பருவக் காதல் என்பது என்னதான் அந்த வயதில் வரும் எதிர்பாலின கவர்ச்சி என்று கூறினாலும், அந்த வயதில் அதை உண்மைக்காதல் என்றே நினைக்கத் தோன்றும். தமது எதிர்பாலாரை கவர எடுக்கும் சின்ன சின்ன முயற்சிகளும் அழகான பொக்கிஷங்களாக இருக்கும்.
இன்றும் அந்த சின்ன சின்ன சந்தோஷங்கள் நம் ஞாபகச் செடிகளில் பூக்களாய் மணம் வீசும் வரங்கள் பெற்றவை. ஆனால், இவையெல்லாம் ஒரு பக்கமிருக்க, பருவக் காதலானது அதன் எல்லைகளைத் தாண்டி பாரதூரமான பல விளைவுகளுக்கு காரணமாக அமைகின்றது.
குறிப்பாக, பல இளம் பெண்களின் வாழ்க்கைக்கு பாதியிலேயே முற்றுப்புள்ளி வைக்கும் துர்ப்பாக்கிய நிலைமையையும் உருவாக்கக்கூடியது.
அத்தகைய சம்பவங்கள் தொடர்பாக கடந்த காலங்களிலும் நாம் குற்றம் பகுதியில் சுட்டிக்காட்டியிருந்தோம். அந்தவகையில் இவ்வாரம் ‘குற்றம்’ பகுதியில் இடம்பெறுவது பருவக் காதலினால் ஓர் இளம் பெண்ணின் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பற்றியதாகும்.
ஆம், அவள் தான் தாரகா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அநுராதபுர பிரதேசத்தில் மிகவும் வறிய குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாக பிறந்தவள். தந்தை சுனில். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூலி வேலை செய்யும் சாதாரண தொழிலாளி. தாய் தமயந்தி.
தந்தை அன்றாடம் கிடைக்கும் கூலி வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வந்தார். ஆனால், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் ஒரு நாளை கொண்டு செல்வதென்பதே பெரும் போராட்டமாகவிருந்தது.
அதுமட்டுமின்றி, தந்தை சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதி மதுபானக் கடைக்காரர்களின் வங்கிக் கணக்குகளையே நிரப்பியது. எனவே பணத்தை காரணம் காட்டி வீட்டுக்குள் அடிக்கடி சண்டை மூண்டது. இதனால் தமயந்தி வேலைக்கு செல்ல தீர்மானித்தாள். அதன்படி அநுராதபுரத்திலுள்ள பிரபல புடவைக்கடையொன்றுக்கு விற்பனையாளராக சென்றாள்.
அதன்பின், குடும்பத்தின் பொருளாதார நிலைமை ஓரளவுக்கு தீர்ந்த போதிலும் தமயந்தி தொடர்பாக மிகவும் மோசமான செய்திகளே குடும்பத்தவரின் காதுகளுக்கு எட்டின.
சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் சீமெந்து, செங்கற்களுடன் போராடி வேலைபார்த்துவிட்டு வீட்டுக்கு செல்லும் பெரும்பாலான சந்தர்ப்பங்களிலெல்லாம் நண்பர்கள் தமயந்தி தொடர்பாக வெவ்வேறு விதமான கதைகளை சுனிலுக்கு கூறினார்கள்.
தமயந்திக்கும் புடவைக்கடையில் வேலை பார்க்கும் பிறிதொரு ஆணுக்குமிடையில் இரகசிய தொடர்புகள் இருப்பதாக அவர்கள் கூறி கேலி செய்தார்கள். எனவே, இது நண்பர்கள் மத்தியில் சுனிலுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியது.
வாழ்க்கையே வெறுமையானது போல் தனிமையில் புலம்பத் தொடங்கினான். அதுமட்டுமின்றி, தமயந்தியுடன் முரண்படவும் ஆரம்பித்தான்.
“பிள்ளைகளுக்காக சரி நீ ஒழுங்காக இரு. உனக்கென்று குடும்பம், கணவன், பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்பதை மறந்து விடாதே. அப்படி இல்லையென்றால் நீ என்ன செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள்” என்று பலமுறை தமயந்தியின் தவறை சுட்டிக்காட்டி அறிவுரை வழங்கினான். எனினும், தமயந்தி அதை சிறிதும் பொருட்படுத்தவில்லை.
