‘தமிழ் மக்களுக்கான காத்திரமான நிலைப்பாட்டை முதலமைச்சர் எடுத்துள்ளார். ஆகவே இலங்கை அரசாங்கத்தின்பால் தான் கொண்டுள்ள பிரசாரத்துக்கு உதவியாக இருக்க வேண்டுமென்ற நோக்கம் கருதியே முதலமைச்சரை கட்சியிலிருந்து விலத்த வேண்டுமென்று சுமந்திரன் கோருகிறார்.
எனவே ராஜினாமா செய்ய வேண்டியவர் முதலமைச்சர் அல்லர். தமிழ் மக்களின் நலனுக்கு விரோதமாக பேசிவரும் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு மாறாக பேசிவரும் சுமந்திரனே ராஜினாமா செய்ய வேண்டுமென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
‘அண்மையில் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்ற வேளையில் சுமந்திரன் ஒரு விடயத்தை புட்டுக் காட்டினார். முதலமைச்சர் இரண்டரை வருடங்களின் பின் தனது பதவியை விட்டுக்கொடுப்பேன் எனக் கூறியிருந்தார். அதை இப்பொழுது அவருக்கு நினைவு படுத்துகின்றேன் என பூடகமாக சுட்டிக்காட்டினார்.
இதில் நாம் சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் என்னவெனில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த விக்னேஷ்வரன் அவர்களை ஏணியை வைத்து இறக்கி விட்டவர்கள் ஐயா சம்பந்தனும் சுமந்திரனுமாகும். ஆகவே முதலமைச்சருக்கும் உங்களுக்கும் இடையே தோன்றியுள்ள முரண்பாடு உங்களுடைய பிரச்சினையே தவிர எங்களுடைய பிரச்சினை இல்லையென நான் சுமந்திரனுக்கு தெரிவித்தேன். –தர்மலிங்கம் சித்தார்த்தன்
வடமாகாண முதலமைச்சரை கட்சியிலிருந்து விலக்குவதனாலோ அல்லது பதவி விலகும்படி கோருவதனாலோ எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக உடையும் நிலையே உருவாகும். இப்போதைக்கு அமைதி காப்பதே சிறந்தது. இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளிநாட்டு ஊடகம் ஒன்றில் தெரிவித்த கருத்துத் தொடர்பாகவும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் ஆராய்ந்த போதே மேற்படி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் வினவிய போது அவர் கூறியதாவது,
கடந்த பொதுத்தேர்தலின் போது வடமாகாண முதலமைச்சர் கூட்டடமைப்புக்கான பிரசார நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்ளாமை, அல்லது செயற்படாமை கவலை தரும் விடயமாகும். அது நிச்சயமான தவறு என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்காக முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பது என்ற விடயம் கட்சியை விட்டு நீக்கலாம் என்ற விடயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இன்று காணப்படும் சூழ்நிலையில் முதலமைச்சருக்கு இருக்கும் மக்கள் ஆதரவு அவரின் பேருக்கிருக்கின்ற கெளரவம், மதிப்பு என்பன அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போகும் பட்சத்தில் கட்சியைப் பாதிக்கும். அவரை கட்சியிலிருந்து நீக்கினால் அவர் என்ன செய்வார் என்பதும் எமக்குத் தெரியாது.
உதாரணமாக வைத்துக் கொள்வோம். அவர் தானொரு கட்சியை ஆரம்பித்தால் அதற்கு பிறகு என்ன நடக்குமென்று நாம் கணிப்பிட முடியாது. அவ்வாறு ஒரு கட்சி ஆரம்பிக்கப்படுமாக இருந்தால் அதுவும் ஒரு சிக்கலாக மாறக் கூடும். இவ்வகை சூழ்நிலையொன்று உருவாகுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இரண்டாக உடைக்கும் நிலையே தோன்றும்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலர் அவருடன் இணையலாம். சிலவேளைகளில் சில கட்சிகள் ஒன்று சேரலாம். குறிப்பாக சொல்லப்போனால் தமிழரசுக் கட்சியை சேர்ந்த இரண்டொருவர் போவதற்கு எத்தனிக்கலாம். சில உறுப்பினர்கள் பகிரங்கமாகவே கூறியும் உள்ளார்கள்.
இத்தகையதொரு நிலை உருவாகுமாக இருந்தால் பிரியும் சக்தி பலம் பொருந்திய சக்தியாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இது ஏற்படாமல் இருக்க வேண்டு மாயின் இப்போதைக்கு மெளனம் காப் பதே சிறந்தது.
