ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிரியா- ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல்வேறு நாடுகளில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டி உள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷ்யாவும் சிரியாவுக்கு ஆதரவாக விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உலக நாடுகளின் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மிக கொடூரமான தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் போஸ்னிய பெண் சம்ரா கெசினோவிச் (வயது 17) இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர். இவரது தோழி சபினா செலிமோவிச்(15) ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டை விட்டு வெளியேறி சிரியா சென்றனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து போராடப் போவதாக அவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றார்கள். ராக்கா நகரை அடைந்த அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்தனர்.
சம்ரா மற்றும் சபினா ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இரு ஜோடிகளும் ஒரே அறையில் வசித்து வந்துள்ளனர். பின்னர் சபினா தனது கணவருடன் வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சிரியாவில் இருந்து தப்பியோட சம்ரா முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை பிடித்த தீவிரவாதிகள் அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இந்த செய்தி ஆஸ்திரியாவைச் சேர்ந்த பல ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரியாவில் இருந்து சிரியா சென்ற 2 சிறுமிகளில் ஒருவர் பலியாகிவிட்டதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் வகையில் வெளியான போஸ்டர்களில் சம்ராவும், சபினாவும் கையில் துப்பாக்கியுடன் தீவிரவாதிகளுடன் காணப்பட்டனர்.
இந்நிலையில் தப்பியோட முயற்சித்த சம்ரா கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் சிரியாவில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக சபினா தெரிவித்துள்ளார்.