இதனால் வீட்டில் நாளுக்கு நாள் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே சென்றது. இதன் விளைவாக சுனில் மூத்த மகனை பிக்குகள் கல்வி பயிலும் பிரிவெனவுவில் தங்கி கல்வி பயில அனுப்பி வைத்தார்.
இதனால் குடும்பத்துக்குள் இருந்து வந்த பிரச்சினைகளுடன் மகள் தாரகா தனிமரமானாள். அதுமட்டுமின்றி, சில நாட்களில் தாரகாபருவமடைந்தாள்.
தமயந்தி வீட்டில் இருக்கும் காலம் குறைவு என்பதால் தாரகாவை பார்த்துக்கொள்ளும் மிக பெரிய பொறுப்பு வேறொரு வீட்டில் வசிக்கும் அவளுடைய பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தாரகா பருவமடைந்ததை தொடர்ந்து அவள் உடல் அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட தொடங்கின. அவள் வயதை மீறிய உடல் அமைப்புடன் அழகுடனும் கவர்ச்சியுடனும் காட்சியளித்தாள்.
இதனால் பல இளைஞர்களின் பார்வை தாரகாவை நோக்கியதாகவிருந்தது. எனினும், அவ் இளைஞர்களிடம் மிகுந்த கட்டுக்கோப்புடன் தாரகா நடந்துகொண்டாள்.
ஆயினும், காலவோட்டத்தில் நிலைமை தலைக்கீழாக மாறத் தொடங்கியது. தாரகாவும் சுஜித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்குமிடையில் பருவக் காதல் பற்றிக்கொண்டது.
சுஜித் கல்விப் பொது தராதர சாதாரணதரப்பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுகள் போதாமையால் தாரகாவின் தந்தையுடன் கூலி வேலைகளுக்கு உதவியாக செல்பவன்.
அதுமட்டுமின்றி, தனது பெரும்பாலான இரவுப் பொழுதுகளை மதுபான போத்தல்களுடன் கழிப்பவன்.
எனினும், தாரகா சுஜித்தின் தீய பழக்கவழக்கங்கள் தொடர்பாக எதுவுமே அறிந்திருக்கவில்லை. இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு சிறிது காலப்பகுதியிலேயே தாரகா மிகவும் கண்மூடித்தனமாக சுஜித்தை நம்பினாள்.
தனது பெற்றோரை விட சுஜித் மீது அதிகளவான அன்பையும் நம்பிக்கையையும் வைத்திருந்தாள். சுஜித்தும் அவள் நம்பிக்கைக்குரியவனைப் போலவே நடந்துகொண்டான்.
இதனிடையே, தாரகாவின் தாய் தமயந்தியும் அவளுடன் புடவைக்கடையில் தொழில் பார்க்கும் பிறிதொரு ஆணும் உல்லாசமாக செல்வதை தனது இரு கண்களாலும் கண்டு ஆத்திரமுற்ற சுனில் தமயந்தி வீடு வரும் வரை காத்திருந்தார்.
எனினும், தமயந்தி வீட்டுக்கு வருவதற்கு அஞ்சினாள். அதன் பின்னர் வீட்டுக்கு வரவே இல்லை.
அதன்பிறகு ஒரு வருடம் கழித்து சுனிலும் மறுவிவாகம் செய்துகொண்டார். எனவே, சிற்றன்னை வீட்டுக்கு வர தாரகாவின் நிலைமை இன்னும் மோசமாகியது. சதா தாரகாவை குறை கூறி திட்டிக்கொண்டே இருப்பாள்.
எனவே, சிற்றன்னையின் கொடுமை தாங்க முடியாது தனது பாட்டி தங்கியிருந்த சிறிய வீட்டை நோக்கி தாரகா சென்றாள். பாட்டியும் தனக்கு தெரிந்த சிறு சிறு தொழிலுக்குச் சென்று தன்னால் முடிந்த அளவு தாரகாவை பார்த்துக்கொண்டார்.
