ராஜீவின் பேட்டி: குவைத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திஜியின் பேட்டி வெளியாகியிருந்து. அப்பேட்டியில் ராஜீவ் காந்தி இலங்கை அரசின் போக்கு மீதும் அதிதிருப்தி தெரிவித்திருந்தார்.

“பேட்டியின் விபரம் இதுதான். இலங்கையில் வன்செயல்கள் தமிழ் தீவிரவாதப் பிரிவினரால் தூண்டிவிடப்பட்டாலும், இலங்கை ஆயிதப்படையினரின்  நம்பகமற்ற தன்மையே உண்மையான பிரச்சனையாக இருக்கிறது” என்றார் ராஜீவ்.

“ஆயுதப் படைகளின் வன்செயல்களை ஜே.ஆர். மறுத்திருக்கிறாரே?   என்று குறுக்கிட்டுக் கேட்டார் நிருபர். அதற்கு ராஜிவ் சொன்னார்: “சில சம்பவங்களைதான் அவர் மறுத்திருக்கிறார். ஆனாலும் உலகம் பூராகவுள்ள வெகுஜன தொடர்பு சாதனங்கள் தெரிவிக்கும் செய்திகள் இலங்கை அரசு கூறுவது முற்றிலும் முரணாகவே உள்ளன.

இத்தகைய நம்பிக்கையீன இடைவெளி நிச்சியமாக அகற்றப்படவேண்டும்” என்றார் ராஜீவ்

rajivu-ganthi-4
ராஜீவ் காந்தி சொன்ன கருத்துக்களில் முக்கியமான பகுதிகள் இவை:

” இலங்கை ஜனாதிபதி புதுடெல்லிக்கு வந்திருந்து போது தீர்வு தொடர்பான அடிப்படையொன்றை வகுத்திருந்தோம்.

இது இலங்கை அரச தரப்பினரும் தமிழர் தரப்பினரும் சேர்ந்து பேசித் தீர்மானிக்க வேண்டிய விடயம் என்பதால் அவற்றை எழுத்தில் வடிக்காமல் விட்டோம்.

பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்கவேண்டுமானால் பேச்சுக்கு ஆரம்ப திட்டமாக அமைய கூடிய நகல் திட்டமொன்று அவசியம்.”

இரண்டாவதாக, இலங்கை அரசின் ஆயுதபடைகளது நம்பகதன்மையை நிலைநிறுத்த ஏதாவது செய்தாக வேண்டும். இந்த இரண்டுமில்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது

இதனை இலங்கை அரசின் தூதுக்குழுத் தலைவர் எச்.டபிள்யூ.ஜெயவர்தனாவிடம் நான் வலியுறுத்தியிருந்தினேன்” என்று கூறியிருந்தார் ராஜீவ்.

” புலிகள் இயக்க ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தை ஏன் நாடு கடத்தினீர்கள்?” என்று ராஜீவ்விடம் கேட்கப்பட்டது.

அதற்கு ராஜீவ் சொன்ன பதில்: இலங்கைப் பிரஜையாகவோ, இந்திய பிரஜையாகவே இல்லாத இருவர் தொடர்பாக நாம் பெரும் சர்ச்சைகளை எதிர்நோக்கினோம். அதனால் நடவடிக்கை அவசியம் எனக்கருதினோம்”.

அன்ரன் பாலசிங்கம் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர். ரெலோ சார்பில் திம்பு பேச்சில் கலந்துகொண்ட சத்தியேந்திராவும் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றிருந்தவர். அதனால்தான் ராஜீவ் காந்தி அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தற்போது திரு.அன்ரன் பாலசிங்கமும், அவரது பாரியாரும் வெளிநாட்டுக் குடியுரிமையை வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

“இலங்கை இனப்பிரச்சனையில் இரு தரப்புக்கும் கௌரவம் அளிக்கக்கூடிய வகையிலான தீர்வொன்றை காண்பதுதான் இந்தியாவின் நோக்கம். அதற்காகவே இந்தியா உழைத்துக் கொண்டிருக்கிறது” என்றும் தனது பேட்டியில் சொல்லியிருந்தார் ராஜீவ்காந்தி.

வினோதமான விளம்பரம்

இக் காலகட்டத்தில், அதாவது 1985 செப்படம்பர் மாதமளவில் ஒரு பத்திரிகை விளம்பரம் பலரது கவனத்தை இழுத்த்து.

சிங்கள பத்திரிகைகளில் வெளிவந்த அந்த விளம்பர வாசகம் இதுதான்:

“எங்களுக்கு சில நல்லவர்கள் தேவை அவர்கள் விவேகம் மிக்கவர்களாகவும், திடகாத்திமுடையவர்களாகவும், தேசப்பற்று மற்றும் தலைமைத்துவ ஆற்றல் உடையவர்களாகவும் இருந்தால் வாருங்கள். எம்முடன் இணைய வாருங்கள்”

விளம்பர வாசகத்தோடு இராணுவத்தினரின் சின்னமும் காணப்பட்டது.

பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் என்பதில் இலங்கை அரசும் நம்பிக்கை கொண்டிருந்தமைக்கு அந்த விளம்பரமும் ஒரு அத்தாட்சி.

தமிழ் நாட்டில் கொந்தளிப்பு

1985 செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற எழுச்சிகள் பற்றி குறிப்பிட்டேயாகவேண்டும்

1985 செப்டம்பர் 24ம் திகதி தமிழ்நாடு மாநிலத்திலும், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தமிழக மாநில அரசும், பாண்டிசேரி யூனியன் பிரதேச அரசும் முன்னின்று பூரண கர்த்தால் நடத்த ஒத்துழைத்தன.

தமிழக முதலமைச்சர் எம.ஜி.ஆர் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் 2ஆயிரம் தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனா.

இந்திரா காங்கிரஸ் கட்சியினர் மெரினா கடற்கரையில் காந்தி சிலையருகே உண்ணாவிரதம் இருந்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஹர்த்தாலில் கலந்து கொள்ளவில்லை.

தி.மு.க தலைமையில் செயல்பட்டுவந்த தமிழீழ ஆதரவாளர் அமைப்பு சற்றே தீவரமாக்கச் செயற்படத் தொடங்கிய நிலையில், எம்.ஜி.ஆர் நடத்திய போராட்டம்தான் பூரண ஹர்த்தால்.

தி.மு.க.வை இலங்கைத் தமிழர் விடயத்தில் தன்னை மிஞ்சாத வகையில் வைத்துக்கொள்ளவே எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பியிருந்தார்.

எம.ஜி.ஆர். நடத்திய பூரண ஹர்த்தால் மாநில அரசே முன்னின்று நடத்திய காரியம். பஸ்கள் ஓடவில்லை. ரயில்கள் ஓடவில்லை, அரச அலுவலகங்கள் இயங்கவில்லை. சுருக்கமாக சொல்வதாயின் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்றவை அனைத்தும் ஸ்தம்பித்தன.

அதனைவிட பெரிய ஒரு போராட்டத்தை தி.மு.கவால் நடத்த முடியாது என்று எம.ஜி.ஆருக்கு தெரியும்.

எம.ஜி.ஆர் மேற்கொண்ட இன்னுமொரு நடவடிக்கையும் குறிப்பிடவேண்டியது.

தமிழ்நாடு மாநில அரசின் ஊழியர்கள் இலங்கை தமிழர்களுக்கு நிதி கொடுக்கவேண்டும் என்று கூறினார் எம.ஜி.ஆர். அதற்கு முன்னோடியாக தனது சார்பாக இரண்டாயிரம் ரூபாவை வழங்கி கொடி விற்பனைய ஆரம்பித்து வைத்தார்.

தமிழக தலைமை செயலகத்தில் பெரிய விழாவாக கொடி விற்பனை நிகழ்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுமார் 10இலச்சம் தமிழக அரசு ஊழியர்கள் தமது ஒரு நாள் சம்பளத்தை இலங்கை தமிழர்களுக்காக முன்வந்தனர்.

தமிழக அரசின் தலைமைச் செயளாளர் அந்த செய்தியை மேடையில் அறிவித்தபோது எம.ஜி.ஆர் உண்மையாகவே உணர்ச்சி வசப்பட்டார்.

தனது நாற்காலியைவிட்டு எழுந்து வந்து மைக்கைப் பிடித்த எம.ஜி.ஆர் ” அண்ணா நாமம் வாழ்க” என்று மூன்று தடவை கூறினார்.

1985 செப்டம்பர் மாதம் 24ம் திகதி உண்ணாவிரதம் நடந்த்து என்று கூறினேன் அல்லவா??

சென்னையில் செங்கல்பட்டு என்ணும் பகுதியிலும் உண்ணாவிரதம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

உண்ணவிரதத்திற்கு தலைமை தாங்கியவர் செல்வி ஜெயலலிதா. அப்போது அவர் அ.தி.மு.க கொள்கை பரப்பும் செயலாளர்.

தென்னிந்திய திரைப்பட நடிகர்களும் உண்ணாவிரதம் நடத்தினார்கள். இலச்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

சென்னை நகரில் மட்டும் 65 இடங்களில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் நெஞ்சை உலுக்கக் கூடியது.

முத்து என்னும் முதியவருக்கு 75வயது எட்டு பிள்ளைகள். மெரினா கடற்கரைக்கு சென்ற முத்து தனது உடலெங்கும் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டார்.

