இஸ்லாமாபாத்: தலீபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூர் உயிருடன் உள்ளதாக ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.

ஆப்கான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தவன் முல்லா அக்தர் மன்சூர். முல்லா உமர் மரணத்தை தொடர்ந்து இவர் பதவிக்கு வந்தபின்னர் தலீபான் இயக்கத்தில் குழப்பம் நிலவி வந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகர் அருகே  குச்லாக்  என்ற இடத்தில் ஆப்கான் தலீபான் தளபதிகள் கூட்டம், கடந்த 2-ந் தேதி நடந்தபோது மோதல் வெடித்து, துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் முல்லா அக்தர் மன்சூர் படுகாயம் அடைந்தான் என தகவல்கள் வெளியாகின.

ஆனால் அவன் மரணம் அடைந்து விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகின்றன. தலீபான் இயக்கத்தின் தற்காலிக தலைவனாக அக்குன் ஜாதா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அக்குன் ஜாதா அந்த இயக்கத்தின் துணைத்தலைவராக இருந்து வந்தவன். ஆனால் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்படவில்லை என கூறும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

16 நிமிடம் ஓடக்கூடிய அந்த ஆடியோவில், முல்லா அக்தர் மன்சூர் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் நபர், ’ நான் உயிரோடுதான் உள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காகத்தான் நான் இந்த ஆடியோவை ஒலிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளேன்’ என கூறி உள்ளார்.

’நான் யாருடனும் சண்டையிடவில்லை. எந்த கூட்டமும் நடக்கவில்லை. நான் குச்லாக் செல்லவே இல்லை. இதெல்லாம் பகைவர்களின் பொய் பிரசாரம்தான்’ எனவும் தெரிவித்து உள்ளான்.

முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டானா, இல்லையா என்பதில் முரண்பட்ட தகவல்கள் நிலவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version