* 3ம் நாளாக 300 பகுதிகள் துண்டிப்பு
* மீட்பு பணியில் ராணுவம், கடற்படை
* உணவு, குடிநீர், மின்சாரம் இன்றி தவிப்பு
* நிவாரணம் கிடைக்காமல் மக்கள் மறியல்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 165 ஏரிகள் உடைந்து ஊருக்குள் புகுந்ததால், தென், வட சென்னையில் 30 லட்சம் மக்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாகியுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் உணவு, குடிநீர், மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும், மீட்பு பணிகள் மந்தமாக நடப்பதால், மக்கள் தவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதில் சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகள் நிரம்பி வழிந்தன.

அதில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகமாக இருந்ததால் 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அடையாறு ஆற்றின் கொள்ளவை விட அதிகமாக நீர் திறந்து விடப்படுவதாலும், ஆற்றின் ஓரமாக ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதாலும், ஏரியில் இருந்து சிறு குழங்கள், சிறிய ஏரிகளுக்கு செல்லும் நீர் தடங்கள் ஆக்கிரமிப்பாலும்,

ஏரிகள், குளங்கள் குடியிருப்புகளாக மாறியதாலும் திறந்து விடப்பட்ட தண்ணீர் சென்னை அடுத்த தாம்பரம், முடிச்சூர், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், மணப்பாக்கம், ராமாபுரம், ஈக்காடுதாங்கல், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு ஆகிய இடங்களில் ஆற்று ஓரங்களில் உள்ள பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. அதில் அதிகப்பட்சமாக தாம்பரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் பல லட்சம் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன.

வேளச்சேரி நாராயணபுரம் ஏரி நேற்று முன்தினம் அதிகாலை ஆக்கிரமிப்பாளர்களால் உடைக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கரணை, வேளச்சேரி, ராம்நகர், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், கண்ணகிநகர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகள் தண்ணீரில் மிதந்தன.

அதேபோல, வேளச்சேரி தாம்பரம் சாலையும் துண்டிக்கப்பட்டது. இதனால் சென்னை புறநகர் பகுதிகள் சென்னையுடன் துண்டிக்கப்பட்டன.

செம்மஞ்சேரி ஏரியும் உடைந்ததால், இந்தப் பகுதியில் தண்ணீர் அதிகரித்து, அடுக்குமாடி குடியிருப்புகளில் கார்பார்க்கிங் மற்றும் முதல் தளம் வரை தண்ணீரில் மிதந்தது. பல வீடுகள் மூழ்கின. கார்கள், இரு சக்கர வாகனங்கள் மூழ்கின.

இதனால் பொதுமக்கள் மொட்டை மாடியிலும், 2வது தளத்தில் அடுத்தவர்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் 10 ஏரிகள் உடைந்தன.

சென்னை அடுத்த பல்லாவரம் பெரிய ஏரி 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மாடம்பாக்கம் ஏரி 180 ஏக்கர் பரப்பளவும், ராஜகீழ்பாக்கம் ஏரி 105 ஏக்கரும், வீரராகவன் ஏரி 60 ஏக்கர் பரப்பளவும் கொண்டது.

இந்த 4 ஏரிகளும் ஆக்கிரமிப்பாளர்களால் நேற்று முன்தினம் உடைக்கப்பட்டன. இதனால் தம்பரம், சேலையூர், பல்லாவரம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகள் தண்ணீரில் மிதந்தன. ஆவடியில், கவரப்பாளையம் ஏரி உடைந்தது. செங்கல்பட்டு அருகில் உள்ள 15 ஏரிகள் உடைந்தன.

இவ்வாறு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் சுமார் பெரியதும், சிறியதுமான 165 ஏரிகள் உடைந்தன. இந்த ஏரிகளில் கடந்த 4 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. மாறாக ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு, லாரிகள் செல்வதற்காக கரையை உடைத்து சாலைகள் அமைத்ததால் தற்போது தண்ணீர் பெருகியதும் ஊருக்குள் புகுந்து விட்டது.

கடந்த 4 ஆண்டுகளில் ஒரு முறையாவது ஏரியை தூர் வாரியிந்தால், இதுபோன்று பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்காது. வீடுகளில் தேங்கியிருக்கும் தண்ணீர் ஆறுகளில் தேங்கியிருக்கும்.
பூண்டி ஏரி திறந்து விடப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் புழல், பொன்னேரி, மணலி ஆகிய இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் நகருக்குள் தண்ணீர் புகுந்தது.

அருகில் உள்ள கிராமங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. ஏற்கனவே வட சென்னையில் ஆர்.கே.நகர், கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, புளியந்தோப்பு, வில்லிவாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய நீர் இன்னும் வெளியேறவில்லை. இதனால் மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.

அதேநேரத்தில் கூவம் ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கோயம்பேடு, சூளைமேடு ஆகிய பகுதிகளிலும் ஆற்றின் ஏரமாக தண்ணீர் புகுந்தது.

இதனால் அங்கிருந்த மக்கள் நேற்று முன்தினம் இரவே வெளியேற்றப்பட்டனர். இப்போது 3 மாவட்டங்களில் ஏரிகள் உடைப்பால் சுமார் 300 இடங்களில் வசிக்கும் 30 லட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளனர்.

அதில் பல ஆயிரம் பேர் அரசு பள்ளிகளிலும், திருமண மண்டபங்களிலும், சமூக நலக் கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் வெள்ளம் வடியும் என்று காத்திருக்கின்றனர்.

வெளியில் செல்ல முடியாததாலும், வெளியில் சென்றால் தங்குவதற்கு இடம் இல்லாததாலும் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர். வெள்ளம் உள்ள பகுதிகளில் தண்ணீர் வடியாததால், கடந்த 3 நாட்களாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இருளில் அவர்கள் தவித்து வருகின்றனர். செல்போன் வெளிச்சத்தில் கூட அவர்களால் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் படகு மூலமாகவும், விமானம் மூலமாகவும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பெரிய அளவில் மீட்பு பணியில் ஈடுபடவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் மீட்பு பணி 10 சதவீதம் கூட நடைபெறவில்லை. இதனால், மக்கள் உணவு இன்றியும், குடிநீர், மின்சாரம் இன்றியும் தவித்து வருகின்றனர். மேலும், மழைநீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால், தேங்கியிருக்கும் நீர் நாற்றம் அடிக்கத் தொடங்கிவிட்டது.

உடனடியாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு உடனடியாக புறநகர் பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும்.

அதிகமான படகுகளை அனுப்ப வேண்டும். மீனவர்களின் படகுகளை வாங்கி மீட்பு பணியில் ஈடுபட்டால்தான் பல லட்சம் மக்களை காப்பாற்ற முடியும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிவாரணம் கிடைக்கவில்லை என்று பல இடங்களில் மக்கள் சாலை மறியல் செய்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version