக் கட்சிகளின் மொழியில் இந்தப் பிரச்சினையைத் தமது பத்திரிகைகளில் எழுதி வருகின்றன.

பல தடவைகள் தமிழக கடலோர காவற்படை அதிகாரிகளும், மத்திய அரசாங்க அமைச்சர்களும், இந்தப் பிரச்சினை உருவாவதற்கு தமிழக மீனவர்களின் அத்துமீறல்தான் காரணமென தெரிவித்து வந்த போதிலும், தமிழக அரசுகளும், அரசியல் கட்சிகளும் அதைச் சட்டைசெய்வதே இல்லை.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடிப்பது என்ற அநியாயத்தை மட்டும் செய்யவில்லை.

எதிர்காலத்தில் எமது கடற்பரப்பில் மீன்வளமே இல்லாமல் போகும் அளவுக்கு தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி, கடல் வளத்தை முற்றிலுமாக வாரிச் செல்லும் அக்கிரமத்தையும் செய்கின்றனர்.

இலங்கையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இருந்த காலங்களில், இலங்கை கடற்படை அத்துமீறும் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் போதெல்லாம், ‘தமிழின கொலை வெறியன் ராஜபக்ச தமிழக மீனவர்களையும் திட்டமிட்டு கொலை செய்கிறான்’ என்ற மாதிரி தமிழக அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் இனவாத அடிப்படையில் கூச்சலிட்டு வந்தனர்.

ஆனால் இப்பொழுது மகிந்தவின் ஆட்சி போய், மைத்திரி – ரணில் ‘நல்லாட்சி’ வந்த பின்னரும் ஊடுருவும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்களே?

அப்படியானால் தற்போதைய இலங்கை அரசும் தமிழினக் கொலைவெறி பிடித்த அரசா? அதுமட்டுமின்றி, ஊடுருவும் தமிழக மீனவர்களை அவர்களது சகோதர இனத்தவர்களான வட பகுதி தமிழ் மீனவர்கள் தாமாகவே கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைக்கிறார்களே? கடலில் சில வேளைகளில் இருபகுதியிருக்கும் இடையில் மோதல்கூட நடைபெறுகிறதே? இதற்கு எந்த இனவாதச் சாயம் பூசப்போகிறார்கள்?

முன்னைய ஆட்சிக் காலத்தில் தமிழக மீனவர்களின் அத்துமீறலை, ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதி, உரிமைக்காவலன் என்றெல்லாம் தம்மைப் பீற்றிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் கண்டனம் செய்தது கிடையாது.

அதேநேரத்தில், வட பகுதி மீனவர்கள் சார்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி போராட்டங்களை முன்னெடுத்தபோது, ‘மகிந்தவின் எடுபிடியான டக்ளஸ், தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழ் மீனவர்களையும் தமிழக மீனவர்களையும் மோத வைப்பதற்குப் பார்க்கிறார்’ என கூட்டமைப்பினர் வசைபாடித் திரிந்தனர்.

இன்றும் கூட, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தப் பிரச்சினையில் தமிழக மீனவர்களைக் கண்டிக்கவோ அல்லது வட பகுதி மீனவர்களுக்கு ஆதரவாகவோ இல்லை என்பதை சம்பந்தனின் நாடாளுமன்ற உரை தெட்டத் தெளிவாக்கியிருக்கிறது.

அவரது உரையின் பிரகாரம், தமிழக மீனவர்கள் மட்டுமின்றி, இலங்கை மீனவர்களும் இந்தியக் கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடிப்பது போலவும், எனவே இரு பகுதியினரையும் கட்டுப்படுத்த இருநாட்டு கடற்படைகளினதும் கூட்டு ரோந்து நடவடிக்கை தேவை என்றும் கூறுகிறார்.

