வடக்கில் ஈழக் கொடியை ஏற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
சிங்கள கிராமங்களுக்குள் புகுந்து குழந்தைகளையும் கர்ப்பிணி பெண்களையும் கொலை செய்விட்டுதான் பிரபாகரன் அன்று மாவீரர் தினத்தை நினைவு கூரினார் எனவும் தெரிவித்தார்.
காலி நாக்கியாதெனிய விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்
இந்த வாரம் இலங்கைக்கு மிகவும் முக்கியமான வாரமாகும். வட கிழக்கில் பிரபாகரனின் மாவீரர் வாரம் ஆரம்பமானது இந்த வாரமாகும்.
முழு உலகத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கையையும் மக்களையும் பாதுகாத்துக் கொண்டு நான் கடந்த வருடம் வரைக்கும் மாவீரர் தினத்தை கொண்டாடுவதை நிறுத்தியிருந்தேன். இன்று இந்த அரசாங்கத்தின் கீழ் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்து மாவீரர் தினத்தை நினைவு கூருகின்றனர்.
அன்று பிரபாகரன் சிங்கள கிராமங்களுக்குள் நுழைந்து சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பிக்குமார் உட்பட அப்பாவி மக்களை வெட்டி கொலை செய்துவிட்டுதான் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தார். அப்படி இல்லாவிட்டால் மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் குண்டு வெடிக்கவைத்து மக்கள் அழிவை ஏற்படுத்திவிட்டே நினைவு கூர்ந்தார்.
மேலும் நாட்டுக்காக யுத்தக் களத்துக்கு சென்ற இராணுவத்தினரை கொலை செய்வதும் பிரபாகரனின் மாவீரர் வாரத்தை நினைவு கூருதலில் ஓர் அங்கமாகும். என்றாலும் இந்த அரசாங்கம் இதற்கு அனுமதி அளித்திருப்பதானது மிகவும் கவலைக்குரிய நிகழ்வாகும். எங்களால் கைது செய்யப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளை விடுதலை செய்கின்றனர். அத்துடன் நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களை கைது செய்கின்றார்கள்.
நாட்டையும் தேசத்தையும் பாதுகாத்தது தானா எமது இராணுவ வீரர்கள் செய்த குற்றம்? என நான் கேட்க விரும்புகின்றேன். இராணுவத்தினருக்கு பதக்கம் அணிவித்து அவர்களை கௌரவப்படுத்துவதற்கு பதிலாக இந்த அரசாங்கம் அவர்கள் சிறை உணவு சாப்பிடுவதற்கான வழிவகைகளை மேற்கொள்கின்றனர்.
வடக்கில் ஈழக் கொடியை ஏற்றுவற்கே இவர்கள் தயாராகின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அந்த பயங்கரமான நிலைமைக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்.
தற்போது பாராளுமன்றத்தில் வரவு– செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. நாங்கள் மக்களுக்கு வழங்கியிருந்த நிவாரணங்கள் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளன. என்னுடைய அரசினால் மேற்கொள்ளப்பட்ட அதிவேகப் பாதை, கொழும்பு துறைமுகம் போன்ற பாரிய வேலைத் திட்டங்கள் மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தினோம்.
இவை அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. மாறாக இன்று நிதி மோசடி பிரிவொன்றை ஏற்படுத்திக் கொண்டு விசாரணை நடத்துவதையே செய்கின்றனர். பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி நாளாந்தம் ஒரு தலைவரை விசாரணைக்காக அழைத்து வருகின்றனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு பணம் செலுத்தவில்லையென கூறி தற்போது என்னிடமும் விசாரணை நடத்துகின்றனர்.
எங்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி மக்கள் மத்தியில் இருந்து தூரமாக்குவதற்கே இவற்றையெல்லாம் இவர்கள் செய்கின்றனர். எந்தக் குற்றச்சாட்டை சுமத்தினாலும் எந்த விசாரணையை மேற்கொண்டாலும் மக்களிடம் இருந்து எங்களை ஒருபோதும் தூரமாக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே வைராக்கிய அரசியலை கைவிட்டு மக்களுக்கு ஏதேனும் நன்மை பயக்கக் கூடிய வேலைத் திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
வடக்கில் மாவீரர் நாளை சிறிலங்கா காவல்துறை தடுக்க வேண்டும் – என்கிறார் மகிந்த
25-11-2015
“எனது அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றவோ அல்லது அவர்களை நினைவு கூரவோ ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
இந்த வாரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு வடக்கில் புலிக்கொடியை ஏற்ற சில குழுக்கள் தயாராகி வருகின்றன.
இந்த வாரத்தின் முக்கியத்துவத்தை தெற்கில் உள்ள சிலர் மறந்து விட்டார்கள்.
கடந்த காலங்களில் பிரபாகரன் மாவீரர் வாரத்தில்,தெற்கிலோ, சில கிராமங்களிலோ தாக்குதல் நடத்தி வந்தார்.
புலிக்கொடியை ஏற்ற அனுமதித்தால், அது புலிகளுக்கு முன்பாக மண்டியிட்டு நின்றதாகி விடும்.
மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் சில அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்கள் தீவிரவாதத்தைக் கைவிட்டிருந்தார் பிரச்சினையில்லை. அவர்கள் சிறிலங்காவுக்கு வரமுடியும்.
ஆனால், தடை விலக்கப்பட்ட குழுக்கள் இன்னமும் தனி நாட்டுக்கு அழுத்தம் கொடுக்கின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.