(சுமந்திரன்) வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியானது தேவையற்ற விடயம் பிழையான நடவடிக்கையும் கூட, சுமந்திரனுக்கும் வடக்கு முதலமைச்சருக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் தனிப்பட்ட கோபங்களை இவ்வாறு வெளிக்காட்டியமை தவறான விடயமாகும்.
இதில் நாம் சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் என்னவெனில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த விக்னேஷ்வரனை ஏணியை வைத்து இறக்கி விட்டவர்கள் ஐயா சம்பந்தனும் சுமந்திரனுமாகும்.
ஆகவே முதலமைச்சருக்கும் உங்களுக் கும் இடையே தோன்றியுள்ள முரண்பாடு உங்களுடைய பிரச்சினையே தவிர எங்களுடைய பிரச்சினை இல்லையென நான் சுமந்திரனுக்கு தெரிவித்தேன். நீங்கள் இருவரும் இல்லையாயின் அந்த தேவதை ஆகாயத்தில் பறந்து கொண்டே இருந்திருக்குமென நகைச்சுவையாக கூறியிருந்தேன். இதில் உண்மையுமுண்டு. தற்பொழுது எழுந்துள்ள பிரச்சினையில் நான் எப்பொழுதும் நடுநிலையே வகிப் பேன்.
முதமைச்சர் விக்னேஸ்வரனை விலக்குவதாக இருந்தாலும் சேர்த்து செல்வதாக இருந்தாலும் இவ்விடயத்தில் நாம் நடுநிலைமை வகிப்போமே தவிர உடன்பட்டு சாயமாட்டோம் என்ற கருத்தை சித்தார்த்தன் தெரிவித்ததுடன் சிறைக் கைதிகள் விவகாரத்தில் தலைவர் சம்பந்தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளிக்கையில்,
சம்பந்தன் ஐயாவைப் பொறுத்தவரை கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடு க்க முடியுமே தவிர அவர் முடிவு எடுக்க முடியாது. முடிவை எடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திடமேயுண்டு. உண்மையைக் கூறப் போனால் சம்பந்தன் அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்காகவே அவசரமாக செல்ல வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இது தவிர்க்க முடியாதவொன்றே. ஆனால் அவர் ஒரு விடயத்தை முன் நடவடிக்கையாக செய்திருக்கலாம். தனது அவசர பயணத்தை கைதிகளுக்கோ அல்லது ஊடக வாயிலா கவோ கூறிவிட்டுச் சென்றிருக்கலாம். அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயமாகும். சொல்லிச் செல்வதற்குரிய அவகாசமென்பது அவருக்கு இல்லாத காரணத்தினால்தான் அவரின் பய ணம் அவசர பயணமாக அமைந்திருக்கும்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்தில் ஏமாற்றி விட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. முற்று முழுதாக அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்பியிருந்தவருக்கு இது பலத்த ஏமாற்றத்தை தந்திருக்கலாம். இது யாதார்த்தமும் கூட.
ஐயாவுக்கு ஏற்பட்டிருக்கும் அவசர சூழ்நிலை அவரை விமர்சிப்பவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டதே தவிர உண்மை அதுவல்ல. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்தில் அவர் எவ்வளவு பிரயத்தனங்களை எடுத்தார்? கடும் முயற்சிகளில் ஈடுபட்டார் என்பது தமிழ் மக்கள் அனைவரும் அறிந்த விடயமாகும். அவருக்கு உருவாகியிருக்கும் நெருக்கடி நிலையை வைத்துக்கொண்டு அவரை விமர்சிப்பது என்பது அரசியல் நாகரீகமற்ற செயலாகும் என்றார்.
முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்,
வடமாகாண முதலமைச்சர் மீது சுமந்திரன் சுமத்திய குற்றச்சாட்டு யாதெனில் கனடாவுக்கு சென்று நிதி திரட்டி வரும்படி கூறினோம். அவர் சுகயீனத்தை காரணம் காட்டி மறுத்தார். ஆனால் அமெரிக்காவுக்கு போய் வந்தார். கூட்டமைப்புக்கு எதிராக முதலமைச்சர் அறிக்கை விட்டிருந்தார். கடந்த பாராளுமன்ற தேர் தலில் வேறு ஒருவருக்கு வாக்களிக்கும்படி கூறியிருக்கிறார் என்ற அற்பத்தனமான குற்றச்சாட்டுக்களை சுமந்திரன் கூறி யுள்ளார்.
