சென்னையில் புலிகள் அமைப்பின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டுக்கு குண்டு வைத்தது இலங்கை அரசின் உளவாளிகளும் மொசாட்டும் இணைந்து செய்த சதி என்றே புலிகள் உடனடியாக குற்றம் சாட்டியிருந்தார்கள்.

அதன் பின்னர்தான் கந்தசாமி நாயுடு மீத சந்தேகம் ஏற்பட்டது. கந்தசாமி நாயுடு பற்றிச் சில பின்னணி விபரங்கள் கூறவேண்டும.

சிறுபான்மைத் தமிழர்

கந்தசாமி நாயுடு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். யாழ்பாணத்தில் வசித்தவர். யாழ்பாணத்தில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்னும் அமைப்புக்கு தலைவராக இருந்தவர் சி.சுப்பிரமணியம்.

” ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை??” என்று காசி ஆனந்தன் கவிதை எழுதியிருந்தார். அதனை கூட்டணி மேடைகளில் பேச்சாளர்கள் மறந்துவிடாமல் பயன்படுத்துவார்கள்.

ஆண்ட பரம்பரை என்பது உயர்சாதி. அந்தப்  பரம்பரை மீண்டும் ஆள வந்தால் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் உதைக்கப்படுவார்கள் என்று சிறுபான்மை தமிழர் மகாசபை பீதியூட்டிக்கொண்டிருந்தது.

சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களையே சிறுபான்மை தமிழர் என்ற பதத்தால் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை அழைத்து வந்தன.

சிறுபான்மைத் தமிழர்கள் மாகாணசபை என்பதும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவுதான்.

அப்போது சிறிலங்கா சுதந்திரக் கடசியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவியில் இருந்தது.

தமிழர்கள் மத்தியில் சிறுபான்மைத் தமிழர், பெரும்பான்மைத் தமிழர் என்ற பிரிவினை நிலவுவதை ஐக்கிய முன்னணி அரசாங்கம் விரும்பியிருந்தது.

அதனால் சிறுபான்மைத் தமிழர் மகாசபைத் தலைவரான சி.சுப்பிரமணியத்திற்கு நியமன எம்.பி பதவி கொடுக்கப்பட்டது.

சி.சுப்பிரமணியத்தோடு நெருக்கமாக இருந்த திரு.கந்தசாமி நாயுடுவுக்கு சுப்பிரமணியம் பொலிஸ் சேவையில் வேலை பெற்றுக்கொடுத்தார்.

indexஅனுதாபியா??

கூட்டணியின் செயலாளர் நாயகம் அமரர் அமிர்தலிங்கத்தின் பாதுகாப்பு அதிகாரியாகவும் திரு.கந்தசாமி கடமையாற்றினார். அதன் பின்னர் இலங்கையின் தேசிய உளவுப் பிரிவான NIB க்கு மாற்றப்பட்டார்.

பின்னர் இலங்கைத் தொழிளாளர் காங்கிரஸ் தலைவர் திரு.தொண்டமான் தனது பாதுகாப்பு அதிகாரியாக கந்தசாமி நாயுடுவை நியமிக்குமாறு ஜே.ஆரிடம் கேட்டுக்கொண்டார்.

அதனால் NIB யிலிருந்து விடுவித்து, அமைச்சர் தொண்டமானின் பாதுகாப்பு அதிகாரியாக திரு.கந்தசாமி நாயுடு நியமிக்கப்பட்டார்.

1984ம் ஆண்டளவில் கந்தசாமி நாயுடு தமிழ் நாட்டுக்குச் சென்றார்.

சென்னையிலிருந்த ஈழப் போராளி அமைப்புகள் பலவற்றோடு திரு.கந்தசாமி நாயுடு தொடர்புகளை வைத்திருந்தார். இயக்கங்களின் அனுதாபி என்று கருதப்பட்டவர்.


சென்னையில் அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைக்கபட்டதையடுத்தே கந்தசாமி நாயுடு மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்தியாவின் ‘றோ’ உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கந்தசாமி நாயுடு மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

சென்னையில் மதீனா கடற்கரையில் தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டு வைத்து மேடையைத் தகர்க்க முனைந்தமை.

அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டில் குண்டுவைத்தமை என்பவைதான் கந்தசாமி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளாகும்.

திரு.கந்தசாமியின் டயறியை உளவுப்பிரிவினர் பார்வையிட்டபோது அவர் அடிக்கடி இரண்டு பேரை சந்தித்த விடயம் தெரியவந்தது.

ஒருவர் மணவைத் தம்பி, மற்றவர் தற்போது சென்னையில் மதுரா ட்ராவல்ஸ் உரிமையாளராக உள்ள வி,கே.ரி.பாலன். இருவரும் இலங்கையிலிருந்து சென்று சென்னையில் குடியேறியவாகள்.

கந்தசாமியுடன் சேர்ந்து அந்த இருவரும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் கந்தசாமி நாயுடு செய்யப்பட்டார்.

மர்மம்

கந்தசாமி நாயுடுவின் இந்திய விஜயமும், இயக்கங்களின் உறவைத் தேடுவதில் ஆர்வம் காட்டியதும் சந்தேகத்திற்குரியதாகவே கருதப்பட்டது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மகன் ரவி ஜெயவர்த்தனாதான் சில காலம் ஜே. ஆரின் பாதுகாப்பு ஆலேசகராக இருந்தவர்.

இந்தியவிலுள்ள போராளி அமைப்புக்களைக் கண்காணிக்க கந்தசாமி நாயுடுவையும் அவரே அனுப்பி வைத்ததாக கூறப்பட்டது.

ஆனால் கந்தசாமி நாயுடு இலங்கை திரும்பியபோது கட்டநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு இரண்டு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கந்தசாமியின் நாயுடு தற்போது இலங்கைத் தொழிளாளார் காங்கிரசின் உபதலைவராக இருந்து வருகிறார்.

காலித்துறைமுக அபிவிருத்தி திட்டக் குத்தகை கந்தசாமி நாயுடு பிரதிநித்துவம் செய்யும் ‘பிரிட்டிஷ்-சைனீஸ் கொன்கோட்டியல்’ என்னும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

சென்னையில் உளவு

சென்னையில் இருந்தே ஈழப் போராளி அமைப்புகளின் தலைவர்கள் இயங்கியதால் இயங்கியதால் இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவான NIBயும் அங்கு கவனம் செலுத்தி வந்தது. சென்னையில்லுள்ள இலங்கையின் உதவித்தூதரகத்தில் NIB தனது அதிகாரி ஒருவரை வைத்திருந்தது.

1972ம் ஆண்டு முதல் அவ்வாறு ஒரு உளவுத்துறை அதிகாரி நியமிக்கப்படுவது தொடர்ந்தது.

1985ம், 86 ஆண்டுகளில் அப்துல் மஜீத் NIB அதிகாரியாக கடமையாற்றி வந்தார். (அப்துல் மஜீத்தான் கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே. கட்சியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டவர். பொலிஸ் சேவையில் இருந்து விலகியே போட்டியிட்டார்)

சென்னையில் போராளி அமைப்புகளது நடமாட்டங்களை கவனிக்க இலங்கை உளவுத்துறையினர்  செய்த முயற்சிகளில் சுவாரசியமான சம்பவங்களும் இருக்கின்றன.

போராளி அமைப்புகளது உளவுப்பிரிவுகளும், அரசின் உளவுப்பிரிவினரை மோப்பம் பிடித்துத் திரிந்தன.

ஈ.பி.ஆர்.எல.எஃப் இயக்கத்தின் மக்கள் ஆய்வுப் பிரிவு (உளவுப் பிரிவு) சென்னை விமான நிலையத்தில் தனது உறுப்பினர்களைப் போட்டு, கொழும்பில் இருந்து வருபவர்களை கவனித்து வந்தது.

சென்னையில் சன நெருக்கம் மிகுந்த பகுதிகளில் உள்ள தங்குவிடுதிகளில்தான் உளவுத்துறையினர் தங்குவார்கள். அப்பகுதிகளிலுள்ள ரவுடிகளையும் பணம் கொடுத்து கைக்ககுள் போட்டு வைத்துக்கொள்வார்கள். தங்களை வியாபாரிகள் என்றுதான் அவர்களுக்கு சொல்லி வைத்திருப்பார்கள்.

