இலங்கையிலிருந்து கடல்வழியாக ஆஸ்ரேலியவிற்க்கு தனது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் புகலிடம் கோரி வந்த தமிழ் அகதி ஒருவர் நாவுரு தடுப்பு முகாமில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியில் இருந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
30 வயதான குறித்த தமிழர் 2012 ஆம் ஆண்டு நடுப் பகுதியில் கடல் வழியாக படகு மூலம் ஆஸ்ரேலியவிற்க்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வந்த இவர்களை ஆஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவின் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைத்து அகதி அந்தஸ்த்து வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டது.
ஆனாலும் சில மாதங்களின் பின்னர் ஆஸ்ரேலியவிற்க்கு வெளியே உள்ள நாவுரு தீவு தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டு அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் குறித்த இந்த குடும்பத்தினருக்கு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து விரக்தி அடைந்த தமிழ் அகதி தன்னையும் தனது குடும்பத்தையும் விடுதலை செய்ய வேண்டும் அல்லது தனது உயிரை மாத்துக் கொள்வேன் எனத் தெரிவித்து உயர்ந்த மரத்தின் மீது ஏறியிருந்து 9 மணித்தியாலங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த தமிழ் அகதி போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரது ஐந்து வயது மகளான சஜிந்தனா மரத்தின் கீழ் நின்று அழுது கொண்டிருப்பதையும் நாவுரு தீவில் இருந்து கிடைக்கும் ஒளிப்படங்களூடாக அறிய முடிகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணியளவில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறியதை அடுத்து அவர் மரத்தில் இருந்து இறங்கி வந்தார்.
அதைத் தொடர்ந்து அவ்விடத்திற்க்கு விரைந்து வருகை தந்த நாவுரு தீவு காவல்துறையினர் அவரை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்து வைத்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.