wமுருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 12ம் திகதி ஆரம்பமாகியது.
சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.
இந்த கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று செவ்வாய்க்கிழமை(17) முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் ‘சூரன் போர்’ இடம் பெற்றது.
அந்த வகையில் மன்னார் பெரியகடையில் அமைந்துள்ள அருள் மிகு ஞான வைரவர் தேவஸ்தானத்தில் கந்த சஷ்டி விரதத்தின் சூரசம் ஹாரம் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று முருகப் பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் சூரபத்மனுடன் போர் செய்வதற்கு வெளிவீதி சென்று சூரசம்ஹாரம் இடம் பெற்றது.
மன்னார் பெரியகடையில் அமைந்துள்ள அருள் மிகு ஞான வைரவர் தேவஸ்தானத்தில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய விரதத்தினை நிறைவேற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.