இயக்க உறுப்பினர்கள் தம்மை பின்தொடர்வதாக தெரிந்தால் உடனே ரவுடிகளிடம் காட்டிவிடுவார்கள். இயக்க உறுப்பினர்களை சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தம்மை தாக்க வருவதாகவும் ரவுடிகளிடம் சொல்லிவிட்டு  உளவுத்துறையினர் நழுவிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

ரவுடிகளிடம் மாட்டிக்கொண்டு தம்மை விடுவித்துக்கொள்ள  இயக்க உறுப்பினர்கள் தடுமாறிய சந்தர்ப்பங்களும் இருந்தன.

டபுள் ஏஜன்ட்

இதற்கிடையே ஈ.பி.ஆா.எல்.எஃப் இயக்கத்தில் இருந்த உறுப்பினர் ஒருவரை  தேசிய புலனாய்வு பிரிவு தமது ஆளாக மாற்றிக்கொண்டது.

அவ்வாறு மாற்றப்பட்டவரின் பெயர் மவூசூக். சென்னையில்  இருந்து கொழும்பு வந்தபோது மவூசூக் கைது செய்யப்பட்டார்.

அவரை விடுதலை செய்யவேண்டுமானால்  தமக்கு தகவல் தருபவராக  மாறவேண்டும் என்று புலனாய்வு பிரிவினர்     நிபந்தனை போட்டார்கள்.

மவூசூக்  உடன்பட்டார். விடுதலை செய்யப்பட்டு மீண்டும் சென்னைக்குத் திரும்பினார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தனது புதிய பாத்திரம் குறித்து   ஈ.பி.ஆா.எல்.எஃப்  தலைவர் பத்பநாபாவிடம் கூறிவிட்டார்.

இலங்கை உளவுப்பிரிவுக்கு தகவல் கொடுப்பதுபோல் நடித்துக்கொண்டு, உளவுப்பரிவுத் தகவல்களை தமக்கு தருமாறு பத்மநாபா யோசனை கூறினார்.

டபுள்  ஏஜன்ட்  மாதிரி மவுசூக் செயல்பட வேண்டும். தேசிய புலனாய்வுத் துறையின் ஆளாக இருந்துகொண்டு , ஈ.பி.ஆா.எல்.எஃப்  இயக்க ஆளாகவும் நடந்துகொள்ளவேண்டும.

பின்னதற்கே விசுவாசமாக இருக்கவேண்டும். என்று பத்மநாபா கூறியிருந்தார். எனினும்  மவுசூப் பின்னர் நடந்துகொண்ட முறைகள் சந்தேகமாக இருந்தன.

இறுதியில்  அவர்  தமிழ்நாட்டிலிருந்து  தப்பி கொழும்புக்கு ஓடிவிட்டார்.

மவுசூக் கிழக்கு மாகானத்தை சேர்ந்தவுர்.  அவரை அப்துல் மஜீத்தான் பயன்படுத்தினார் என்று நம்பப்பட்டது.

ராஜீவ் சந்திப்பு

இப்போது பேச்சுவார்த்தைகளின் முயற்சிகளின் தொடர்ச்சியை கவனிக்கலாம்.

திம்புப் பேச்சுவார்த்தை முடிவடைந்த பினனர் 1985ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை நான்கு இயக்கக் கூட்டமைப்பின் தலைவாகள்  சந்தித்தனர்.

பிரபாகரன், பத்மநாபா, சிறிசபாரத்தினம், பாலகுமார் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். அதற்கு இந்தியாவின் ஆதரவு என்றும் உண்டு என்று தெரிவித்த ராஜீவ் காந்தி, தீர்வுக்கான முதல் படியாக இடைக்கால ஏற்பாடொன்றுக்கு இயக்கங்கள் சம்மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“அவ்வாறான இடைக்காலத் தீாவை  ஏற்றுக்கொண்டால் மக்கள் எம்மை நிராகரித்து விடுவார்கள்”  என்று தலைவர்கள் கூறினார்கள்.

