நெஞ்சோடு தான் பெற்ற பிஞ்சுக்குழந்தையை நெருக்கமாய் அணைத்து குஞ்சை காக்கும் கோழியைப் போல் பாசத்தோடு காத்து வரும் தாயன்புக்கு நிகருண்டோ…!
உலகமே வெறுத்து ஒதுக்கினாலும், உறவுகள் விட்டு விலகினாலும், வறுமை வந்து வாட்டினாலும் தான் பெற்ற சேயின் மகிழ்ச்சியில் உயிர் வாழ்பவள் தான் தாய்.
இதனால் தான் ‘நடமாடும் தெய்வம்’ என தாயை சிறப்பித்துக் கூறுகின்றார்கள். ஆனால், இன்று இந்த நிலை மாறி பெற்ற தாயே பிள்ளைகளுக்கு இயமனாக மாறும் துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.
அன்பான கணவன், அடக்கமான மனைவி, அழகான குழந்தைகள் என்று இருப்பதைக்கொண்டு மன நிறைவோடு யதார்த்தமான குடும்ப வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக பணம், மோக ஆசைகள், ஆடம்பர வாழ்க்கை என்பவற்றுக்கு பின்னால் சென்று இறுதியில் எந்தப் பாவமும் அறியாத அப்பாவிக்குழந்தைகளின் உயிர்களைப் பலியெடுக்கும் அளவுக்கு நிலை மோசமாகிக் கொண்டே செல்கின்றது.
கடந்த வாரங்களிலும் ‘குற்றம்’ பகுதியின் ஊடாக த்தகைய சம்பவங்கள் தொடர்பாக நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.
அந்தவகையில் இவ்வாரம் ‘குற்றம்’ பகுதியில் இடம்பெறுவது தான் பெற்ற மகனை தாயொருவரே குடும்ப கஷ்டத்துக்காக ஓடும் ரயிலில் தள்ளிக் கொலை செய்ய முயற்சித்த சம்பவமாகும்.
இச்சம்பவத்தில் தெய்வாதீனமாக ஆறு வயது சிறுவன் உயிர் தப்பினான்.
இச்சம்பவம் தொடர்பாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விசேட பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நோக்குவோமானால்,
சுமித்ரா குமாரி வயது 40 என்ற தாய் மாத்தளை றத்தோட்டை கய்காவெலை என்ற கிராமத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவள். இவள் இளம் வயதினிலேயே அபேசேகர (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) என்பவரை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு தாயானாள்.
எனினும் அபேசேகரவுடன் வெகு நாட்கள் வாழும் சந்தர்ப்பம் சுமித்ரா குமாரிக்கு கிடைக்கவில்லை. சுமித்ரா குமாரிக்கும் அபேசேகரவுக்கும் இடையில் இருந்து வந்த கருத்து முரண்பாடுகள் காரணமாக சுமித்ரா குமாரி அவரை விட்டு பிரிந்து இரு பிள்ளைகளுடன் தனியாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டாள்.
அதன்பின்னர் எக்காரணம் கொண்டும் சுமித்ரா குமாரி தொடர்பாகவோ, பிள்ளைகள் இருவர் தொடர்பாகவோ அபேசேகர தேடிப்பார்க்கவில்லை.
இந்நிலையில் தான் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் சுமித்ரா குமாரி சமந்த (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) என்பவரை மறுவிவாகம் செய்துகொண்டாள்.
சமந்த ஏற்கனவே திருமணம் செய்திருக்கவில்லை. எனினும், பிள்ளைகளுடன் நிர்க்கதியாக நின்றவளை சமந்த பொறுப்பெடுத்துக்கொண்டான்.
அதன்பின்னர் சமந்தவுக்கும் சுமித்ரா குமாரிக்கும் இடையில் இருந்து வந்த உறவின் அடையாளமாய் சுமித்ரா குமாரி கருவுற்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
எனவே, சுமித்ரா குமாரியின் முதல் கணவரின் இரு பிள்ளைகள், இரண்டாவது கணவருக்கு பிறந்த மகன் தனுஷ்க என்று குடும்பத்தின் உறுப்பினர்கள் அதிகரிக்க, குடும்பத்தின் தேவைகளும் அதிகரித்தன.
இந்நிலையில், ஆரம்பத்தில் சுமித்ராவுடன் சுமுகமான குடும்ப வாழ்க்கையை நடாத்தி வந்த சமந்த, நாளடைவில் தனது சுயரூபத்தைக் காட்ட விழைந்தான். மனைவிக்காகவோ, பிள்ளைகளுக்கா கவோ தனது நேரத்தை செலவழிக்கத் தவறினான்.
