மகிந்த அரசாங்கம் இருந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு, மகிந்தவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிக்கொண்டு  “தமிழீழம்” கேட்ட  அனைத்து  புலம்பெயர் அமைப்புகளின்  (உலகத் தமிழர் பேரவை, ஊர் பேரவை, பூகோள பேரவை , மூவுலக தமிழர் பேரவை, பிரித்தானிய பேரவை, சுவிஸ் பேரவை.. என  ஒவ்வொரு நாட்டிலும் 1000க்கு மேற்பட்ட அமைப்புகள் உண்டு) தலைவர்களும், பிரதிநிதிகளும் தமிழீழ  கோரிக்கையை கைவிட்டு மைத்திரி, சம்பந்தன், ரணில்  தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் ஒற்றையாட்சியை   அங்கீகரித்துகொண்டு  நாட்டில் காலடி  பதிக்கவுள்ளார்கள்  என்பதை அறியத்தருகிறோம்.

இவர்களை  மகிந்த நாட்டுக்குள் வரவிடாமல் தடுத்து வைத்திருந்ததால்தான்    “தமிழீழம்”  கேட்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது.

ஏற்கனவே பல அமைப்புகளின் தலைவர்கள் இரகசியமாக இலங்கைக்கு பயணித்து, ஊர் சுற்றிப் பார்த்துக்கொண்டு, வெளிநாடுகளில் தமிழர்களிடம்  சேர்த்த பணங்களை  இலங்கை வங்கிகளில் வைப்பு செய்துவிட்டு,  அரசாங்க தரப்பினருடன் கைகுலுக்கிவிட்டு வந்துவிட்டனர்.

இப்போ மகிந்த ஆட்சியில் தடைசெய்யப்பட்டிருந்த  உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் அவர்களும் மைதிரியை பார்க்க நாட்டுக்கு போகிறாராம்….  (இவாகள் துரோகிகள் அல்ல..)

புலிகள் அழிந்த பின்பு,   உலகத் தமிழர் பேரவை அமைப்பினர்தான் புலம்பெயர் தமிழர்களை பிரதிநித்துவம் செய்யும் ஓர் அமைப்பாக    தங்களை தாங்களே  அறிமுகம்  செய்துகொண்டு ஊடகங்களில் பரப்புரை நடத்திக்கொண்டிருந்தவர்கள்.

இந்த  அமைப்பினர்களை (தலைவரை) நாட்டுக்கு  அழைப்பதன்  மூலம்  தமிழீழ கோரிக்கையை புலம்பெயர் தமிழர்கள் கைவிட்டு விட்டார்கள் என்பதை  உலகுக்கு  பறைசாற்ற  இலங்கை  அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இலங்கையரசின்  இந்த இராஜதந்திர நகர்வுகளை வெளிநாட்டிலிருந்து  தமிழீழம்  கேட்பவர்கள் புரிந்துகொள்வார்களா??

உலகத் தமிழர் பேரவையானது  ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களையும்  பிரதிநித்துவப்படுத்துகிறதா??

இதே அந்த செய்தி…

உலகத் தமிழர் பேரவை அருட்தந்தை இமானுவேல் இலங்கை வருவதில் சட்டசிக்கல்

mangala-samaraweera_0உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் இலங்கைக்கு வருவதற்கு சட்டரீதியான சிக்கல் காணப்படுவதால் அவருக்கு சட்டரீதியான நிவாரணமொன்றைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தடைசெய்யப்பட்ட உலகத் தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் இலங்கைக்கு வரமுயற்சிப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தார்.

பிரிக்கப்படாத ஒன்றிணைந்த இலங்கைக்கு ஆதரவு வழங்கும் எந்தவொரு நபரும் இலங்கைக்கு வந்துசெல்ல முடியும். அருட்தந்தை இமானுவேல் இலங்கை வருவதற்கு சட்டச்சிக்கல் உள்ளது.

எனவே அவருக்கு சட்டரீதியான நிவாரண மொன்றைப் பெற்றுக்கொடுப்பது பற்றி அரசு கவனம் செலுத்தியுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் எந்தவொரு இலங்கையரும் நாடு பிரிக்கப்படக்கூடாது, ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தால் இலங்கைக்கு வந்து செல்ல முடியும். கடந்த அரசாங்கத்தால் புலம்பெயர்ந்து வாழும் நபர்களும் அமைப்புக்களும் தடை செய்யப்பட்டிருந்தன.

புலி எனக் கூறி தடைசெய்யப்பட்டவர்களில் உயிரிழந்து ஐந்து ஆறு வருடங்கள் கடந்தவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்தத் தடையானது அரசியல் தேவைக்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இவ்வாறான நிலையில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் நபர்களின் உண்மையான நிலைப்பாடு மற்றும் அவர்களின் தற்போதைய நிலை என்பவற்றை ஆராய்ந்து தடைகளை நீக்குவது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாகவும் கூறினார்.

“தமிழீழ” த்தை  கைவிட்டு இலங்கை அரசுடன் கைகோர்க்கும்  உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேலுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் கொடிபிடிப்பார்களா??

Share.
Leave A Reply

Exit mobile version