வடக்கு முதலமைச்சரைப் பொறுத்த வரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவருக்கும் வாக்களிக்கும்படி அவர் கோரவில்லை. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு யார் அதற்காக உழைக்கத் தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்கும்படியே கூறியிருந்தார். எனவே அவரின் கருத்துப்படி த.தே.கூ. அமைப்பு ஏற்றுக்கொண்டால் அதற்கு வாக்களிக்க முடியுமெனவும் பொருள் கொள்ளலாம்.
சுமந்திரனால் சுமத்தப்படுகிற உண்மை யான குற்றச்சாட்டு இவையல்ல. விக்னேஸ்வரன் அவர்களை கட்சியை விட்டு விலத்த வேண்டும். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என சுமந்திரன் கோருவது முதலமைச்சர் கனடாவுக்குச் சென்று நிதி திரட்டவில்லையென்பதற்காகவல்ல. மாறாக தமிழ் மக்களுக்காக முதலமைச்சர் காத்திரமான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார் என்பதற்காகவாகும்.
விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றிருக்கிறது என்பதை 9 பக்க அறிக்கையாக தயாரித்து என்ன என்ன வகையில் அது நடைபெற்றுள்ளது என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்.
அது மட்டுமன்றி இலங்கையில் இனப்படு கொலை சம்பந்தமான விசாரணையொன்று நடைபெற வேண்டுமானால் அது சர்வதேச தரத்திலான விசாரணையாக இருக்க வேண்டுமென இன்னுமொரு தீர்மானத்தையும் அவர் நிறைவேற்றியிருந்தார்.
எனவே தமிழ் மக்களுக்கான முழுமையான தீர்வை நோக்கி நகர்த்துவதற்கு இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையெனக் கூறி விசாரணை வேண்டுமென்று உறுதியாக நிற்கும் போது தமிழ் மக்களின் பிரதி நிதியாக சர்வதேச சமூகத்துடன் பேசுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் சுமந்திரன் இனப்படுகொலையென நாங்கள் நிரூபிக்க முடியாது. உள்ளக விசாரணையென்பது சர்வதேச விசாரணைதான் என அடித்துக் கூறுவது வெவ்வேறுபட்ட முரண்பாடுகளைக் காட்டுகிறது.
எனவே, தமிழ் மக்களுக்கான காத்திரமான நிலைப்பாட்டை முதலமைச்சர் எடுத்துள்ளார். ஆகவே இலங்கை அரசாங்கத்தின்பால் தான் கொண்டுள்ள பிரசாரத்துக்கு உதவியாக இருக்க வேண்டுமென்ற நோக்கம் கருதியே முதலமைச்சரை கட்சியிலிருந்து விலத்த வேண்டுமென்று சுமந்திரன் கோருகிறார்.
எனவே ராஜினாமா செய்ய வேண்டியவர் முதலமைச்சர் அல் லர். தமிழ் மக்களின் நலனுக்கு விரோதமாக பேசிவரும் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு மாறாக பேசிவரும் சுமந்திரனே ராஜினாமா செய்ய வேண்டுமென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சுமந்திரன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார் இனப்படுகொலை சம்பந்தமாக தானே முதல் முதல் பாராளுமன்றில் பேசியுள்ளதாகக் கூறுகிறார். சுமந்திரன் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு முன்னமே பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் பேசியுள்ளோம். காரண காரியங்களுடன் விளக்கியுமுள்ளோம். அமிர்தலிங்கத்தின் காலத்திலிருந்து இன்னும் பலர் பேசியுள்ளனர். கன்சாட்டில் அவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
தான் தான் முதல் முதல் பேசினேன் என்று கூறிக் கொண்டிருக்கும் அதே சுமந்திரன் ஜெனிவாவுக்கு சென்று இலங்கை யில் நடந்தது இனப்படு கொலையென்று கூற முடியாது. இனப்படுகொலையென்பதை நீதிமன்றில் நிரூபிக்க முடியாது என்று கூறியுள்ளார். நீதிமன்றில் நிரூபிப்பதும் விடுவதும் வேறு விடயம்.