“தமிழக அரசே முதலைக் கண்ணீர் வடிக்காதே” என்று கூறிக்கொண்டே தன்னை பற்றவைத்து கொண்டார்.

வேறு சிலரும் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர்.

யாழில் உண்ணாவிரதம்

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வெலிக்கடை சிறையில் இருந்த தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யுமாறு கோரியே உண்ணாவிரத போராட்டம் வடக்கில் ஆரம்பித்தது.

1985 ஆகஸ்ட் 27ம் திகதி முதல் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.

யாழ்.குடாநாட்டில் பல கிராமங்களில் பொதுமக்கள் பங்குகொள்ளும் உண்ணாவிரதங்கள் நடத்தப்பட்டன. உண்ணாவிரப் போராட்டத்திற்கான கோரிக்கை இரத்தினச் சுருக்கமானது. ஆனால் உரமானது. அது இதுதான்:

” விசாரணை செய், அல்லது விடுதலை செய்”

18 மாத காலத்திற்கும் மேலாக தமிழ் இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில், விசாரணையில்லாமல் தடுத்துவைத்ததை கண்டித்தே மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

ஜே.ஆர். அரசு உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு மதிப்பளிக்க தயாராக இருக்கவில்லை. ஆனாலும் சிறையில் உள்ள இளைஞர்களை அவர்களது பெற்றோர்கள் இருவாரங்களுக்கு ஒரு முறை பார்வையிடலாம் என்று அனுமதித்த்து.

அப்போது வெளிகடைச் சிறையில் பெண்கள் உட்பட 197 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பேராசிரியர் சிவத்தம்பி அப்போது யாழ். பிரஜைகள் குழுவின் தலைவராக இருந்தார். யாழ்-பிரஜைகள் குழுவினர் வெலிக்கடை சிறையில் உள்ள கைதிகளை பார்வையிடவும் அரசு அனுமதி வழங்கியிருந்த்து.

செப்டம்பர் மாதம் 24ம் திகதி யாழ் நகரில் பல்கலைகழக மாணவர்கள் மாபெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள்.

யாழ்பாண அரச செயலக கொடிக்கம்பத்தில் கறுப்புகொடி ஏற்றினார்கள்.

மழை,வானம் இடிந்த்துபோல் கொட்டியது. கொட்டும் மழையிலும் ஊர்வலமும் ஆர்ப்பாட்டம்மும் நடந்தன.

செப்டம்பர் 26ம் திகதி முதல் யாழ்குடாநாட்டில் யாழ்பல்கலைகழக மாணவர்களால் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து எட்டு நாட்கள் கிராமம் கிரம்மாகச் சென்றனர்.

சிறையிலுள்ள இளைஞர்களை விடுதலை செய்யும் போராட்ட நடவடிக்கை என்ற போதிலும், அரசுக்கு எதிரான உணர்வுகளை வளர்த்துவிடும் வகையில் அந்தப்போராட்டங்கள் அமைந்தன.

இரவில் தாம் தங்கியிருக்கும் கிராமங்களில் கவியரங்கு, வில்லுப்பாட்டு என்று பல்வேறு நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்தினார்கள்.


சென்னையில் கடத்தல்
காந்திய இயக்க தலைவராக இருந்தவர் ச.அ.டேவிட். புளொட் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர். பனாகொடை, வெலிக்கடை, மட்டக்களப்பு சிறைகளில் வைக்கப்பட்டிருந்தவர்.

மட்டகளப்பு சிறையுடைப்பின் பின்னர் சென்னை சென்றுவிட்டார் டேவிட். அவரை டேவிட் ஜயா என்றுதான் அழைப்பார்கள்.

சென்னையில் அண்ணா நகரில்தான் டேவிட் ஜயா குடியிருந்தார்.

02-08-1985 அன்று இரவு பத்துமணிக்கு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த டேவிட் ஜயாவுக்கு குறுக்கே ஒரு வேன் வந்த்து நின்று வழிமறித்த்து.

டேவிட் ஜயா சுதாகரிப்பதற்கிடையில் நான்கு இளைஞர்கள் அவரை குண்டாக தூக்கி வேனில் போட்டுக்கொண்டு பறந்தனர்.

பின்னர் வேனில் இருந்து ஒரு காருக்குள் மாற்றப்பட்டார். கார் சற்று தூரம் சென்றதும் கார் சாரதி ஆசனத்தில் இருந்தவர் கேட்டார்.
“யாரைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்??”