அதுமட்டுமின்றி தனது குடும்பத்தின் பொறுப்புகளை தட்டிக்கழித்தான். இதனால் குடும்பத்தில் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் அதிகரிக்க வறுமை தலைவிரித்தாடியது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாத்தளை இறத்தோட்டை கய்காவெலை கிராமத்திலிருந்து கண்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள லமாகார மாவத்தையிலுள்ள வாடகை அறையில் தங்குவதற்கு அவர்கள் வந்தார்கள்.
அந்த அறைக்கு வாடகை பணமாக ரூபா இரண்டாயிரம் மாதா மாதம் செலுத்த வேண்டும். எனினும், அந்தப் பணத்தை செலுத்துவது என்பதே பெரும் போராட்டமாகவிருந்தது. சமந்த அறைக்கான வாடகை பணத்தை கொடுப்பது தாமதமாகியது.
இதனால் சுமித்ரா பெரும் போராட்டத்துக்கு மத்தியிலேயே அவனிடமிருந்து ஒவ்வொரு மாதமும் பணத்தை பெற்று உரிமையாளருக்கு கொடுப்பாள்.
அதுமட்டுமின்றி, வீட்டு செலவுகளுக்கு சமந்த சரியாக பணம் கொடுக்க தவறினான். இதனால் பல நாட்கள் பிள்ளைகள் பட்டினியுடனே இருந்தார்கள்.
எனவே, சுமித்திராவை பொறுத்தவரை அவளுக்கு பணம் ஒரு பெரும் பிரச்சினையாகவிருந்தது. தனது குடும்பத்தின் அன்றாட செலவுகளை சமாளிக்க பலரிடம் கையேந்தினாள்.
இதனால் பலரும் அவளை ஏளனமாக பார்த்தார்கள். மேலும் சுமித்ரா பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகினாள். தனது கணவரின் மேல் இருந்த ஆத்திரம், கோபம், ஏக்கம் அத்தனையும் ஒட்டுமொத்தமாக பிள்ளைகள் மீது காட்ட ஆரம்பித்தாள்.
பிள்ளைகளை அடி, உதை என்று சித்திரவதை செய்வதுடன் நின்றுவிடாது கெட்ட வார்த்தைகளால் அவர்கள் மனதை காயப்படுத்தினாள். அதுவும் சமந்தவுக்கும் தனக்கும் பிறந்த இளைய மகன் தனுஷ்க மீது சற்று அதிகமாகவே தனது கோபத்தை வெளிப்படுத்தினாள்.
இதனால் சிறுவன் தனுஷ்க உளரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டான். அவனுடைய பல இரவுகள் நிம்மதியற்ற இரவுகளாகவே தொடர்ந்தன.
இந்நிலையில் சமந்த திடீரென தலைமறைவாகினான். எங்கு தேடியும் அவன் பற்றிய எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை. சுமித்ராவின் கையிலும் செலவுக்கு பணம் இருக்கவில்லை.
இதனால் பெரும் குழப்பத்திலிருந்த சுமித்ரா கடந்த நான்காம் திகதி இளைய மகன் தனுஷ்க அதிகாலை பாடசாலைக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளை “நீ இன்று பாடசாலைக்கு செல்லத் தேவையில்லை.
வா! உன் அப்பாவை தேடி பார்த்து வருவோம்” என்று கூறி அழைத்தாள். எனினும் தனுஷ்க பாடசாலை செல்ல இருந்த ஆர்வத்தில் ” நான் வரவில்லை அம்மா” என்று பதிலளித்தான்.
எனினும், சுமித்ரா விடுவதாய் இல்லை. “வா, வா போவம்” என்று அவனுடைய கைகளை பிடித்து தரதரவென்று இழுத்தவாறே அழைத்துச்சென்றாள்.
இதனை அவதானித்த அக்கம் பக்கத்தில் வசித்தவர்களும் “இன்று அதிகாலையிலேயே போராட்டத்தை ஆரம்பித்து விட்டாள் போல” என்று தங்களுக்குள் அவளை ஏளனமாகப் பார்த்து முணுமுணுத்துக்கொண்டு சென்றார்கள்.
அதன்பின்னர் தனுஷ்கவின் கைகளை பலமாக பிடித்து இழுத்து சென்றவள் நேராக கண்டி மத்திய சந்தை பகுதிக்கு அருகிலுள்ள புகையிரத தண்டவாளத்துக்கு அருகில் சென்று நின்றாள். அந்த நேரம் கண்டியிலிருந்து மாத்தளை நோக்கிச் செல்லும் புகையிரதம் வரும் நேரம்.