அதுமட்டுமின்றி, மகள் தாரகா பாட்டியின் வீட்டுக்கு வந்தவுடன் சுனிலால் தனது இரண்டாவது மனைவியின் பேச்சை மீறி தாரகாவுக்கு எவ்வித உதவியும் செய்யமுடியவில்லை.
மேலும், தாய் தந்தை இருவரும் வெவ்வேறு திசையில் வெவ்வேறு விதமான வாழ்க்கை வாழ்வதால் நண்பர்களின் கேலிகளுக்கும் , கிண்டல்களுக்கும் மத்தியில் தாரகாவால் பாடசாலைக்கும் செல்ல முடியவில்லை.
இதனால் பாடசாலை கல்வியையும் தாரகா இடைநிறுத்தி விட்டு வீட்டில் இருந்தாள். இச்சந்தர்ப்பத்தில் தான் தாரகாவுக்கும் சுஜித்துக்கும் இடையிலான நெருக்கம் இன்னும் அதிகமானது.
சுஜித் பாட்டி வீட்டிலில்லாத பல சந்தர்ப்பங்களில் அடிக்கடி வீட்டுக்கு வந்து போவான். தாரகாவின் செலவுக்கும் சுஜித் பணம் கொடுப்பான். எனினும், இதை பாட்டி சிறிதும் விரும்பவில்லை.
பலமுறை இது தொடர்பாக தாரகாவை கண்டித்தார். எனினும், பருவக் காதல் தாரகாவின் கண்களை மறைத்தது. பாட்டி சொல்வதை அவள் சிறிதும் பொருட்படுத்தவில்லை.. இறுதியில் பாட்டியை ஏமாற்றிவிட்டு சுஜித்துடன் வீட்டை விட்டுச் சென்றுவிட்டாள்.
இது பற்றி தாரகா கூறுகையில், “அப்போது எனக்கு 15 வயது இருக்கும். அப்பாவிடமிருந்து எனக்கு எந்த உதவியும் கிடைக்காததால் சுஜித் அண்ணா எனக்கு செலவுக்கு பணம் தருவார். அடிக்கடி வீட்டுக்கும் வந்து போவார்.
இதை பாட்டி எப்படியோ அறிந்து கொண்டார். அதன்பின் பலமுறை இந்த தொடர்பை துண்டித்து விடுமாறு அவர் எனக்கு அறிவுரை வழங்கினார்.
இருந்தும், அவர் சொல்வதை நான் சிறிதும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.. சுஜித் அண்ணா தான் எனக்கு உலகம் என்று நினைத்து அவருடன் சென்றேன். எனினும் அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.
நாங்கள் இருவரும் அநுராதபுரத்திலிருந்து புறப்பட்டு கட்டுநாயக்க பிரதேசத்திற்கு சென்றோம். அங்கு சுஜித் அண்ணாவின் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினோம். பின் நாங்கள் அங்குள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்கு செல்ல தயாராகினோம்.
அப்போது சுஜித் அண்ணாவுக்கு அங்கு உடனடியாகவே வேலை கிடைத்தது. எனினும், நான் 18 வயதை பூர்த்தியடையாததால் எனக்கு அங்கு வேலைக்கு செல்வது சிரமமாகவிருந்தது.
எனவே, மருதானையிலுள்ள சுஜித் அண்ணாவின் நண்பர் ஒருவர் சில போலி ஆவணங்களை தயாரித்து அங்கு என்னை வேலைக்கு சேர்த்தார். நான் வயதை விட தோற்றத்தில் பெரியவளாய் இருப்பதால் ஆடைத்தொழிற்சாலையிலுள்ளவர்களும் அந்த ஆவணங்கள் தொடர்பாக எந்தவித கேள்வியும் கேட்கவில்லை.
அதன்பின் எந்தவித பிரச்சினையுமின்றி இருவரும் அங்கு தொழில் பார்த்தோம். வாடகைக்கு சிறிய வீடு ஒன்றையும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றோம்.
எனினும், அப்போது எனக்கு 18 வயதை பூர்த்தியடையவில்லை என்பதால் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை. எனவே, எனக்கு 18 வயதாகியவுடன் திருமணம் செய்துகொள்வோம் என்ற முடிவில் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்தோம்.
