இலங்கை பாடசாலை மாணவர்கள் 20 பேர் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்தார்.
இதனை தவிர்க்க உயர்தர மாணவர்கள் அனைவருக்கும் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் எனவும் பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதிக்கு முன் அனைத்து மாணவர்களையும் இரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது நாடு பூராகவும் 9 வயதுக்கும் குறைவான எச்.ஐ.வி பாதிப்புள்ளவர்கள் 71 பேர் இனம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும், குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக, உயர்வகுப்பு மாணவர்களுக்கு எச்ஐவி பரிசோதனை
பல்கலைக்கழக மற்றும் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு எச்.ஐ.வி உள்ளிட்ட தொற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எச்.வி.பரவுவதைத் தடுக்க அரசாங்கம் என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர், டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“இந்த ஆண்டில், ஒக்ரோபர் மாதம் வரையான காலப்பகுதியில் எச்ஐவி தொற்றுக்குள்ளான 191 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
2012ஆம் ஆண்டு, 182 பேரும், 2013ஆம் ஆண்டு 196 பேரும், 2014ஆம் ஆண்டு 228 பேரும், எச்ஐவியால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த ஆண்டு ஒக்ரோபர் வரை மொத்தம் 6300 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்படாதவர்கள் மேலும் பலர் இருக்கலாம். சிலர் இதுபற்றிய அறியாதவர்களாக இருக்கலாம். வேறு சிலர் அறிந்திருந்தும் சமூகத்துக்குப் பயந்து வெளிப்படுத்த தயங்கலாம்.
ஒன்பது வயதுக்குட்பட்ட 71 சிறுவர்களும், 10 தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட 7 சிறுவர்களும், 15 வயதுக்கும், 19 வயதுக்கும் இடைப்பட்ட 13 பேரும், எச.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.