எனவே, புகையிரதம் அவ்விடத்தை அண்மிக்கும் தருவாயில் “நீயும் வேண்டாம் உன் அப்பாவும் வேண்டாம் செத்து ஒழிந்துவிடுங்கள். உங்களை வைத்துக் கொண்டு எனக்கு பெரும் தொந்தரவாகவிருக்கின்றது”. என்று கூறி வரும் புகையிரதத்துக்கு முன்னால் தனுஷ்கவை தள்ள முயற்சித்தாள்.
தனுஷ்க செய்வதறியாமல் தவித்தான். “ஐயோ அம்மா, எனக்கு பயமாகவிருக்கின்றது. நான் பாடசாலைக்கு செல்ல வேண்டும். என்னை விடுங்கள்” என்று பலமாக கத்திக் கூச்சலிட்டான். எனினும், சுமித்ராவின் மனம் சிறிதும் இரங்கவில்லை.
இறுதியில் தனுஷ்க “ஐயோ என்னை காப்பாற்றுங்கள் . அம்மா என்னை ரயில் முன்னால் தள்ளிக் கொலை செய்ய பார்க்கின்றாள். என்று பலத்த குரலில் கத்தினான்.
இதனிடையே, அவ்வழியாக வந்த கர்ப்பவதியான கண்டி சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் பொலிஸ் அதிகாரி தூரத்திலிருந்தவாறு இச்சம்பவத்தை கண்ணுற்று சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.
வந்தவர் தனது பாதுகாப்பு அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ரயிலின் முன்னால் கையை உயர்த்தி ரயிலை நிறுத்தி சிறுவனை காப்பாற்றினார். இதன்போது அவர் தனது நிலையையும் மறந்து சிறுவனைக் காப்பாற்ற முயற்சித்தார்.
மேலும் இத்தருணத்தில் அவர் பொலிஸ் சீருடை அணிந்திருக்கவில்லை காரணம் பொலிஸ் சேவையிலுள்ள பெண் பொலிஸ் அதிகாரி கர்ப்பமுற்றிருக்கும் போது பொலிஸ் சீருடை அணியவேண்டிய கட்டா யம் இல்லை.
இது தொடர்பாக சுமித்திராவை பொலிஸார் கைதுசெய்து விசாரித்த போது
“நான் ரயில் வருவதை அவதானிக்கவில்லை. இந்த பிள்ளையின் அப்பா எனக்கு சாப்பிடுவதற்கு கூட எதுவும் கொண்டு வருவது இல்லை.
பல நாட்களாக நானும் எனது பிள்ளைகளும் பட்டினியில் கிடக்கின்றோம். ஒரு வாரமாய் அவர் எங்கு இருக்கின்றார். என்றே தெரியவில்லை. நான் எப்படி தனியாக குடும்பத்தை கொண்டு செல்வது” என்று அழுது புலம்பினாள்.
மேலும், சிறுவன் தனுஷ்கவிடம் பொலிஸார் இது தொடர்பாக கேட்ட போது
“நான் இனி மேல் அம்மாவுடன் போக மாட்டேன். என்ன காரணம் என்று தெரியவில்லை.அம்மா சதா என்னை திட்டிக்கொண்டே இருப்பார்.
அதுவும் தகாத வார்த்தைகளால் திட்டுவார். அன்று என் கைகளை பிடித்து இழுத்து வந்து ஒடும் ரயிலில் தள்ளப் பார்த்தார்.எனக்கு பயமாகவிருந்தது. எனது அப்பாவும் என்ன .செய்கின்றார் என்றே எனக்கு தெரியவில்லை.
நான் இனிமேல் வீட்டுக்கு செல்ல மாட்டேன். எனக்கு பாடசாலை செல்ல விருப்பமாகவிருக்கின்றது” என்றெல்லாம் கூறி அழுதான்.
இந்தநிலையில், இன்று தனுஷ்க டிக்கிரி சிறுவர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். மேலும் தாய் சுமித்திரா நீதிமன்ற உத்தரவின்பேரில் விசாரணைகளுக்காக தொடர்ந்து விளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளாள்.
‘பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு‘ என்று கூறுவார்கள். இன்று அந்த நிலை மாறிவிட்டதே என்று எண்ணத் தோன்றுகின்றது. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் வறுமையும், பெற்றோரின் தவறான செயற்பாடுகளுமேயாகும்.
வறுமையால் துவண்டு போகும் சந்தர்ப் பங்களில் மன அழுத்தம் காரணமாக எதைச் செய்யவும் துணிந்து விடுகின்றார்கள். அவ்வாறு தான் இந்த சம்பவத்தையும் நோக்க வேண்டியுள்ளது.
எவ்வாறு இருப்பினும், பெற்ற பிள்ளையை ரயில் முன்னால் தள்ளி கொலை செய்ய தாய் ஒருவர் முயற்சித்துள்ளதை அவ்வளவு இலேசாக எவராலும் மறந்து விடவோ மன்னிக்கவோ முடியாது.