பாரீஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களிடம் இஸ்லாமிய நபர் ஒருவர் தன்னை கட்டியணைக்குமாறு கேட்டுள்ளார்.

பாரீஸில் கடந்த 13ஆம் திகதி 6 இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 129 பேர் பலியாகினர்.

இதில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பிரான்சில் உள்ள குடியரசு சதுக்கத்தில் நடைபெற்றது, அதில் மக்கள் தங்களது மலர்கொத்துகளை வைத்துவிட்டு சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழிப்பதையில் நின்றுகொண்டிருந்த நபர் தனது கண்களை கட்டிக்கொண்டு, ”நான் ஒரு இஸ்லாமியனாக இருப்பதனால் என்னை தீவிரவாதி என கூறுகின்றனர். ஆனால், நான் உங்களை நம்புகிறேன். நீங்களும் என்னை நம்பினால், என்னை கட்டியணையுங்கள்” என்று கேட்டுள்ளார்.

இதனை கவனித்த அஞ்சலி செலுத்த வந்த மக்கள், ஒருவர் பின் ஒருவராக சென்று அவரை கட்டியணைத்து ஆரத்தழுவியுள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை கட்டியணைத்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன், மேலும் இதன் மூலம் ஒரு செய்தியையும் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

நான் ஒரு இஸ்லாமியர் தான், ஆனால் நான் தீவிரவாதி கிடையாது, மேலும் யாரையும் கொலை செய்யவில்லை.

கடந்த 13ம் திகதி எனது பிறந்தநாள், ஆனால் அந்நாளில் நான் எங்கும் வெளியில் செல்லவில்லை, மேலும் அந்தநாளில் பாரீஸில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக நான் வருந்துகிறேன்.

ஆனால், நான் உங்களிடம் ஒன்று சொல்கிறேன், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக கருதாதீர்கள், சிலர் மற்றவர்களை கொலைசெய்வதற்கு தயாராக இருப்பார்கள், ஆனால் இஸ்லாமியர்கள் அப்படி செய்யமாட்டார்கள், ஏனெனில் இஸ்லாமிய மதத்தில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை இதுவரை 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர், மேலும் 150,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இனவெறிக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அந்நபர் இவ்வாறு செய்துள்ளார், மேலும் ஒரு நபரின் தோற்றத்தையும், மத நம்பிக்கையையும் அடிப்படையாக வைத்து அவர்களை தவறாக கணக்கிடகூடாது என்பதனையே இந்த வீடியோ உணர்த்துகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version