“எனினும் இந்தியாவின் சமசர முயற்சிகளுக்கு தடையாக இருக்கமாட்டோம்” என்று தெரிவித்தார்கள்.

அதன்பின்னர் இந்திய அதிகாரிகளுடன் புதுடில்லியில் வைத்து  இயக்கத் தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள்.

இலங்கை அரசு தனது புதிய யோசனை ஒன்றை  இந்தியாவுக்கு அனுப்பியிருந்தது. இந்திய அதிகாரிகள் மூலமாக அந்தயோசனை இயக்கத் தலைவர்களிடம் முன்வைக்கப்பட்டது.

புதிய யோசனை என்று சொல்லப்பட்ட போதும், திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்ட்ட  யோசனைக்கும் அதற்கும் பெரிய வேறுபாடுகள்  இருக்வில்லை.

வடக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணதிற்கும் இரண்டு தனித்தனி சபைகள் அமையும். அது தவிர, கிழக்கு மாகாணத்தில் திருக்கோணமலை நகரம் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் இருக்கும்.

மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் விரும்பினால் பிரிந்து மாவட்ட சபைகளாக செயல்படலாம்.

மாகாண சபைகளும், மாவட்ட சபைகளும் மத்திய அரசின் பூரண கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அதுதான் புதிய யோசனையின் முக்கிய அம்சங்கள்.

நிரகரிப்பு

நான்கு இயக்க கூட்டமைபான ஈழத் தேசிய விடுதலை முன்னணி ( ENLF) அந்த யோசனையை நிரகரித்தது.

இலங்கை இரு தேசிய இனங்கள் உள்ளன. அவையிரண்டும் தனித் தனியாகப் பிரிந்து இரு நாடுகளாக அமையும் தகுதி கொண்டவை.  அதன் அடிப்படையில் முன்வைக்கப்படும் யோசனைகள் பற்றியே எம்மால் விவாதிக்க முடியும்.

வேறு யோசனைகளை ஆராய முடியாது என்று   நான்கு இயக்கக் கூட்டமைப்பு தலைவாகள் கூறிவிட்டனார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின்  புதிய யோசனைகளைக் குறித்து ஒரு அறிக்கையாகச் சமர்ப்பித்தது.

வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைத்தல், உள்ளுர் சட்டமும் ஒழுங்கும், நிலக்குடியேற்றம் தொடர்பான கருத்துக்களை கூறிய கூட்டணி மாநில சபை தொடர்பான விட்டுக் கொடுக்கமுடியாத கொள்கைகள் கொள்கைகள் சிலவற்றையும் குறிப்பிட்டிருந்தது.

புளொட் அமைப்பு தனியாக ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. புதிய யோசனைக்கு  திருத்தங்கள்கூறி சுவிற்சர்லாந்து முறையிலான சமஷ்டித்திட்டத்தை சார்ந்த யோசனையை இந்தியாவிடம் சமர்ப்பித்தது.

பகாமாஸ் மாநாடு

தமிழர் விடுதலைக் கூட்டணியால்  சமர்பிக்கப்பட்ட அறிக்கையைவிட ஏனைய  இயக்கங்களின் நிலைப்பாடும், யோசனைகளும் கடுமையாக இருந்தன.

அதேவேளை பொதுநலவாய நாடுகளின் மாநாடு பகாமாஸில் நடைபெறவிருந்தது. அம்மாநாட்டில் வைத்து ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுடன் ராஜீவ் காந்தி இலங்கை பிரச்சனை பற்றி பேசுவதாக இருந்தது.

எனவே பகாமாஸ் மாநாட்டுக்கு கூட்டணியின் அறிக்கையையும், அதற்கான திருத்தத்தையும் ராஜீவ் காந்தி எடுத்துச்சொல்வார் என்று ரொமேஷ் பண்டாரி கூறினார்.

அரசின் யோசனைகளையோ கூட்டணியின் திருத்தைதையோ தாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நான்கு இயக்க கூட்டமைப்புத் தலைவாகள் கூறிவிட்டார்கள்.