சம்பந்தனின் இந்தக் கூற்று, அப்பட்டமாக தமிழக மீனவர்களின் ஊடுருவலை மறைப்பதற்காகவும், பிரச்சினையைத் திசை திருப்புவதற்காகவும் சொல்லப்பட்ட மோசடிக்கதை.

குற்றமிழைப்பவர்கள் தமிழக மீனவர்கள். அவர்களை இலங்கைக் கடற்பரப்புக்குள் ஊடுருவாமல் தடுப்பது இந்திய அரசின் (கடற்படையின்) கடமை.

அதை மீறி ஊடுருவி வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது இலங்கை அரசின் (கடற்படையின்) கடமை. அப்படியிருக்க கூட்டு ரோந்து எதற்காக? ஒருவேளை தனது ‘தாய்நாடான’ இந்தியாவின் மீதான பற்றால், அந்நாட்டின் கடற்படை ஆதிக்கத்தை இலங்கையின் இறைமைக்குள் ஊடுருவ வைக்க சம்பந்தன் ஆசைப்படுகிறாரோ என்னவோ?

உண்மையில் இந்தப் பிரச்சினையால் கடுமையாகப் பாதிக்கப்படுபவர்கள் இலங்கையின் வட பகுதியில் மீன்பிடித்தொழில் மூலம் தமது அன்றாட சீவனத்தை நடாத்தி வரும் தமிழ் பேசும் மீனவர்கள்தான்.

அவர்கள் ஏற்கெனவே 30 வருட இனவாதப் போரால் நீண்ட காலம் தமது தொழிலை இழந்து, வீடு வாசலை இழந்து, அகதிகளாக அலைந்து, பல உயிர்களைக் காவு கொடுத்து, அல்லோலகல்லோலப்பட்டவர்கள்.

2009இல் மகிந்த அரசு புலிகளை பூண்டோடு ஒழித்துக்கட்டிய பின்னர்தான், வடக்கு கிழக்கு மீனவர்களின் வாழ்வில் மீண்டும் ஒளி பிறந்தது. புலிகள் ஒழிக்கப்படாமல் இருந்து, யுத்தம் தொடர்ந்திருந்தால் இன்றும் அவர்கள் வாழ்வு இருள் சூழ்ந்ததாகத்தான் இருந்திருக்கும்.

இப்பொழுதுதான், அவர்கள் சற்று நிம்மதியாகத் தமது தொழிலைச் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் ‘பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்தது’ போல, அவர்களது வாழ்வைத் தமிழக மீனவர்கள் சூறையாடுவது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

அவர்களது பிரச்சினை வெறுமனே அவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டும் அன்று. அது ஒரு தேசியப் பிரச்சினை.

எனவே இலங்கை அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து மக்களும், இந்தப் பிரச்சினையில் ஓரணியில் நின்று அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

எமது மீனவர்கள் இந்தப் பிரச்சினை சம்பந்தமாக ஆர்ப்பாட்டங்கள், கண்டனத் தீர்மானங்கள், மகஜர் கையளிப்புகள், தபாலட்டைப் போராட்டம், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கும், யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதுவருக்கும் மனு, என எத்தனையோ வழிமுறைகளைச் செய்துவிட்டார்கள். ஆனால் அவற்றால் எந்தப் பிரயோசனமும் ஏற்பட்டதாக இல்லை.

எனவே, எமது மீனவர்களை தமிழக மீனவர்களின் அத்துமீறலில் இருந்து பாதுகாப்பதற்காக, இந்திய அரசுடன் கறாராகப் பேசி அதனாலும் பயன் இல்லையென்றால், உண்மையான எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டது போல, தேவையேற்பட்டால் இந்தப் பிரச்சினையை சர்வதேச அரங்கிற்கு, அதாவது ஐ.நா., சர்வதேச நீதிமன்றம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் என்பனவற்றிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இதைத்தவிர, இலங்கைக்கு முன்னால் வேறு தெரிவுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

-மூலம்-வானவில் இதழ்-

Share.
Leave A Reply

Exit mobile version