சென்னையை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. வெள்ளத்தால் உணவுகள் மற்றும் உடைகள் இன்றி தவிக்கும் மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர், நடிகைகளும் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளையும், மீட்பு பணிகளையும் செய்து வருகின்றனர். நடிகர்கள் விஷால், கார்த்தி ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று உணவு பொட்டலங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொடுத்தும் உதவி செய்து வருகின்றனர்.

இதேபோல், நடிகர் சித்தார்த்தும், ஆர்.ஜே. பாலாஜியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு நேரடியாக சென்று உணவு, உடைகளை வழங்கினர்.

மேலும், சமூக வலைத்தளங்கள் மூலம் நிவாரண உதவிகள் கேட்டு, பெற்று நேரடியாக சென்று அவற்றை வாங்கி பொதுமக்களுக்கு கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

நடிகர் மயில்சாமி தனது வீட்டில் உணவு தயார்செய்து, அதை ஒரு படகின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று அளித்தார். காமெடி நடிகர் இமான் அண்ணாச்சியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் புரிந்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று உதவிகளை வழங்கினார்.

வீடிழந்து தவிக்கும் மக்கள் தங்குவதற்காகவும் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்களை சேகரித்து வைக்கவும், நடிகர்கள் ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் தங்களது திருமண மண்டபங்களை இலவசமாக கொடுத்துள்ளனர்.

இவ்வாறாக வெள்ளத்தில் தவிக்கும் சென்னை மக்களுக்காக உதவி புரியும் நடிகர்களின் சேவை மனப்பான்மை அவர்களை நிஜத்திலும் ஹீரோக்களாக உயர்த்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version