மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய் யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் ஏனையோரை பிணையில் விடுதலை செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்றிலிருந்து எதிர்வரும் பத்து தினங்களுக்குள் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக பிரதமரின் செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சட்டம் ஒழுங்கு அமைச் சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் நேற்று பிற்பகல் விசேட கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத், சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ் பகுமார உட்பட பல்வேறு முக்கிய அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தில் தமிழ் அரசியல் கைதிக ளின் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தற்போது அவர்கள் மேற்கொண்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான விபரங்கள், கோப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அதனையடுத்தே மேற்கண்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று மாலையில் அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், சாகல ரத்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் மகசின் சிறைச்சாலைக்கு நேரடியாக விஜயம் செய்து குறித்த தீர்மானம் தொடர்பாக உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள கைதிகளிடத்தில் தெளிவாக எடுத்துரைத்தனர்.
எனினும் கைதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடுவது குறித்து எவ்விதமான கருத்துக்களை வெளியிட்டிருக்காததோடு இத் தீர்மானம் குறித்து உரிய பதிலை சிறைச்சாலை ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார ஊடாக விரைவில் அறிவிப்பதாக குறிப்பிட்டனர்.
இதனையடுத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
அதன் பின்னர் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
என்னிடம் சிறைச்சாலை அமைச்சு ஒப்படைக்கப்பட்ட காலத்திலிருந்து தமது விடுதலை குறித்து போராட்டத்தை ஆரம்பித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக முனைப்புடன் செயற்பட்டேன்.
அதன் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைவாக முதற்கட்டமாக 32பேருக்கும் அதனை தொடர்ந்து 30பேருக்குமாக 62பேருக்கு பிணையளிப்பதாக உறுதிவழங்கப்பட்டது.
அதனடிப்படையில் சில காலதாமங்கள் காணப்பட்டிருக்கின்றபோதும் தற்போதுவரையில் 39பேருக்கு பிணையில் செல்வதற்கான அனுமதியை புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது. பிணை வழங்கவேண்டிய நிலையில் 23பேர் உள்ளார்கள்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 124பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரையில் 99 அரசில் கைதிகள் தமக்கு புனர்வாழ்வளிக்குமாறு விருப்பம் தெரிவித்து கடிதங்களை கையளித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் ஏனையோரை பிணையில் விடுதலை செய்வதற்குமுரிய நடவடிக்கையை எதிர்வரும் 10நாட்களுக்குள் முன்னெடுக்கவுள்ளோம். இவ்விடயம் குறித்து அரசியல் கைதிகளிடத்தில் தெரிவித்துள்ளோம் என்றார்.
சுமந்திரன் கருத்து
அதேநேரம் இவ்விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,
99பேர் தமக்கு புனர்வாழ்வளிப்பற்கான விருப்புக்களைத் தெரிவித்து கடிதங்களை கையளித்துள்ளனர். இவர்களில் 14பேர் தண்டனை வழங்கப்பட்டவர்களாகவுள்ளார்கள்.
அவர்கர்களை தவிர்த்துப்பார்க்கையில் மேல் நீதிமன்றில் வழக்குள்ள 85பேர் புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்துமாறு கோரியுள்ளனர். அக்கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்போமென அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது.
அதுமட்டுமன்றி அவ்வாறு சாதகமாக பரிசிப்பதோடு அவ்வாறு புனர்வாழ்வளிக்கும் குழுவை இன்றிலிருந்து (நேற்றுமுதல்) பத்து நாட்களுக்குள் முதற்கட்டமாக அனுப்பிவைப்பதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்கள். இவ்விரண்டு வாக்குறுதிகளையும் நாம் அரசியல் கைதிகளிடத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
இதேவேளை அரசாங்கம் குறிப்பிட்ட 62பேரில் 39பேருக்கு தற்போது வரையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 23பேரில் உயர் நீதிமன்றில் வழக்குள்ளவர்களுக்கே பிணை வழங்கப்படவுள்ளது. அந்த நடவடிக்கைகளையும் விரைவாக முன்னெடுக்கப்படவுள்ளது.
நாம் பொதுமன்னிப்பை கோரிய போதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது நாமாவே புனர்வாழ்வுக்கு விருப்பைத் தெரிவித்துள்ள போதும் அதற்கும் அரசாங்கம் எந்தவிதமான பதிலையும் வழங்காதுள்ளதென்றே கைதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இவ்வாறான நிலையில் தற்போது அவர்களின் கோரிக்கைக்கு சாதகமானதொரு பதில் வழங்கப்பட்டுள்ளது என்றார்
நாங்கள் உங்களுடன்தான் உள்ளோம்! உங்களுக்காகப் போராடுவோம்: மகஸின் சிறையில் வடக்கு முதல்வர் உணர்வுபூர்வ உரை
16-11-2015
“நாங்கள் உங்களுடன்தான் உள்ளோம். உங்களுக்காகப் போராடுவோம்” என கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உணர்வுபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மோசமடைந்துவருவதையறிந்து அவர்களை நேரில் பார்வையிடுவதற்காக இன்று காலை அவசரமாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்து நண்பகலளவில் மகஸின் சிறைச்சாலைக்குச் சென்ற முதலமைச்சர் உண்ணாவிரதிகளைச் சந்தித்து உரையாடினார்.
“உங்களுடைய விடுதலைக்காக வடக்கு கிழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை முழு அளவிலான ஹர்த்தால் போராட்டம் ஒன்றை நாம் நடத்தினோம். உங்களுடைய விடுதலைக்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம் என்பதை இதன் மூலமாக வெளிப்படுத்தியிருக்கின்றோம். இது ஆரம்பம். எமது இந்தப் போராட்டம் தொடரும்.
உங்களுடைய போராட்டம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் நான் கடிதம் மூலமாகத் தெரியப்படுத்தியிருக்கின்றேன். தொடர்ந்தும் அதனைத் தெரியப்படுத்துவேன். இதன் மூலமாக உங்களுடைய பிரச்சினை தொடர்பில் அவர்களும் அக்கறை கொண்டுள்ளார்கள்.
உங்களுடைய நிலை மிகவும் மோசமடைந்துவருவதை அறிந்துதான் நான் இன்று இங்கு வந்தேன். உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று நான் உங்களைக் கோரவில்லை. ஆனால், உங்களுடைய உடல்நிலை மோசமடைந்துவருவதால், உங்களுக்காக நாம் சிறைக்கு வெளியே போராடுவோம் என்ற உறுதியை நான் வழங்குகின்றேன். அதற்கு ஒரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள் என்றுதான் நான் கேட்கின்றேன்.
ஜனாதிபதியுடன் உங்களுடைய பிரச்சினை குறித்து நான் பேசியுள்ளேன். இன்று அவர் பதிலளிப்பதாக உறுதியளித்துள்ளார். இன்று மாலை அது குறித்து தெரியவரும். எப்படியிருந்தாலும், உங்களுடைய விடுதலைக்காக உங்களுக்காக சிறைக்கு வெளியே நாம் போராடுவோம்” என முதலமைச்சர் உணர்வுபூர்வமாக இங்கு உரையாற்றினார்.
முதலமைச்சருடன் சட்டத்தரணி இரத்தினவேல் உட்பட மற்றும் சிலரும் சென்றிருந்தார்கள். உண்ணாவிரதக் கைதிகளின் நிலையையும் பார்வையிட்ட முதலமைச்சர், கைதிகளின் விவகாரம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுடனும் உரையாடினார்.