யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இன்றைய தினம் 185 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
சாட்சி விசாரணைகளுக்கு இன்று 288 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் H.W. குணதாச குறிப்பிட்டார்.
இன்றைய அமர்வில் 53 புதிய முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ். பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாகவும் இன்று சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன.
எனது மகளை கதறகதற வெள்ளைக் காரில் ஏற்றிச் சென்றனர்.
காரில் கொண்டு செல்லப்படும்போது எனது மகளின் கதறலை அப்பிரதேசம் முழுவதும் உணர்ந்திருந்தது.
சின்னக்கடை இராணுவ முகாமின் பொறுப்பாளராகச் செயற்பட்ட டெடிகம என்ற இராணுவ பொறுப்பதிகாரிக்கும் இச் சம்பவத்துடன் நெருங்கி தொடர்பு இருக்கின்றதென தாய் ஒருவர் கண்ணீ ருடன் சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பான
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் இரண்டாவது நாளாக யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே பாஷையூரைச் சேர்ந்த ரீட்டாம்மா என்ற தாயார் சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் சாட்சியமளிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
1996ஆம் ஆண்டு எனது மகளான கொன்ஸியை தாத்தா பாட்டியின் கவனத்தில் விட்டுவிட்டு நான் பணிநிமிர்த்தம் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தேன்.
அக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் பின்வாங்கியிருந்தமையால் இராணுவத்தினர் யாழ்ப்பாண பிரதேசத்திற்கு வருகை தந்திருந்திருந்தனர்.
இச் சந்தர்ப்பத்தில் க.பொ.த. உயர் தர பரீட்சையில் மீண்டும் தோற்றுவதற்காக எனது மகள் தனியார் கல்வி நிலையத்தில் கற்றுக் கொண்டிருந்தார்.
இராணுவத்தினர் முன்னேறிக் கொண்டிருந்தமையால் எனது மகள் எனது தாய் தந்தையர் வெவ்வேறு பிரிவாக சென்று விட்டனர். அதன் பின்னர் ஒரு வழியாக மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புக் கிட்டியது.
எனது மற்றொரு மகளின் கணவர் சின்னக்கடைச் சந்தியில் பேக்கரி நடாத்திக்கொண்டிருந்தார். எனது மகளை மீண்டும் வீட்டுக்குக் கூட்டிச் செல்வதற்காக அங்கு வருமாறு அறிவித்திருந்தார்.
அந்நிலையில் எனது மகள் குறித்த பேக்கரிக்கு வருகை தந்தபோது திடீரென இராணுவத்தினர் சுற்றி வளைத்து சின்னக்கடை பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றுக்குக் கொண்டு சென்றனர். அன்று மாலையிலேயே எனது அம்மாவும் மருமகனும் முகாமுக்குச் சென்று மகளை விட்டு விடுமாறு கோரினர்.
அப்போது அந்த முகாமுக்குப் பொறுப்பாளரான டெடிகம என்ற இராணுவ அதிகாரி ஒவ்வொரு நாளும் கையொப்பம் இடுவதற்காக முகாமுக்கு வரவேண்டும் எனப் பணித்திருந்தார். இதற்கிணங்க அவர் ஒவ்வொரு நாளும் சென்று கையொப்பம் இட்டு வந்தார்.
இந்நிலையில் 1996ஆம் ஆண்டு ஜூலைமாதம் 25 ஆம் திகதி எமது வீட்டுக்கு அருகிலுள்ள தேவாலயத்தில் திருவிழா நடைபெற்றது. அங்கு சென்று விட்டு எனது அம்மா மற்றும் மகள்மார் வீட்டுக்குத் திரும்பினர்.
எனது அப்பா வயதானவர். அவருடன் எனது மகளையும் கர்ப்பிணியாக இருந்த மற்றொரு மகளையும் விட்டு விட்டு எனது தாயாரும் மருமகனும் வெளியில் சென்றனர். அச்சமயத்தில் திடீரென எமது வீட்டு வாயிலில் வெள்ளைக் கார் ஒன்று வருகை தந்திருந்தது.
அதிலிருந்து கறுப்பு உடை மற்றும் துப்பாக்கிகளுடன் நால்வர் வந்து இறங்கினர்.
திடீரென வீட்டுக்குள் நுழைந்து குளித்துக் கொண்டிருந்த கர்ப்பிணியான மகளை அழைத்து அறைக்குள் பூட்டி விட்டு எனது தகப்பனாரை அச்சுறுத்திவிட்டு கொன்ஸியை கதறக் கதற வெ ள்ளைக் காரில் ஏற்றிச் சென்றார்கள்.
காப்பாற்றுங்கள் என கொன்ஸி கதறியதை எமது வீட்டை அண்டிய பிரதேசத்தவர்கள் அனைவருமே அறிவார்கள். எனது அம்மாவும் மருமகனும் வீட்டுக்குத் திரும்பியவுடன் சம்பவத்தை அறிந்து உடனேயே டெடிகம பொறுப்பாகவிருந்த இராணுவ முகாமுக்குச் சென்று கொன்ஸியை ஒப்படைக்குமாறு கோரினோம்.
இருப்பினும் அவர்கள் அதுபற்றி தமக்குத் தெரியாது எனக் கூறிவிட்டனர். அத்துடன் கொன்ஸி கையொப்பம் இடுவதற்கு அதனை அடுத்த தினங்களில் சென்றிருக்காத போதும் குறித்த முகாமைச் சேர்ந்த எந்தவொரு இராணுவத்தினரும் ஏன் வரவில்லையென கேள்வி எழுப்பவேயில்லை. இது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான் சிங்கப்பூரிலிருந்து வந்தவுடன் எனது அம்மா அப்பா இவ்விடயத்தை என்னிடம் கூறினார்கள். மனித உரிமை ஆணைக்குழு, ஐ.சி.ஆர்.சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் நான் முறையிட்டு விட்டேன்.
தற்பொழுது எனது அப்பாவும் அம்மாவும் உயிருடன் இல்லை. நான் மட்டுமே இன்று தனியாக இருக்கின்றேன் என்றார்.