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதை சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறினால்தான் அது நீதிமன்றுக்கு செல்லுமா செல்லாதா என்பதை முடிவு கட்ட முடியும். தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு எம்மால் இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியாது என ஜெனிவாவில் பிரசாரம் செய்வது அரசாங்கம் செய்யும் பிரசாரத்தை நிரூபிப்பது போன்றது. எனவே பாராளுமன்றில் இனப்படுகொலையெனப் பேசி கன்சாட்டில் பதிவு செய்யும் சுமந்திரன் வெளிநாடுகளில் சென்று இனப்படுகொலை நடைபெறவில்லையென அரசாங்கத்துக்காக பிரச்சாரம் செய்கிறார்.
ஆரம்ப காலத்திலிருந்தே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சர்வதேச விசாரணையே வேண்டுமென மிக ஆணித்தரமாகப் பேசி வந்திருக்கி றார். இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டால்தான் தமிழ் மக்களுக்கான நீதி நியாயம் கிடைக்கும் என பேசி வந்துள் ளார். நீதி நியாயமென்பது பலமுகங் கொண்டது.
பாதிக்கப்பட்ட மக்கள் காணாமல் போனோர் தொடர்பான விடயமாகும். இவர்களுக்குரிய வாழ்வாதாரம், நஷ்ட ஈடு, புனர்வாழ்வு என்பவை சார்ந்தவையாகும். இரண்டாவது விடயமென்னவென்றால் தமிழ் மக்களுக்கு முழுமையான அரசியல் தீர்வை தேடித் தருவது என்பதாகும். இவையெல்லாம் எப்பொழுது வருமென்றால் சர்வதேச விசாரணையொன்று நடைபெற்று யுத்தத்திற்கான காரணங்களை கண்டறிந்து இதை சர்வதேசம் புரிந்து கொண்டு மீண்டும் இந்நிலைமை ஏற்படாத ஒரு தீர்வை ஏற்படுத்துவதே சர்வதேச விசாரணையின் நோக்கமாக இருக்கும்.
ஆனால் இன்று சர்வதேச விசாரணையுமில்லை. கலப்பு நீதிமன்ற முறையும் வரப்போவதில்லை. முடிவாக என்ன வந்திருக்கிறதென்றால் உள்ளக விசாரணை. இந்த உள்ளக விசாரணைக்கு சர்வதேச ஒத்துழைப்பு அல்லது அனுசரணையை பெற்றுக்கொள்வது என்ற முடிவுக்கே வந்துள்ளனர். உள்நாட்டு நீதித்துறைக்கு உட்பட்ட ஒரு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணைகளை மேற்கொள்ளும் படியே முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் கோரியது வேறு தற்பொழுது நடப்பது இன்னொன்று.
இப்பொழுது சுமந்திரன் போன்றோர் என்ன கூறுகிறார்கள் இதைத்தான் நாம் எதிர்பார்த்தோம். இவ்வாறானதொரு பொறிமுறையையே நாங்கள் விரும்புகிறோம். எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானம் மிக மிகச் சிறந்த தீர்மானம். இத்தீர்மானம் சர்வதேச விசாரணைக்கு நிகரானது என்று கூறுவதெல்லாம் மக்கள் எல்லோருமே முட்டாள்கள் என்ற அர்த்தத்திலாகும்.
அண்மையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற கூட்டமொன்றில் (06.11.2015) முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் தீர்மானம் பற்றி தனது கருத்தைக் கூறுகின்ற போது இலங்கையால் எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானமானது மிகவும் பலவீனப்பட்ட தீர்மானமென சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் சுமந்திரன் போன்றவர்கள் கூறுகிறார்கள் இது சர்வதேச விசாரணைக்கு நிகரான தீர்மானமென்று. இலங்கை அரசாங்கத்துக்காக பிரசாரம் செய்கின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் நன்மைக்காக பேசுகிறாரா என்பது தெரியவில்லை.
கேள்வி – தாங்கள் இரா. சம்பந்தன் ஐயா மீது கடுமையான விமர்சனங்களை முன் வைப்பதாக தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனரே ?
பதில் – மிக விரைவாக நாடு திரும்பி சம்பந்தன் கைதிகள் விவகாரத்துக்கு உடனடித் தீர்வொன்று காண வேண்டுமென்று கூறினேனே தவிர அவர் சிகிச்சைக்காக இந்தியா சென்றது பற்றி மனிதாபிமானமற்ற முறையில் கூறவுமில்லை.