டேவிட் ஜயாவை அமுக்கி பிடித்திருந்தவர் சொன்னார் “டேவிட் ஜயாவை” சாரதி ஆசனத்தில் இருந்தவர் சொன்னார் “வசந்தனைத்தானே” பிடிக்கச் சொன்னது.மற்றவர் சொன்னார் வசந்தன் வரவில்லை. அதுதான் இவரைப் பிடித்தோம்.

சிறிது தூரம் சென்றதும் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியில் காரை நிறுத்தி டேவிட் ஜயாவை தள்ளிவிட்டு, கார் பறந்துவிட்டது. டேவிட் ஐயாவுக்கு ஆபத்து ஒன்றுமில்லை.

டேவிட் ஐயாவை கடத்திச் சென்றது புளொட் அமைப்பினர். இது புளொட் உள் இயக்கமோதலின் ஒரு கட்டம்.

தோழர்.சந்ததியாரோடு டேவிட் ஐயா

வசந்தன் என்று குறிப்பிடப்பட்டது சந்த்தியாரை.சந்த்தியாரும் டேவிட் ஐயாவும் நல்ல ஒட்டு. இருவரும் சேர்ந்து வருவார்கள். சந்ததியார் டேவிட் ஐயாவீட்டில் தங்கவரலாம் என்று காத்திருந்தனர். அவர் வரவில்லை. டேவிட் மாட்டினார்.

புளொட் அமைப்பில் முக்கியமானவராக இருந்த வசந்தனுக்கும்,புளொட் தலைவர் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் பிரச்சனை.

பிரச்சனை வளர்ந்து சந்த்தியாரை தீர்த்துக்கட்டும் நோக்கத்தோடு தேடும் அளவுக்கு சென்றது.

பின்னர் சந்த்தியார் புளெட் அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

சந்ததியார் தொடர்பாக முன்னரும் குறிப்பிட்டிருந்தேன்.

இளைஞர் பேரவையில் தீவிர உறுப்பினர். அல்பிரட் துரையப்பா கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டு வழக்கு ஜோடிக்கப்பட்டவர்.
இளைஞர் பேரவையின் தீவிரம் போதாது என்று. அதிலிருந்து பிரிந்து “தமிழ் இளைஞர் அணி” தலைவராக இருந்தவர். வவுனியாவில் காந்திய இயக்க வேலைகளில் ஈடுபட்டவர்.


அநுராவின் பேச்சு

1985 செப்டம்பரில் எதிர்க்கட்சி தலைவர் அநுரா பண்டாரநாயக்கா.

முல்கிரிகலை என்னும் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றினார் அநுராபண்டாரநாயக்கா.

பேசியதில் முக்கால்வீதம் இனவாத விஷசம். அந்த பேச்சிலிருந்து ஒரு பகுதி.

” ஜே.வி.பி.க்கு தடைவிதித்த அரசாங்கம் தமிழர்விடுதலைக் கூட்டனிக்கு ஏன் தடைவித்திக்கவில்லை?

தமிழர்கள் இன்று இந்தியாவில் இருந்துகொண்டு, இந்த நாட்டை துண்ணடா திட்டமிடுகின்றனர்.

இன்று இந்த நாட்டின் முக்காற் பங்கை தமிழாகள் பிடித்துவிட்டனர். மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயல்கிறது.

இன்று வடக்கில் தமிழர் ஆட்சியே நடைபெறுகிறது. கிழக்கில் மட்டுமென்ன, அங்கும் தமிழர் ஆட்சியே வேரூன்றி நிற்கிறது.

1977ம் ஆண்டு ஆட்சி ஒப்படைக்கப்படும்போது யாழ்பாணப் பகுதியில் 25 ஆயிரம் சிங்களவர்களும், மன்னர், வவுனியா பகுதிகளில் 40ஆயிரம் சிங்களவர்களும்,சேருவில், தெஹிவத்த பகுதிகளில் 20 ஆயிரம் சிங்களவரும் வாழந்து வந்தனர்.

எனினும், தற்போது அவர்கள் அனைவரும் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநெச்சியில் குறி

1985 செப்படம்டபர் மாதத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் மீது மீண்டும் ஒரு முறைகுறிவைக்கப்பட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் வைத்த குறி தப்பியதையும், தாக்குதல் தோல்வியில் முடிவடைந்ததையும் முன்னர் விபரித்திருந்தேன்.

இப்போது குறிவைத்த்து தமிழீழ இராணுவம்.(TEA) தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் தலைமையில் ஒரு வித்தியாசமான திட்டம் தீட்டப்பட்டது. அதன்விபரங்களை வரும் வாரங்களில் தருகிறோன்.

(தொடர்ந்து வரும்.
எழுதுவது அற்புதன்)

(முன்னைய தொடர்களை பார்வைியிட  இங்கே அழுத்தவும்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை)

Share.
Leave A Reply

Exit mobile version