கிளிநொச்சியில் புலமைப்பரிசில் போட்டியில் சித்தியடைந்த மாணவருக்கான பாராட்டு விழாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனைக் கட்டாயம் அழைக்க வேண்டும் என பாடசாலையின் அதிபர் வற்புறுத்தப்பட்டுள்ளார்.

அப்படி அவரை அழைக்காது விட்டால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் எனவும் அதிபர் மிரட்டப்பட்டுள்ளார். இதனால் தான் மிகப்பெரிய மனநெருக்கடிக்குள்ளாகியிருப்பதாக குறித்த பாடசாலையின் அதிபர் கவலை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் ஆரம்பப்பிரிவுப் பாடசாலையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழாவுக்கான ஏற்பாட்டுக்கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

அதனையடுத்து, நடக்கும் பாராட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சிறிதரனை பிரதம விருந்தினராக அழைக்க வேண்டும்.

இந்த மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய பாரளுமன்ற உறுப்பினரை நீங்கள் மதிப்பளித்துக் கௌரவிக்க வேண்டும்.

அப்படிச் செய்யவில்லை என்றால் அதற்கான விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருங்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சில பாடசாலை அதிபர்களுக்கு நேர்ந்த கதியை நீங்களும் பெற வேண்டிவரும் என பாராளுமன்ற உறுப்பினரின் நெருங்கிய சகாவும் கிளிநொச்சிப் பிரதேச அமைப்பாளருமான அ. வேழமாலிகிதன் தலைமையிலான அணியினர் அதிபரை எச்சரித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து அவசரமாகப் பெற்றோரை அழைத்துச் சந்தித்த அதிபர் இந்த நிகழ்வுக்கு எப்படியும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை பிரதம விருந்தினராக அழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பெற்றோர், புலமைப்பரிசில் பரீட்சைக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சைக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக அன்பழகன் பரீட்சைத் தாள்களை ஏற்பாடு செய்து தந்திருந்ததுடன், பாடசாலையின் வளர்ச்சியில் புதிய கட்டிடங்களின் நிர்மாணிப்புக்கு உதவிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உள்பட எந்த அரசியல்வாதிகளும் கடந்த காலங்களில் இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்றதில்லை.

ஆகவே இந்த நிகழ்வை அரசியல் நிகழ்வாக மாற்ற வேண்டாம் என்றனர்.

எனினும் தனக்குச் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதால் தன்னுடைய நிலைமையைப் புரிந்து கொண்டு நிகழ்வுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அதிபர் கேட்டுள்ளார்.

இதனையடுத்து இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியின் ஆரம்பப்பாடசாலையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றபோது பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கலந்து கொண்டார். எனினும் இதனை ஆட்சேபித்து ஒரு தொகுதி பெற்றார் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

அமைதியாக நல்ல வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பாடசாலையில் இப்பொழுது அரசியல் நுழைந்து விட்டது. இனி இந்தப் பாடசாலையும் இரண்டு பட்டுப்போகப்போகிறது என்று கவலை தெரிவிக்கின்றனர் பாடசாலைச் சமூகத்தினர்.

யாரும் தாங்கள் விரும்பிய அரசியலை பாடசாலைகளுக்கு அப்பால் தாராளமாகச் செய்யலாம். கல்வியிலும் மாணவர்களின் எதிர்காலத்திலும் அதைச் செய்வது நல்லதல்ல.

இதை அனைவரும் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பெற்றோர்களில் ஒரு தொகுதியினர் தெரிவித்தனர்.

(கிளிநொச்சியிலிருந்து கமலேஸ்)

 

Share.
Leave A Reply

Exit mobile version