சிறையில் உள்ள கைதிகளின் உறவினர்களும் பெற்றோர்களும் த.தே. கூட்டமைப்பை குறிப்பாக சம்பந்தன் அவர்களையே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய அவசரம் இருக்கிறது என்பதையே எடுத்துக் கூறியிருந்தேன். தலைமைப் பீடத்தை பொறுத்தவரை சில விடயங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு உண்டு என்பதை மறுக்க முடியாது.
ஜனாதிபதித் தேர்தலின் போது அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? இப்பொழுது எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள்? என்பது யாவரும் அறிந்த விடயம். ஆட்சி மாறியிருக்கிறதே தவிர எம்மால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்றார்.
இவ்விவகாரங்கள் குறித்து மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் கருத்து தெரிவிக்கையில்…த.தே.கூ. அமைப்பின் தலைவர் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அவர் எடுத்த முயற்சிகள் அதிகம். ஏலவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் நேரடியாகவே பலமுறை உரையாற்றியுள்ளார்.
உண்மையைச் சொல்லப் போனால் ஜனாதிபதியாலும் பிரதமராலும் சம்பந்தன் ஐயாவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டிருக்கிறதே தவிர இவ்விடயத்தில் ஐயாவை குற்றம் கூறுவதில் உண்மையில்லை. கைதிகள் விடுதலை சம்பந்தமாக அக்கறை செலுத்தாமல் சம்பந்தன் ஐயா டெல்கிக்கு சென்று விட்டார் என்று கூறுவது பொறாமையின் வெளிப்பாடாகும். தனது மருத்துவ பரிசோதனைக்காக சென்ற ஒருவரை இவ்வாறு கொச்சைப்படுத்துவது பண்பற்ற செயலாகும்.
அரசியல் கைதி ஒருவர் இதே போன்றுதான் குற்றம் சுமத்தியுள்ளார். அவரின் கருத்துப்படி தங்கள் விடுதலை தொடர்பில் த.தே.கூ. அமைப்பு ஒன்றுமே செய்யவில்லையென்றும் ஐ.தே.கட்சி அரசாங்கமே நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். இது மிகத் தவறான கூற்றாகும். 2004 ஆம் ஆண்டு காலத்திலிருந்து த.தே. கூட்டமைப்பினராகிய நாம் சிறைக்கைதிகளை சிறை சென்று பார்த்து வந்திருக்கிறோம். அவர்களின் விடுதலைக்காக போராடி வந்திருக்கிறோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் கைதிகளின் விடுதலை தொடர்பில் தீவிரமாக செயற்பட்டிருக்கிறோம். அவரும் நம்ப வைத்து ஏமாற்றினார். இன்றைய ஜனாதிபதியும் எமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென்பதே உண்மை. அதை விட்டு சம்பந்தன் பாராமுகமாக இருக்கிறார். அக்கறை எடுக்காமல் சென்று விட்டார் என்ற குற்றச்சாட்டுக்களெல்லாம் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களாகும்.
வடக்கு முதலமைச்சர் கடந்த பொதுத் தேர்தலின் போது கட்சியின் பிரச்சார பணிகளில் பங்கெடுக்கவில்லை. த.தே.கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு முதல் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டவர் முதலமைச்சரின் வெற்றிக்காக கூட்டமைப்பை சேர்ந்த பலர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது பாராளுமன்றத் தேர்தலில் அவர் ஒத்துழைக்கவில்லையென்பது அவர் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டாகும்.
ஆனால் அந்தக் கூட்டத்தில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. ஒரேயொரு விடயம் வலியுறுத்தப்பட்டது. தலைவர் சம்பந்தன் முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு முடிவு காணப்பட்டதே தவிர முதலமைச்சரை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்று எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் தீர்மானம் எடுக்கப்பட்டது போல் சுமந்திரன் அவுஸ்திரேலியா வானொலிக்கு கொடுத்த பேட்டிதான் இவ் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
சுமந்திரனின் இக்கருத்தை வைத்துக் கொண்டு பலர் பல விதமாக வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை அவரை பதவி விலக்க வேண்டும் இவரை பதவி விலக்க வேண்டுமென்பது எமது நோக்கமல்லை. அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. ஒவ்வொருவரையும் விமர்சித்துக் கொண்டிருந்தால் கட்சியில் விரிசல் ஏற்படுமே தவிர ஒற்றுமையாக செயற்பட முடியாது என்பதே எமது கருத்தாகும்.
-திருமலை நவம்-