கால சக்கரம் விரைவாக உருண்டோடியது. அப்போது தான் நான் சுஜித் அண்ணாவின் உண்மையான சுயரூபத்தை அறிந்துகொண்டேன். எனது தந்தையை போலவே சுஜித் அண்ணாவும் வேலை விட்டு வீட்டுக்கு வரும்போது குடித்து விட்டே வருவார்.
சிறுவயது முதலே எனது வாழ்க்கையில் நான் சந்தோஷமாக இருந்த நாட்கள் மிகக் குறைவு. எனினும், சுஜித் அண்ணாவை பார்த்த பிறகு தான் சிறிது நாட்கள் சந்தோஷமாக எனது பொழுதை கழித்தேன். ஆயினும், அதுவும் எனக்கு நிரந்தரமில்லை என்பதை நான் போகப் போக உணர்ந்துகொண்டேன்.
ஒரு நாள் நான்கு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு சுஜித் அண்ணா வீட்டுக்கு வந்தார். அனைவருமே குடித்தே இருந்தார்கள். அது மட்டுமின்றி, அவர்கள் கைகளிலும் மதுபான போத்தல்கள் இருந்தன.
எனவே, சுஜித் அண்ணாவை தனியாக அழைத்துச்சென்று அவர்களை இங்கிருந்து போகுமாறு முரண்பட்டேன். இருப்பினும், அவர் கேட்கவில்லை. மாறாக என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அதற்கு பிறகு நான் எதுவுமே கூறவில்லை. அவர்கள் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து மதுபான போத்தல்களுடன் ஆனந்தம் கொண்டார்கள். அதன்பின் சுஜித் அண்ணாவின் நண்பர்களில் ஒருவர் அங்கிருந்து வெளியே வந்து என்னுடன் தவறான முறையில் நடந்துகொண்டார்.
நான் “சுஜித் அண்ணா, சுஜித் அண்ணா” என்று பலமாக கத்தினேன். எனினும், அவர் அதை சிறிதும் பொருட்படுத்தவில்லை. அதன்பின் வந்த அனைவருமே என்னிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டார்கள். அப்போது கூட சுஜித் அண்ணா யாரோ ஒருவர் போல் அலட்சியமாக இருந்தார்.
இறுதியில்அந்தப் பாவிகளிடம் என் வாழ்க்கையே சீரழிந்து போய்விட்டது. பொழுது விடிய அவர்கள் அனைவருமே எதுவுமே நடக்காதது போல் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். ஆனால், என்னுடைய வாழ்க்கைக்கு இனி விடியலே இல்லை என்ற நிலை உருவாகியது.
நண்பர்களிடம் என் மானத்தை விற்றவன், மருதானை, புறக்கோட்டை போன்ற இடங்களிலுள்ள விபசார விடுதிகளுக்கும் என்னை அனுப்பி பணம் சம்பாதித்து உல்லாசமாக இருப்பான்.
எனினும், வெகு நாட்கள் செல்லும் முன்னர் இவ்விடயம் பொலிஸாருக்கு தெரியவர சுஜித் உட்பட அன்றைய தினம் வீட்டுக்கு வந்த நண்பர்கள் நான்கு பேரும் பொலிஸாரின் பிடியில் சிக்கினார்கள்.
எனக்கு குறைந்த வயது என்ற காரணத்தினால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். பெண்பிள்ளைகளின் வாழ்வை சீரழிப்பவர்கள் நிச்சயம் செய்த பாவத்துக்கு என்றாவது ஒரு நாள் தண்டனையை அனுபவிப்பார்கள் என்பதே உண்மை.
தாரகா இனி என்ன தான் அழுதாலும் அவளுடைய இளமைப்பருவம் மீண்டும் அவளுக்கு கிடைக்கப்போவதில்லை.. ஆனால், எல்லோரையும் போல வாழ அவளுக்கும் ஆசை தான்.
தாரகாவின் குடும்பச் சூழல், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மை போன்ற காரணங்களினால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டாள் என்றே கூற வேண்டும். அதுமட்டுமின்றி,. தாரகாவின் வாழ்க்கை இன்றைய இளம் சமூகத்தினருக்கும் பெற்றோருக்கும் நிச்சயம் ஒரு பாடமாகவிருக்கும்.
மூலம்: சிங்கள நாளேடு