புலிகளின் அறிக்கை: “தமிழீழத்தை  தற்கொலைக்கு ஒப்பானது”  வெளிச்சக்திகளை நம்பி  போராடவில்லை. புலிகள் வெளியிட்ட அறிக்கை

 

பகாமாஸ் மாநாடு குறித்தும் இடைகால தீாவை ஏற்குமாறு இந்தியா வலியுறுத்தியது தொடர்பாகவும் புலிகள் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் முக்கியமானவை.

அதனைக் கீழே தருகிறேன்.

“நாம் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து  இடைக்காலத் தீர்வை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் போராட்டத்தையும் தொடரலாம் என்று  இந்தியா எமக்கு  ஆலோசனை கூறலாம். இது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை நாம் அறிவோம்.

தமிழீழப் போராட்டத்தை எம்மால் கைவிட முடியாது. ஆனால் இந்தியாவின் நல்லுறவை  முறித்துக்கொள்ள நாம் விரும்பவில்லை.

இடைக்காலத் தீர்வு என்ற பொறியிலிருந்து இந்தியாவின் நல்லுறவை  முறிக்காமல்  தப்பித்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.

பேச்சுவார்தைகளில் இருந்து ஒதுங்குவதே அறிவுடமை. அற்ப  ஆசைககளுக்காக பெறியில் வீழ்பவர் விழட்டும்.

 எமது இலட்சியத்துக்காக எந்த எதிர்விளைவு ஏற்பட்டபோதும் அதனைத் தாங்கி எமது வழியில் நடப்பதே சிறந்தது.

அமெரிக்கா போன்ற  ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஊடுருவலையும், பேரினவாத சிறிலங்கா இந்தியாவின் தெற்கில் அதன் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இல்லாமல் இருக்கவும் தமிழீழ் உருவாகுவதே  சிறந்ததாகும்.

இவ்வுண்மையை ஏற்றுக்கொண்டு இந்தியா எமது       மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும.

அமையபோகும் தமிழீழம்  இந்தியாவுக்கு நட்புக்கரம் நீட்டி அதற்கு உறுதுணையாக அமையும். அதன் பாதுகாப்புக்கு பலமாக அமையும். தமிழ் மக்களும், அவர்களது தமிழீழமும்  இந்தியாவால் புறக்கணிக்க முடியாதவை. அது மாத்திமல்ல, ஒன்றிலிருந்து ஒன்று அவற்றின் நலன்கள் பிரிக்க முடிக்காதவை.

இந்தியவின் நட்பு எமது போராட்டத்துடன் ஒன்றிப் போனது. ஆயினும் அந்த நட்பை இழந்து போயினும், நாம் நமது மக்களுக்காக, நமது மண்ணில் தொடர்ந்து போராடத்தான் போகிறோம்.

எமது தலைவர் பிரபாகரன்  கூறியது போல, தமிழீழம் அமையத்தான் போகிறது. அதனை உலகத்தில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

எந்த வெளிச் சக்திகளையும் நம்பி எமது போராட்டத்தை  ஆரம்பிக்கவில்லை. எமது இலச்சியத்தை அடையும் வரை போராடிக்கொண்டே இருப்போம். (ஆதாரம்- விடுதலைப் புலிகள். ஜனவரி. 1986)

இதுதான் தமது பத்திரிகை மூலமாக புலிகள் அமைப்பினர் தமிழ் மக்களுக்கு தெரிவித்த செய்தியாகும்,

ராஜீவின் நிலைப்பாடு

திம்புப் பேச்சுகள் முறிவடைந்தமை குறித்தும், இலங்கை அரசின் புதிய யோசனைகள் குறித்தும்  இந்திய பிரதமர் ராஜீவ்  தெரிவித்த கருத்துக்களும் முக்கியமானவை.

குவைத் நாட்டிலிருந்து வெளிவரும்  “அராப் டைம்ஸ்”, அல்பெசயாஷா பத்திரிகைகளுக்கு ராஜீவ் காந்தி ஒரு பேட்டி வழங்கியிருந்தார். அதில்  தனது கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.

அதன் விபரங்களை வரும் வாரம் தருகிறேன்.

தொடர்ந்து வரும்…

-எழுதுவது அற்புதன்-

சென்னையில்..அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைப்பு!!: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 49)

Share.
Leave A Reply

Exit mobile version